Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாரியதொரு தமிழினப் படுகொலையுடன் முள்ளிவாய்க்காலில் தடுத்து நிறுத்தப்பட்ட தமிழீழ விடுதலைத் தேர் தற்போது முன்நகர ஆரம்பித்துள்ளது. 'தமிழீழம் இல்லையேல் இலங்கைத் தீவில் தமிழினமே இல்லை' என்ற சிங்கள தேசத்தின் கற்றுக்கொடுக்கும் தொடர் பாடம் இந்த விடுதலைத் தேரின் முன்நகர்வை வேகப்படுத்தியுள்ளது.

தேசியக் கூட்டமைப்பின் இலக்குத் தவறிய பயணத்திற்கு எதிராகத் தமிழீழத்தின் மனச்சாட்சிகள் குரல் எழுப்பியதைத் தொடர்ந்து, புலம்பெயர் தேசங்களில் தமிழீழ இலட்சியத்தின்மீது போர் தொடுத்தவர்களும் தற்போது மௌனித்துப் போயுள்ளனர்.

விடுதலை கோரும் ஒரு இனத்தின் ஆன்ம பலத்தின்மீது எந்தச் சக்தியினாலும் சேதத்தை ஏற்படுத்த முடியாது என்பதை மாவீரர் நாளில் மக்கள் தெளிவாகத் தெரிவித்தனர்.

போர்க் களத்தில் மட்டுமல்ல, புலம்பெயர் களத்திலும் விடுதலைப் புலிகளே பலத்தோடு உள்ளார்கள் என்பதை சிங்கள தேசமும் ஒப்புக்கொள்கின்றது. விடுதலைப் புலிகள் மீள் எழுச்சி கொள்கின்றார்கள் என்ற அவலக் குரல்கள் சிங்களத் தலைநகரில் உரத்துக் கேட்கின்றது. தொடர்ந்தும் மிதிபடும் மண்புழுவுக்கும் கொடுக்கு முளைக்கும் என்ற கூர்ப்பியல் நியதியை சிங்கள தேசம் புரிந்து கொள்ள மறுப்பதால், விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சியை தனது பருத்த இராணுவத்தால் தடுத்து நிறுத்தும் மனப்பாலுடன் ஆறுதல் கொள்கின்றது.

விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத இயக்கமாகப் பார்த்த பல நாடுகளும், சிங்கள தேசத்தால் நடாத்தி முடிக்கப்பட்ட அரச பயங்கரவாதத்தை நியாயப்படுத்த முடியாமல் தவிக்கின்றன. மனித நாகரிகம் வளர்ந்த மேற்குலக நாடுகள் ஈழத் தமிழர்களுக்கான நியாயங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளன. சீனாவை அரவணைத்து, இந்தியாவை மிரட்டும் பாணியிலான சிங்கள ஆட்சியாளர்களது நகர்வு மேற்குலகிற்குச் செல்லுபடியாகாத இராஜதந்திரமாகவே உள்ளது. அதனால், ஈழத் தமிழர்களுக்கான நியாயம் கோரும் தளங்கள் விரிவடைந்து செல்ல அனுமதிக்கப்படுகின்றன.

பிரான்சில், தமிழ்த் தேசிய விடுதலைத் தளத்தினால் வெளியிடப்பட்ட முத்திரை, அந்த இடைவெளி சூத்திரத்தின் வெளிப்பாடே. அந்த முத்திரைகளுக்கு பிரான்ஸ்வாழ் தமிழர்கள் வழங்கிய ஆதரவும், ஆர்ப்பரிப்பும் தமிழீழ விடுதலையை அவர்கள் வென்றெடுத்தே ஆவார்கள் என்பதையே உணர்த்தியது.

தேசியத் தலைவரின் படத்துடன் கூடிய முத்திரை ஒன்றுக்காக 100 ஈரோக்கள் கொடுக்கவும் தயாராக, பாரிஸ் - லா சப்பல் கடைத்தெருவெங்கும் அலைந்து திரியும் பல தமிழ் உணர்வாளர்களைப் பார்க்க முடிகின்றது.

முள்ளிவாய்க்கால் வெற்றி மமதையுடன் நிமிர்ந்து மார் தட்டிய சிங்கள ஆட்சியாளர்கள் தற்போது சிறுகச் சிறுக நிம்மதியைத் தொலைத்து வருகின்றார்கள். அவர்களது நம்பிக்கை நட்சத்திரங்களாகக் கருதப்பட்ட தமிழ்ப் புலனாய்வுச் சதியாளர்களால், புலம்பெயர் தமிழ்த் தேசிய எழுச்சியினைத் தடுத்து நிறுத்த முடியாது போனதை அதிர்ச்சியுடன் நோக்குகின்றார்கள்.

புலம்பெயர் தமிழர்களது மீள் எழுச்சியுடன், இறுதி யுத்த காலத்தில் அங்கிருந்து தப்பி, வெளியேறிய விடுதலைப் புலிகள் அணி திரள்வதை சிங்கள தேசத்தினால் தடுத்து நிறுத்த முடியாதுள்ளது. சிங்கள தேசத்திற்கான புலனாய்வாளர்களாகப் பயிற்றுவிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ள சில முன்னாள் விடுதலைப் போராளிகளால் மாவீரர் தினத்தைக்கூட சிதைக்க முடியாத போது, மீள் எழுச்சி கொள்ளும் புலம்பெயர் தமிழர்களை எப்படி அடக்குவது? என்பதே தற்போது சிங்கள தேசம் விடை தேடும் கருப் பொருளாக உள்ளது.

