போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை கடற்படையினர் இழைத்த குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க தனியான நீதிமன்றம் ஒன்றை நியமிக்கவுள்ளதாக, இலங்கை அரசாங்கம் ஜெனிவாவில் அனைத்துலக சமூகத்திடம் கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டுள்ளது.
இலங்கை கடற்படையினர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க தனியான கடற்படை நீதிமன்றம் ஒன்றை அமைக்கப் போவதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் தொடக்க நாளான கடந்த பெப்ரவரி 27ம் நாள் இலங்கை அமைச்சர் மகிந்த சமரசிங்க உறுதியளித்திருந்தார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக, இலங்கை படையினர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள இராணுவ நீதிமன்றம் போன்று, இலங்கை கடற்படை நீதிமன்றம் நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்று அவர் கூறியிருந்தார்.
இந்த வாக்குறுதி அளிக்கப்பட்டு ஒரு மாதமாகியுள்ள போதும் இன்னமும் அது நிறைவேற்றப்படவில்லை.
கடற்படை நீதிமன்றத்தை நியமித்து விசாரணை நடத்தும் எண்ணம் இலங்கை அரசிடம் இல்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள, இலங்கை கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய, எல்லா விசாரணைகளையும் இலங்கை இராணுவமே மேற்கொள்ளும் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட இராணுவ விசாரணைக்குழுவின் விசாரணைகளுக்கு காலக்கெடு ஏதும் விதிக்கப்படவில்லை என்று இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
“விசாரணைகள் சுமுகமாக இடம்பெற்று வருகின்றன. இந்த விசாரணைகளை நடத்தி முடிப்பதற்கு எந்த காலஎல்லையும் வழங்கப்படவில்லை.
இது ஒரு நீண்ட நடவடிக்கை. பொதுமக்கள் பலரை நாம் செவ்வி காண வேண்டும். ஒரு விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
எனவே இந்தக் குழுவுக்கு ஒரு காலஎல்லையை வகுப்பது சாத்தியமற்றது.
அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படும் வரை அதுபற்றிய மேலதிக தகவல்கள் வெளியிடப்படமாட்டாது.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
0 Responses to ஜெனிவாவில் கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டது இலங்கை