இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலை குறித்து அறிய, இலங்கை செல்லும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் அதிமுகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடம்பெறுகிறது.
ஏப்ரல் 16 முதல் 25ம் தேதி வரை இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செல்லும் 14 பேர் கொண்ட இந்திய எம்.பி.க்கள் குழுவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமை தாங்குகிறார்.
வெங்கைய நாயுடு (பாஜக),
டி.கே.எஸ். இளங்கோவன் (திமுக),
என்.எஸ்.வி. சித்தன், சுதர்சன நாச்சியப்பன், மாணிக் தாக்கூர், எம். கிருஷ்ணசாமி (நால்வரும் காங்கிரஸ்)
ஆகியோருடன் பிற கட்சிகளின் எம்.பி.க்களும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய எம்.பி.க்களின் இலங்கைப் பயணத்துக்கான ஏற்பாடுகளை வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து நாடாளுமன்ற விவகார அமைச்சகம் செய்து வருகிறது.
இலங்கை செல்லும் குழுவில் இடம்பெறுவது குறித்து அதிமுகவுக்கு நாடாளுமன்ற விவகார அமைச்சர் பவன் குமார் பன்சால் கடிதம் எழுதியிருந்தார். ஆனால், அதற்குப் பதில் ஏதும் வராத நிலையில், இலங்கைப் பயணத்தை அதிமுக புறக்கணித்து விட்டதாக முதலில் கூறப்பட்டது.
இது குறித்து அதிமுக மாநிலங்களவைத் தலைவர் வா. மைத்ரேயனிடம் கேட்டதற்கு, இலங்கைப் பயணத்துக்கு யாரை அனுப்புவது என்பதைக் கட்சியின் மேலிடம் விரைவில் முடிவு செய்யும் என்று கூறினார்.
இந்த நிலையில், இந்திய எம்.பி.க்கள் குழுவில் அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் ரபி பெர்னார்டு இடம்பெறுவார் என்று தெரிகிறது. இது தொடர்பான தகவலை அதிமுக தலைமை, கடிதம் மூலம் நாடாளுமன்ற அமைச்சகத்துக்கு அனுப்பியிருப்பதாகவும் தெரிகிறது.
இதே போல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜனும் இலங்கை செல்லும் குழுவில் இடம்பெறுவார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் போராடி வரும் தங்களை இலங்கை செல்லும் குழுவில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜாவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனும் நாடாளுமன்ற விவகார அமைச்சரிடம் மீண்டும் நேற்று கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், அது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை'' என்று நாடாளுமன்ற விவகார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.
இலங்கை செல்லும் இந்தியக் குழுவில் அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடம்பெறுவதாக அறிவிப்பு
பதிந்தவர்:
தம்பியன்
06 April 2012
0 Responses to இலங்கை செல்லும் இந்தியக் குழுவில் அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடம்பெறுவதாக அறிவிப்பு