Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆணைக்குழுக்கள் முன்மொழிந்த சிபாரிசுகளை எந்தவொரு உலகநாடும் இதுவரை முழுமையாக அமுல்படுத்தியதாக சரித்திரம் இல்லை. இதுதான் யதார்த்தமும் கூட.

ஆணைக்குழு என்பது மக்களின் ஆணையைப் பெற்றதல்ல. சிபாரிசுகளை முன்மொழியும் கடப்பாடே அதற்குண்டு. இறுதியானதொரு முடிவை அரசே மேற்கொள்ள வேண்டும். அதேபோன்றுதான் நல்லிணக்க ஆணைக்குழுவும்.

நாம் அறிக்கையை ஏற்கமாட்டோம் எனக்கூறவில்லை. நடைமுறைப்படுத்தக்கூடிய சிபாரிசுகளை முதலில் அமுல்படுத்துவோம். இவற்றை ஒரேடியாக செய்து முடிக்க முடியாது. இது ஒர் தொடர்ச்சியான செயற்பாடாகும்.

இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார். அமைச்சர் பீரிஸ் தமதுரையில் மேலும் கூறியவை வருமாறு இந்திய எம்.பிக்கள் 17 ஆம் திகதி இலங்கையில் ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தமை எமக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மை தான். எனினும், இதனால் இலங்கை இந்திய உறவில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. அந்த உறவு மிகவும் நெருக்கமாகவே இருக்கின்றது.

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 17 பேர் அடங்கிய தூதுக்குழுவினர் எதிர்வரும் 17 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளனர். இந்த தூதுக்குழுவினர் வடக்கில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கும்,மலையகத்திற்கும் செல்லவுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் உள்ள தூதரகங்களை மூடிவிடுவதாக அரசு ஒருபோதும் கூறவில்லை. உலகிலுள்ள 193 நாடுகளில் 46 நாடுகளில் மட்டுமே எமக்கு தூதரகங்கள் இருக்கின்றன.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று இந்தியா எமது பகைமை நாடாகிவிட்டது என குறைகூறுகின்றனர்.இதில் உண்மை இல்லை.ஜெனிவா மாநாடு நடைபெறும் தருவாயில் இந்தியாவுக்கு பல அழுத்தங்கள் இருந்தன. குறிப்பாக தமிழ் நாட்டு அரசியல் கட்சிகள் பிரயோகித்த அழுத்தமே எமக்கு எதிராக இந்தியாவை வாக்களிக்க வைத்தது.

அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்ரனை நான் மே 18 ஆம் திகதி சந்தித்துப் பேசவுள்ளேன். அவருக்கும் எமக்குமிடையே எந்தவொரு பிரச்சினையும் இல்லை.அவர் எம்மை சங்கடத்துக்குள்ளாக்கும் வகையில் கடிதம் அனுப்பவில்லை. எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து பேசுவதற்கே அழைத்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணைக் கொண்டு வந்ததற்கு தாமே பிரதானக் காரணம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிமைக் கோருகின்றது. ஹலாரி கிளின்ரன் என்னைச் சந்திப்பதற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்துப் பேசுவார் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கருத்து வெளியிட்டிருந்தார். ஆனால்,இந்தத் தகவலை அமெரிக்கா நிராகரித்தது.

உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேசத் தலையீடுகளை அரசு ஒருபோதும் அனுமதிக்காது. ஆனால் கூட்டமைப்போ மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தத்தைக் கோருகின்றது.

ஜெனிவாத் தீர்மானத்துக்கும் பொருளாதாரப் பிரச்சினைக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை. நாங்கள் அணிசேரா நாடுகளிலிருந்து வெளியேறப்போவதாக எதிர்தரப்பு உறுப்பினரொருவர் கூறியுள்ளார். இது முற்றிலும் தவறு.

நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அடிக்கடி கேள்வியெழுப்புகின்றனர். ஏற்றுக்கொள்ளக்கூடிய பரிந்துரைகள் எவையென்றும் , ஏற்றுக்கொள்ளமுடியாத பரிந்துரைகள் எவையென்றும் அவர்கள் தொடர்ந்தும் கேள்விமேல் கேள்வியாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

உலகில் எந்தவொரு நாடும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தியது கிடையாது. இதுதான் யதார்த்த மும்கூட. ஆணைக்குழு என்ற பொறிமுறை மக்களின் ஆணையைப் பெற்றஒன்றல்ல. பரிந்துரைகளை வழங்குவதே அதன் கடப்பாடு. எனினும் அந்தப் பரிந்துரைகள் தொடர்பான இறுதியான முடிவை அரசே மேற்கொள்ளும்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் சாத்தியமான விடயங்களை முதலில் நடைமுறைப்படுத்துவோம். அவற்றை நிறைவேற்ற மாட்டோம் என்று அரசு கூறவில்லை. அந்த அறிக்கையில் ஆராய வேண்டிய பரிந்துரைகளும் உள்ளன. ஆணைக்குழு பரிந்துரைகளை கட்டம் கட்டமாக அமுல்படுத்துவோம். உதாரணமாக 160 பரிந்துரைகள் இருப்பின் அவையணைத்தையும் நிறைவேற்ற முடியுமா? கேள்வி எழுப்புபவர்கள் முதலில் யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும்.

நாட்டின் இறைமையைப் பாதிக்கும் வகையில் சர்வதேசம் தலையிடுவதற்கு சர்வதேசச் சட்டத்தில் இடமில்லை. இந்தக் கருத்தை ஒரு சட்டத்துறைச் சார்ந்த பேராசிரியர் என்ற அடிப்படையில் நான்சொல்ல முடியும்.ஜெனிவா சென்ற எமது குழுவினருக்கிடையில் எந்தவிதமான முரண்பாடும் ஏற்படவில்லை. இரண்டு நாள்களும் விவாதத்தில் கலந்துகொண்டவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

0 Responses to சிபார்சுகளை ஒரேயடியாக நிறைவேற்ற முடியாது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com