ஜெனீவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையைக் கொண்டு இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க முடியாது இதற்கு ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையில் ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட்டால் மட்டுமே பொருளாதாரத் தடை விதிக்க முடியும் என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் இடம்பெற்ற 19வது மனித உரிமைக் கூட்டத் தொடரில் இலங்கையில் இருந்து ஜெனீவா சென்ற குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு வெளிவிவகார அமைச்சில் இன்று இடம்பெற்றது அதன் போதே ஜி.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். அமைச்சர்களான ஜி.எல்.பீரிஸ் மற்றும் மஹிந்த சமரசிங்க அகியோரது தலைமையிலேயே இந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.
இதன் போது தொடர்ந்து கருத்துரைத்த வெளிவிவகார அமைச்சர், அரசாங்கத்தினுடைய தீர்மானத்தில் எந்த விதமான மாற்றங்களும் இல்லை. சர்வதேசம் எவ்வாறான அழுத்தங்களைப் பிரயோகித்தாலும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எதுவிதமான மாற்றமும் ஏற்படாது என பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஜெனீவா தீர்மானத்திற்குப் பின்னர் இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தினால் பொருளாதார தடை விதிக்கப்படலாம் என்ற அச்சம் தற்போது பரவலாக காணப்படுகின்றது ஆனாலும் இது குறித்து யாரும் அச்சம் கொள்ளவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் உள்நாட்டு பிரச்சினைகளில் சர்வதேசத்தினுடைய தலையீடுகள் இருக்க கூடாது என்பதற்காகவே, ஜெனீவா பிரேரணைக்கு எதிராக நாடளாவிய ரீதியில் அரசாங்கம் போராட்டங்களை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரேரணை நிறைவேற்றப்பட்டதற்குப் பின்னர், இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தில் இருந்து எந்த விதமான அழுத்தங்களும் ஏற்படவில்லை. அழுத்தங்கள் இருப்பினும் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளில் மாற்றங்கள் இல்லை. இலங்கையில் எடுக்கப்படுகின்ற எந்த தீர்மானமாக இருந்தாலும் ஜனாதிபதி தீர்மானிப்பாரே தவிர, சர்வதேச நாடுகள் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Responses to அழுத்தத்திற்கு அடி பணியோம் பீரிஸ்