பிறக்கப்போகும் 2012 ஆங்கிலப் புத்தாண்டு எம் அனைவருக்கும் சுகவாழ்வையும் சுயமரியாதையுடன் கூடிய அனைத்து வளங்களையும் பெற்றுக்கொண்டு வாழ்வதற்கான விடியலைக் கொண்டுவரட்டும். இவ்வாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தனது புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டுகளில் நாம் அனுபவித்த கொடுமைகளும் சோகங்களும் கணக்கிட முடியாதவை. இயற்கை அனர்த்தங்கள், யுத்த கொடூரங்கள் ஆகியவை எமக்கு ஏற்படுத்திய அழிவுகள் ஏராளமானவை. அவற்றிலிருந்து நாம் விடுபடுவதற்கு வருகின்ற புத்தாண்டு எமக்கு மனத்தெம்பையும் உடல்வலிமையையும் கொடுப்பதாக அமையட்டும்.
சோகங்களை நெஞ்சில் சுமந்துகொண்டு எமது எதிர்கால சந்ததி நலமுடனும் கௌரவத்துடனும் வாழ்வதற்கான விடியலை நோக்கி முன்னேறத் தயாராவதற்கு நாம் ஒவ்வொருவரும் திடசங்கற்பம் பூணவேண்டும். சோகத்தை மட்டும் வெளிப்படுத்துவதால் நாம் எதையும் சாதித்துவிடமுடியாது என்பதை உணர்ந்துகொண்டு, சோகம், கோபம் ஆகியவற்றை ஆக்கபூர்வமான வழியில் திசைதிருப்பி எஞ்சியுள்ள எமது சந்ததியின் சுபீட்சத்திற்காக நாம் அனைவரும் உழைக்க வேண்டிய தருணம் இது.
புதுவருடத்தைக் கொண்டாடும் அனைத்து மக்களுக்கும், குறிபப்hகத் தங்களது பிரச்சினைகளை எடுத்துக்கூறிய மக்களுக்கும், அவற்றிற்கு உரிய நடவடிக்கை எடுத்துதவிய அரசாங்க அதிபர்கள் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகத்தினருக்கும், திணைக்கள உத்தியோகத்தர்களுக்கும், ஊழியர்களுக்கும், கல்விச் சமூகத்தைச் சார்ந்த ஆசிரியர் பெருமக்கள், பேராசிரியர் பெருமக்கள், கல்வித்திணைக்கள உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பாடசாலை சமூகத்தினர், பல்கலைக்கழக ஊழியர்கள், ஆகியோருக்கும், வன்னியில் சேவையாற்றும் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், சிற்றூழியர்கள், அரசசார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த அனைவருக்கும் மற்றும் எமது சக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எனது நன்றிகளையும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வடக்கு-கிழக்கில் உள்ள அனைத்து பிரதேசசபை, நகரசபை ஆகியவற்றின் தவிசாளர்களுக்கும், தலைவர்களுக்கும், உறுப்பினர்களுக்கும், உள்ளுராட்சி அதிகாரசபையின் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் ஊழியர்களுக்கும் குறிப்பாக சுகாதாரத் தொழிலாளர்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.
மன்னார் ஆண்டகை உள்ளிட்ட நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தேவாலயங்களின் அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள் ஆகியோருக்கும் புத்தாண்டை வரவேற்கக் காத்திருக்கும் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்களது மதபோதனையுடனான சமூகப்பணி தொடர்வதற்கு என்னுடைய ஒத்துழைப்பு என்றும் இருக்கும் என்பதையும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.
எமது பத்திரிகை அறிக்கைகளையும் செய்திகளையும் உடனுக்குடன் சமூக அக்கறையுடனும், சமுதாயக் கண்ணோட்டத்துடனும் வெளியிட்டுதவும் அச்சு ஊடகம், இலத்திரனியல் ஊடகத்தினருக்கும் மற்றும் இணையதள ஊடக அன்பர்களுக்கும்;, செய்தியாளர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளையும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
குறைந்தபட்சம் அடுத்த ஆண்டிலாவது சிறையிலிருக்கும் தமிழர்கள் அனைவரும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்படுவார்கள் என்று சிறையிலும் தடுப்பு முகாம்களிலும் வாடுபவர்களின் பெற்றோர்கள், அவர்களின் நெருங்கியோர், கணவன், மனைவி, பிள்ளைகள், நண்பர்கள் போன்றே நானும் எதிர்பார்க்கின்றேன்.
வருகின்ற புத்தாண்டு எமக்குச் சவால்கள் நிறைந்ததாக இருக்கின்ற போதிலும் புதுத்தெம்புடனும், புத்தெழுச்சியுடனும் எதிர்காலத்தின் மீது நம்பிக்கைவைத்து நாம் அவற்றை எதிர்கொள்வதற்குத் தயாராவோம்.
அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.
புத்தாண்டு எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கும் எமது மக்களின் வாழ்வு சிறப்பதற்குமான திறவுகோலாக அமையட்டும்
பதிந்தவர்:
தம்பியன்
01 January 2012
0 Responses to புத்தாண்டு எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கும் எமது மக்களின் வாழ்வு சிறப்பதற்குமான திறவுகோலாக அமையட்டும்