பொறுப்புக்கூறும் விடயத்திலிருந்து இலங்கை தப்பிவிட முடியாது. அந்த வகையிலேயே சர்வதேச ஒப்பந்தங்கள் அமைந்துள்ளன. சர்வதேச நீதிக்கு அப்பால் சென்று எந்தவொரு நாடாலும் செயற்படமுடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், ஒரு நாடு என்ற அடிப்படையில் இலங்கை தோல்வி கண்டுள்ளது. எனவே, அதை மூடிமறைப்பதற்கு அரசு தேசியக் கொடியைப் பயன்படுத்துகின்றது. இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த ரஷ்யாகூட நல்லி ணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்துமாறு கூறியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றில் நேற்று இரண்டாவது நாளாகவும் நடைபெற்ற ஜெனிவாத் தீர்மானம் தொடர்பான ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறியவை வருமாறு:ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் ஒரு நாடு என்ற அடிப்படையில் இலங்கை படுதோல்வியடைந்துள்ளது. இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் எந்தவொரு நாடும் தனித்துச் செயற்படமுடியாது. சர்வதேசத்துடன் கைகோர்த்தே செயற்படவேண்டும்.
சர்வதேச நீதிக்கு அப்பால் சென்று எந்தவொரு நாடும் செயற்படமுடியாது. எனவே, பொறுப்புக்கூறும் விடயத்திலிருந்து இலங்கை தப்பித்துவிடமுடியாது. இலங்கை 7 சர்வதேச ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது. மனித உரிமை, இறைமைத்துவம் ஆகிய விடயங்களும் இதில் அடங்கும். சர்வதேசம் தலையிடுவதற்கான உரிமை தானாகவே தாரைவார்க்கப்பட்டுள்ளது.
எனது அரசியல் வாழ்க்கையில் எந்தவொரு அரசும் மனித உரிமைகளை மீறிச் செயற்பட்டால், ஐ.நா. சபை என்ன, நரகத்துக்கும் தாம் செல்லத்தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அன்று தெரிவித்திருந்தார். அப்படியானால், ஜெனிவா பிரச்சினையைப் பூதாகரப்படுத்தி அரச தரப்பினர் ஏன் தற்போது கொக்கரிக்கின்றனர்?
2009ஆம் ஆண்டு ஐ.நா. செயலாளர் நாயகத்துடன் இணைந்து அரசின் வெளிவிவகார அமைச்சு கூட்டு ஒப்பந்தமொன்றை வெளியிட்டது. அந்த ஒப்பந்தத்தில் இருந்த விடயங்கள் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையிலும் உள்ளன.
அரசு நல்லிணக்க ஆணைக் குழுவின் சிபாரிசுகளை கட்டாயம் அமுல்படுத்த வேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளும் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளன. ரஷ்யா கூட நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துமாறு கூறியுள்ளது.
அமைச்சர் பீரிஸ் ஆதரவு திரட்டுவதற்காக சர்வதேச நாடுகளுக்கு சவாரி செய்தார். அந்த நிழற்படங்களையும் நான் பார்த்தேன். ஆனால், பெறுபேறுதான் என்னவென்று தெரியவில்லை. என்றார்.
0 Responses to வெளிநாடு போய் விழுந்து உடைந்த சிங்கள பீரீஸ்