Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்த அண்ணா ஹசாரேவை, யோகா குரு ராம்தேவ் மீது போலீஸை ஏவிவிட்டு அடக்கியதைப் போன்று நசுக்கிவிடலாம் என்று கருதிய மத்திய அரசு, நாடு முழுவதும் ஹசாரேவுக்கு ஆதரவாக திரண்ட மக்கள் சக்தியை பார்த்து மிரண்டு, பணிந்து போய் தற்போது அவமானப்பட்டு நிற்கிறது.

ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை உருவாக்குவதில், ஹசாரே தலைமையிலான குடிமக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்டு, அவர்களுடன் ஆலோசனை நடத்தியது மத்திய அரசு.

ஆனால் இந்த மசோதாவில் ஊழல் செய்யும் பிரதமர் மற்றும் நீதிபதிகளையும் விசாரிக்க ஏதுவாக அவர்களையும், விசாரணை வரம்புக்குள் சேர்க்க வேண்டும் என்று ஹசாரே குழுவினர் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்துவிட்டது.

பிரதமர் மற்றும் நீதிபதிகளுக்கு விலக்கு அளித்து தயாரிக்கப்பட்ட லோக்பால் மசோதாவையே மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

ஆனால் இந்த மசோதா வலுவற்றது என்று கூறிய ஹசாரே, பிரதமர் மற்றும் நீதிபதிகளையும் உள்ளடக்கிய வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வர வலியுறுத்தி, ஆகஸ்ட் 16 ஆம் தேதி (நேற்று) முதல் டெல்லியிலுள்ள ஜெய்பிரகாஷ் நாராயண் பூங்காவில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கப்போவதாக அறிவித்தார்.

ஆனால் ஹசாரேவின் கோரிக்கையையும், அவரது உண்ணாவிரத போராட்டத்தையும் தாம் விரும்பவில்லை என்பதை பிரதமர் மன்மோகன் சிங்கின் சுதந்திர தின உரை உணர்த்தியது. உண்ணாவிரதத்தின் மூலம் ஊழலை ஒழித்து விட முடியாது என்றும், நாடாளுமன்ற ஜனநாயகத்தை மீறக்கூடாது என்றும் அவர் பேசியது, ஹசாரே விடயத்தில் அவரது மனவோட்டம் என்ன என்பதை பட்டவர்த்தனமாகஉணர்த்தியது.

அதே சமயம் ஹசாரேவின் உண்ணாவிரதம் நிச்சயம் நாடு முழுவதும் பற்றிக்கொள்ளும் என்ற அச்சமும் மன்மோகன் சிங் தலைமையிலான அரசுக்கு ஏற்பட்டது.எனவே அதனை தடுக்கவும்,கூடவே ஹசாரேவை கைது செய்து உள்ளே வைத்தால், அதனால் மக்களிடையே எழும் ஆதரவு அல்லது போராட்ட வீச்சு எந்த அளவுக்கு இருக்கும் என்று நாடி பிடித்து பார்க்கவும் திட்டமிட்டது.

இதனால் ஹசாரே ஏற்கமாட்டார் என்று தெரிந்தே,உண்ணாவிரத இடத்தை மாற்றுவது மற்றும் 3 நாட்களுக்கு மட்டுமே உண்ணாவிரதம் இருக்கலாம் என்பது உள்ளிட்ட 6 நிபந்தனைகளை டெல்லி காவல்துறை விதித்தது.

எதிர்பார்த்தபடியே அந்த நிபந்தனைகளை ஏற்க ஹசாரே மறுத்துவிட்டார்.அத்துடன் தடையை மீறி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கப்போவதாகவும் அவர் அறிவித்தார்.

இந்நிலையில் யாருமே எதிர்பார்க்காதவகையில், 144 தடையுத்தரவு அமலில் இல்லாத ஹசாரே வீடு இருக்கும் கிழக்கு டெல்லியின் மயூரா விகாரில் புகுந்து, நேற்று காலை 7.30 மணிக்கே அவரை கைது செய்து அழைத்து சென்றது டெல்லி காவல்துறை.

இது ஹசாரே ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்தது.அவர்கள் ஹசாரேவை ஏற்றி சென்ற வாகனம் முன்னர் அமர்ந்து மறியலில் ஈடுபட, இரண்டு கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 45 நிமிடங்களுக்கு மேலாகி படாதபாடு பட்டது போலீஸ்.

அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஹசாரேவை 7 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட,டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார் ஹசாரே.

சுரேஷ் கல்மாடி, ஆ.ராசா போன்ற ஊழல்வாதிகள் அடைக்கப்பட்டுள்ள திகார் சிறையிலேயே, ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரேவும் அடைக்கப்பட்ட தகவல் பரவியதும் நாடு முழுவதுமே ஹசாரே ஆதரவாளர்கள் மட்டுமல்ல, இளைஞர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் வீதிகளில் இறங்கி மறியல், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் என ஆவேசம் காட்டத் தொடங்கினர்.

மக்களின் இந்த போராட்ட வீச்சை தொலைக்காட்சிகளும் போட்டிபோட்டு ஒளிபரப்ப, நாடு முழுவதும் தங்களுக்கு எதிரான ஒருமித்த கருத்து உருவாவதை பார்த்து மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு மிரண்டு போனது.

போதாதற்கு எதிர்கட்சிகளும் சமீப காலத்தில் இல்லாதவகையில், ஹசாரே கைதை கண்டித்து ஓரணியில் திரண்டு மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்தன.

நாடாளுமன்றம் நடப்பதால் 144 தடையுத்தரவு அமலில் இருக்கும்போது, உண்ணாவிரத போராட்டம் நடத்த எவ்வாறு அனுமதிக்க முடியும்? என்று ஹசாரே கைது செய்யப்பட்டதை நியாயப்படுத்தி வியாக்கியானம் செய்தார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

0 Responses to மத்திய அரசை மண்டியிட வைத்த மக்கள் சக்தி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com