அணுப் பாதுகாப்பு மாநாட்டுக்கு முன்னதாக ஒபாமா-ஹூ ஜிந்தாவோ சந்தித்துப் பேசினர் வடகொரியா திட்டமிட்டவாறு ராக்கெட் ஏவும் நடவடிக்கையை முன்னெடுக்குமானால், அதனால் ஏற்படக்கூடிய ‘பாரதூரமான ஆத்திரமூட்டல்’ நடவடிக்கைகளின்போது, ஒருங்கிணைந்து பதில் நடவடிக்கைகளை முன்னெடுக்க அமெரிக்காவும் சீனாவும் இணங்கியுள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
விண்வெளியில் செய்மதி ஒன்றை சேர்ப்பிப்பதற்காகத் தான் ராக்கெட்டை ஏவவுள்ளதாக வடகொரியா கூறிவருகிறது. ஆனால், வடகொரியாவின் திட்டம் ஐநா தீர்மானங்களுக்கு முரணானது என்றும், அதுவே ஏவுகணைப் பரீட்சார்த்த நடவடிக்கையாக அமைந்துவிடும் என்றும் அமெரிக்கா வாதிட்டு வருகிறது.
வடகொரியாவின் முன்னாள் தலைவர் கிம் இல்-சுங் இன் 100 பிறந்த நாள் நினைவாக அடுத்த மாத நடுப்பகுதியில் இந்த ராக்கெட்டை ஏவவுள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது.
தென்கொரியாவில் நடக்கும் அணுப்பாதுகாப்பு மாநாட்டை ஒட்டி அங்கு சென்றுள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் சீன அதிபர் ஹூ ஜிந்தாவோவும் சந்தித்துப் பேசியுள்ளனர்.
இதன்போது, வடகொரியாவின் அறிவிப்பை பாரதூரமானதாக கருதுவதாகக் கூறிய சீன அதிபர், வடகொரியாவிடம் சீனாவின் கவலையை தெரிவிப்பார் என்று சுட்டிக்காட்டியதாகவும் அமெரிக்கா கூறுகிறது.
‘ஆனால், சீனா முன்னரே இந்தக் கவலையை வெளியிட்டுள்ளது, வடகொரியாவின் போக்கில் மாற்றம் எதுவும் இல்லை. அதனால் இவ்வாறான செய்திகளை அனுப்புவதைக் காட்டிலும் கடுமையான நிலைப்பாடுகளை சீனா எடுக்க வேண்டியிருக்கிறது’ என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, வடகொரியாவிடம் சீனா கடுமையாக நடந்துகொள்ளவில்லை என்று ஒபாமா விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமது நாட்டுக்கு மேலான வானூடாக வடகொரியாவின் ராக்கெட் செல்லுமானால் அதனைச் சுட்டுவீழ்த்துவோம் என்று தென்கொரியாவும் எச்சரித்திருக்கிறது.
அமெரிக்காவின் 240,000 தொன் உணவு உதவித் திட்டத்துக்காக நெடுந்தூர ஏவுகணை சோதனைகளையும் யூரேனிய செறிவாக்கலையும் கைவிட வடகொரியா ஏற்கனவே இணங்கியிருந்தது.
ஆனால் இப்போது வடகொரியாவின் ராக்கெட் அறிவிப்பு வெளியானதும் அந்த உடன்பாடும் ரத்தாகி விட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Responses to வடகொரியா ராக்கெட் அமெரிக்காவுடன் சீனா