தமிழீழம் கனவல்ல என்ற யதார்த்தத்துடன் யாரும் மோத முடியாது என்பதை சிங்கள தேசம் மட்டுமல்ல, சிங்கள தேசத்தின் தமிழ்ப் புலனாய்வாளாகளும் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்! முள்ளிவாய்க்காலில் இருந்து முன்நகர ஆரம்பித்திருக்கும் தமிழீழ விடுதலைத் தேரை எந்தக் கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது.

1 Response to முள்ளிவாய்க்காலிலிருந்து முன்நகர ஆரம்பித்துள்ள தமிழீழ விடுதலைத் தேர்!

  1. மனித குலத்தால் ஜீரணிக்க முடியாத‌ இவைகளை எல்லாம் இலட்சியம் செய்யாமல் வெளிநாடுகளில் சொகுசாக வாழ்ந்து கொண்டு உங்கள் சுயலாபத்திற்காக நாடு கடந்த தமிழீழமொன்றை ஆரம்பித்து மீண்டும் தமிழ் மக்களை பலி கொடுக்க தயாராகிக் கொண்டிருக்கும் உங்கள் புதிய புலித் தலைமை தமிழினத்தின் விடிவிற்காக‌ எதையும் சாதிக்கப் போவதில்லை என்பது உறுதியானதொன்றாகும்…

    அன்று அந்த இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு வித்திட்ட‌ சர்வாதிகாரி ஹிட்லரின் இனவெறி பாசிச‌ சிந்தனைகளுக்கு பின்னால் அணி திரண்ட‌ ஜேர்மன் மக்கள் எப்படி கோடிக் கணக்கில் அழிந்தொழிந்து போனார்களோ அதே போல இன்று வெளி நாடுகளில் மீண்டும் எழும் இந்த நாடு கடந்த தமிழ் ஈழத்தின் பின்னால் புலம் பெயர்ந்த தமிழர்கள் அணி திரள முற்பட்டால் இங்கே இலங்கைத் தீவில் எஞ்சியிருக்கும் எமது பரிதாபத்திற்குரிய தமிழினத்தின் தலைவிதி மீண்டும் ஒரு அழிவுப்பாதையை நோக்கி பயணிக்கப் போவது நிட்சயமே…

    இந்த இலங்கை இந்திய இளைஞர்களைக் கொண்டு இலங்கையில் ஒரு போர் சூழல் உருவாக்கப்படும் பட்சத்தில் அந்தப் போரிலே சுட்டு வீழ்த்தப்படும் ஒரு இளைய சமுதாயமொன்றின் படங்களுக்கு வெளி நாடுகளில் குத்து விளக்கேற்றி குங்குமப் பொட்டு வைத்து தொட்டுக் கும்பிட்டு கையோடு கலக்சனுக்கும் காசு போடும் அந்த கேடு கெட்ட கலாச்சாரமும் மீண்டும் மீண்டும் களைகட்டும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை…

    அப்படியொரு யுத்த சூழ்நிலை இலங்கையில் உருவாக்கப்பட்டு அதனால் அல்லல்படப் போகும் பாவப்பட்ட நமது தமிழ் சமுதாயமோ.. ஒரு கொட்டும் மழையிலே கட்டிய கந்தல் துணியுடன் குடிசை வாசல்களில் குந்தியிருந்து புரண்டோடும் ஒரு ஆற்று வெள்ளத்தில் கலந்தோடும் தமது சொந்த பந்தங்களின் இரத்தத்தை பார்த்து ஒப்பாரி வைத்தழும்போது அவர்களுக்கு இந்த தமிழீழ வியாபாரிகளோ அல்லது அவர்களுடன் கூட்டு வியாபாரம் நடத்தும் இந்த தமிழக‌ அரசியல்வாதிகளோ உதவிக்கு வரப் போவதில்லை என்பது உறுதி.. ஆனால் அவர்களை எந்த சந்தர்ப்பத்திலும் விட்டு விலகாது என்றும் அவர்களுடன் கலந்து வாழும் மனித நேயம் கொண்ட மனிதர்கள் மட்டும் இலங்கை அரசாங்கத்தின் மூலமோ அல்லது சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மூலமோ அவர்களுக்கு ஒரு மறுவாழ்வு கிடைக்க இதய சுத்தியுடன் இயங்கிக் கொண்டுதான் இருப்பார்கள்.. தங்கள் தமிழீழ வியாபாரத்திற்கு இடையூறாக இருக்கும் இப்படிப்பட்ட‌ மனிதத் தலைவர்களை தங்கள் இணையத் தளங்களில் “தேசத் துரோகிகள்” என்று பட்டம் சூட்டி இந்த தமிழீழ‌ வியாபாரிகள் தினமும் திட்டித் தீர்த்துக் கொண்டுதான் இருப்பார்கள்…

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com