போர்க்குற்றங்கள் தொடர்பாக 'சனல் 4' வெளியிட்ட சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை தான் பார்வையிடவில்லை. அவற்றில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கேள்வியுற்றேன். 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்ற கதையை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்திருக்கின்றார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றிலேயே அண்மையில் விடுதலையான பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்தப் பேட்டியில் அவர் மேலும் முக்கியமாகத் தெரிவித்ததாவது:
நான் அறிந்தவரையில், இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டிருந்த உத்தரவுகள் மற்றும் கடமைகளின் அடிப்படையில் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை மேற்கொள்ள வேண்டிய தேவை அவர்களுக்கு காணப்படவில்லை.
குற்றச்சாட்டுக்கள் இடம்பெற்றதாக இரு சம்பவங்கள் காட்டப்பட்டுள்ளன. மிகப்பெரியளவில் இடம்பெற்ற யுத்தத்தின் போது மேற்படி இரு சம்பவங்களும் இடம்பெற்றிருந்தால் அவை தொடர்பில் தேடியறிய வேண்டியது அவசியம்.
வீடியோ ஒன்றைப் பார்த்தவுடன் குற்றம் புரிந்துள்ளார்கள் என்று கூறி தண்டனை வழங்க முடியாது. யாருக்கு தண்டனை வழங்குவதென்பதையும் நினைத்துப்பார்க்க முடியாது. உண்மையில் இந்த குற்றங்கள் இடம்பெற்றுள்ளனவா? அவை உண்மையானவையா? போலியாகத் தயாரிக்கப்பட்டவையா? என்பது தொடர்பில் கண்டறிய வேண்டும்.
விசாரணைகள், ஆய்வுகளின் மூலம் உண்மை வெளிக்கொணரப்பட வேண்டும். அதன்மூலம் அனைவரதும் சந்தேகங்களுக்கும் தீர்வு காணப்படலாம்.
நாட்டுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இருப்பின், நான் முன்னெடுத்த யுத்தத்துக்கு எதிரான குற்றச்சாட்டாக இருப்பின், அவற்றுக்கு பதிலளித்து நாட்டின் நற்பெயரைப் பாதுகாக்க நான் தயார். ஆனால், நான் அளிக்கும் பதிலைப் புரிந்துகொள்ளக்கூடியவர்களிடமே என்னால் பதிலளிக்க முடியும்.
உதாரணமாக, அரசியல்வாதி ஒருவருக்கோ அல்லது அரச சார்பற்ற நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவருக்கோ இது குறித்து விளக்கமளிப்பதால் அவர்களுக்கு முழுமையான தெளிவு கிடைத்துவிட வாய்ப்பில்லை.
ஆனால், யுத்தம் தொடர்பில் அனுபவமுள்ளவர்களுக்கோ அல்லது யுத்தத்தை முன்னெடுத்த ஜெனரல் ஒருவருக்கோ இது தொடர்பில் விளக்கமளித்தால் அவர் அதனை உடனடியாகப் புரிந்துகொள்ள வாய்ப்புண்டு.
அந்தவகையில், யுத்தம் தொடர்பான விளக்கத்தைப் புரிந்துகொள்ள முடிந்த ஒருவருக்கு பதிலளிக்க எதிர்காலத்தில் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்தால் அது எனக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பு என்று கருதி பதிலளித்து நாட்டினதும் இராணுவத்தினதும் நற்பெயரைப் பாதுகாப்பேன்.
யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நான் எப்பொழுதும் ஒரே கொள்கையிலேயே உள்ளேன். யுத்தக் குற்றங்கள் இடம்பெறாத வகையிலேயே நான் யுத்தத்தை முன்னெடுத்தேன்.
தரையில் நடந்த போரை திட்டமிட்டவன் நான். முன்னெடுத்தவன் நான். நான் அதை முறையாக சர்வதேச விதிமுறைகளுக்கு அமைவாக மனித உரிமை மீறல்கள் இடம்பெறாத வகையில் முக்கியமாக அங்கிருந்த இரண்டரை இலட்சம் தமிழ் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே இந்த யுத்தம் திட்டமிடப்பட்டது, முன்னெடுக்கப்பட்டது.
நாம் அம்மக்களுக்கே முக்கியத்துவம் கொடுத்தோம். அதனால், அங்கிருந்த மக்கள் எவ்வாறு செயற்படுகிறார்கள்?, யுத்தத்தின்போது அவர்கள் எங்கு இருந்தார்கள்?, எங்கு சென்றார்கள்?, அவர்கள் இருந்த இடங்களில் அவர்களுக்கான பாதுகாப்பு காணப்பட்டதா? என்பவை தொடர்பில் மிகவும் சூட்சுமமான முறையில் கண்டறிந்தே யுத்தத்தக்கான திட்டங்கள் வரையப்பட்டன.
அதனால், 40ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்ற கதையை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
இது தவிர, போர்க் குற்றங்கள் இடம்பெற்றுள்ளன என்று சுட்டிக்காட்டப்பட்டால், அவை குறித்து நாம் தேடியறிய வேண்டும். இதற்கு முன்னரும் படையினரால் சில தவறுகள் இடம்பெற்றுள்ளன.
உதாரணத்துக்கு கிருஷாந்தி குமாரசுவாமி விவகாரத்தின் போது, நாம் இராணுவத்தினரைப் பாதுகாக்கச் செல்லவில்லை. அவர்களுக்கான தண்டனைகளைப் பெற்றுக்கொடுத்தோம்.
வடக்கில் மாத்திரமல்ல, தெற்கிலும் இரர்ணுவத்தினர் பிழை செய்த போது அவை தொடர்பில் கண்டறிந்து தண்டனை வழங்கினோம். அதனால் தவறு செய்தவர்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை ஒருபோதும் இல்லை.
இது தவிர, வெறுமனே குற்றச்சாட்டை சுமத்தும் நோக்குடன், இப்படி சூடு நடத்தினார்கள், துஷ்பிரயோகம் செய்தார்கள் என்று கூறித்திரிவதால் மட்டும் சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது.
ஆனால், இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுமாயின், யுத்தத்தை முன்னெடுத்த இரர்ணுவ தளபதி என்ற வகையில், அதற்கான பதிலைக் கொடுத்து, இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட விதம் தொடர்பில் விளக்கமளித்து நாட்டினதும் இராணுவத்தினரதும் நற்பெயரைப் பாதுகாப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க நான் எப்போதும் தயார்.
40ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் | பொன்சேகா
பதிந்தவர்:
தம்பியன்
27 May 2012
0 Responses to 40ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் | பொன்சேகா