தாய் மண்ணில் உரிமைகள் பறிக்கப்பட்டு பசி, பட்டினி, வறுமை என்ற நிலைக்கு தள்ளப்பட்ட எம் தமிழ் சமூகத்திலுள்ள ஒவ்வொருவரும் இப்புது வருடத்தில், தலை நிமிர்ந்து எமக்கான உரிமைகளுடனும் திடமான ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டுமென கனடியத் தமிழர் தேசிய அவை தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளது.
மேலும், கனேடியத் தமிழர் அபையின் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
தமிழருக்கான உரிமைகளின் மேலான தாக்குதல்களால் தொடர்ந்தும் எங்களை மிகவும் கவலை கொள்ள வைக்கின்ற நிலையிலும் ஒரு சமுதாயமாக நாங்கள் பல போட்டிகளையும் பெருந்தடைகளையும் தாண்டி வந்துள்ளோம்.
விடுதலைக்காகவும் எங்கள் மக்களுக்கான நீதிக்காகவும் அமைதிக்காகவும், தமது விலைமதிக்க முடியாத உயிர்களைத் தியாகம் செய்த ஆயிரக்கணக்கான வீரத் தமிழர்களை நினைத்து நினைவு கூரும் கார்த்திகை மாதத்தில் எமது ஒற்றுமையின் வலிமையை காட்டி நாம் ஒன்றிணைந்தோம்.
அவர்களின் வழிகாட்டலில் எமது மக்களுக்கான நீதியும் நியாயமான தீர்வும் விடிவும் கிடைக்கும் வரை சர்வதேச அரங்கில் அமைதியான வழியில் முன்னெடுப்போம்.
கனடியத் தேசிய அவையினராகிய நாங்கள் சர்வதேசரீதியில் போர்க் குற்றத்திற்குப் பொறுப்பானவர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவும் எமது தாயகத்தில் இனப் படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்களிற்கான நீதி கோரி புலம் பெயர் தமிழ் அமைப்புக்களுடனும் மற்றைய அமைப்புக்களுடனும் இணைந்து புதிய வருடத்தில் தொடர்ந்தும் பரப்புரை செய்வோம்.
அத்துடன் எமது தாயக உறவுகளின் துயர்களை துடைக்கவும் மற்றும் எமது தாயகத்தில் அல்லலுறும் எமது சிறார்களின் துயர் துடைக்கவும் அவர்களின் கல்வி மேம்பாட்டிற்காகவும் தொடர்ந்து உழைப்போம்.
புது வருடத்தில் தாயகத்தில் எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதிலும் கனடாவில் ஒரு வலிமையான துடிப்பான சமூகத்தை கட்டியெழுப்புவதிலும் தொடர்ந்தும் கனடியத் தமிழர் தேசிய அவையானது உங்களுடன் நெருக்கமாக இணைந்து செயற்படுவோம்.
இப்புது வருடத்தில் திடமான ஆரோக்கியத்துடன் தமிழ் மக்கள் வாழ வேண்டும்: கனடியத் தமிழர் தேசிய அவை
பதிந்தவர்:
தம்பியன்
01 January 2012
0 Responses to இப்புது வருடத்தில் திடமான ஆரோக்கியத்துடன் தமிழ் மக்கள் வாழ வேண்டும்: கனடியத் தமிழர் தேசிய அவை