தமிழக ஆளும் கட்சியான அதிமுக மற்றும் முக்கியக் கட்சியான திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் புறக்கணித்து விட்ட நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த வெறும் 5 பிரதிநிதிகள் உள்பட 12 பேர் கொண்ட இந்திய எம்.பிக்கள் குழு நாளை இலங்கை பயணத்தைத் தொடங்குகிறது. பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் இந்தக் குழுவுக்குத் தலைமை தாங்கிச் செல்கிறார்.
எதற்காக இந்தப் பயணம் என்றே புரியாத நிலையில் அனைத்துக் கட்சிகள் அடங்கிய எம்.பிக்கள் குழுவை இலங்கைக்கு அனுப்புகிறது இந்தியா. இந்தக் குழுவில் முதலில் சுஷ்மா உள்பட 14 பேர் இடம் பெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு இடம் தரப்பட்டது. அதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் 4 பேர். மற்ற மூவரில் ஒரு இடம் அதிமுகவுக்கு, இன்னொரு இடம் திமுகவுக்கு, கடைசி இடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு.
மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் என மற்ற தமிழக கட்சிகள் யாருக்கும் இடம் தரப்படவில்லை. இது கடும் கண்டனங்களையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இலங்கை அரசின் கரத்தை வலுப்படுத்தவே இந்தப் பயணம் உதவும் என்று கூறி குழுவிலிருந்து அதிமுக விலகுவதாக முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக அறிவித்தார். இன்று திமுகவும் விலகி விட்டது.
இதையடுத்து குழு எண்ணிக்கை 12 ஆக சுருங்கி விட்டது. தமிழகப் பிரதிநிதித்துவமும் 5 ஆக குறைந்து விட்டது. தமிழகத்தின் தரப்பிலிருந்து என்.எஸ்.வி.சித்தன், சுதர்சன நாச்சியப்பன், கிருஷ்ணசாமி, மாணிக் தாகூர், சிபிஎம் கட்சியின் டி.கே.ரங்கராஜன் கலந்து கொள்கின்றனர். இந்த 12 பேரும் நாளை தங்களது இலங்கைப் பயணத்தைத் தொடங்குகிறார்கள்.
முதலி்ல பெரீஸ் – பசில் ராஜபக்சேவுடன் சந்திப்பு
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நாளை இக்குழு கொழும்பு செல்கிறது. அங்கு அவர்கள் 6 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார்கள்.
நாளை கொழும்பு போனதும் மறுநாள் 17-ந் தேதி காலை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரிசையும், இலங்கை பொருளாதார வளர்ச்சி அமைச்சரும், ராஜபக்சேவின் தம்பியுமான பசில் ராஜபக்சேவையும் சந்தித்து பேசுகிறார்கள்.
சபாநாயகர் விருந்தில் பங்கேற்பு
தொடர்ந்து இலங்கை பாராளுமன்றத்துக்கு எம். பி.க்கள் குழு செல்கிறது. அங்கு சபாநாயகர் சாமல் ராஜபக்சேவை சந்திக்கிறார்கள். அவர் எம்.பி.க்களுக்கு மதிய விருந்து அளிக்கிறார். இலங்கை வடக்குப் பகுதி தமிழ்தேசிய கூட்டணி பிரதிநிதிகளையும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கை தோட்ட தொழிலாளர் காங்கிரஸ் நிர்வாகிகளையும் சந்திக்கிறார்கள்.
இந்தியத் தூதரின் விருந்து
எம்.பி.க்கள் குழுவுக்கு கொழும்பில் உள்ள இந்திய தூதர் அசோக் கே.கந்தா விருந்தளிக்கிறார். அதன் பிறகு வடக்கு பகுதியில் ரெயில்வே சார்பில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறும் மெடவாச்சியா செல்கிறார்கள். முல்லைத் தீவு பகுதியையும் பார்வையிடுகிறார்கள். யாழ்ப்பாணத்துக்கும் சென்று தமிழ் எம்.பி.க்களையும், மனித உரிமைசங்க பிரதி நிதிகளையும் சந்தித்து கலந்துரையாடுகிறார்கள். யாழ்ப்பாணத்தில் இரவு தங்குகிறார்கள்.
ஏப்ரல் 19-ந்தேதி காங்கேசன்துறை துறைமுகம் செல்கிறார்கள். அங்கு இந்திய அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் துறைமுக சீரமைப்பு பணிகளை பார்வையிடுகிறார்கள். காங்கேசன்துறை துறைமுகத்துக்கும், தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்துக்கும் இடையே வர்த்தக தொடர்பு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணி அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ரனில் விக்ரமசிங்கேவுடன் சந்திப்பு
அதே நாளில் குலதாராவில் தென்னக ரெயில்வே சார்பில் நடைபெறும் பணிகளை பார்வையிட்ட பின்பு இலங்கை எதிர்க்கட்சி தலைவர் ரனில் விக்ரம சிங்கேயை சந்தித்து பேசுகிறார்கள்.
பிள்ளையானுடன் சந்திப்பு
20-ந்தேதி கிழக்கு மற்றும் மலை பகுதிகளை பார்வையிட்டு அங்குள்ள மக்களை சந்திக்கிறார்கள். சமீபத்தில் காந்திசிலை உடைக்கப்பட்ட மட்டக்களப்பு பகுதிக்கும் சென்று மாகாண முதல்வரான பிள்ளையானை சந்தித்து பேசுகிறார்கள்.
21ம் தேதி ராஜபக்சே விருந்து
21-ந்தேதி காலை ராஜபக்சேவை எம்.பி.க்கள் குழு சந்திக்கிறது. அவர் அளிக்கும் விருந்தில் பங்கேற்கிறார்கள். இலங்கை ராணுவ செயலாளரும், போர்க்குற்றம் புரிந்த ராஜபக்சேவின் இன்னொரு தம்பியுமான கோத்தபயாவை குழுவினர் சந்திக்க மாட்டார்கள் என்று தெரிகிறது.
0 Responses to 21ம் தேதி ராஜபக்சேவுடன் விருந்து சாப்பிடுகிறார்கள்!