மதுரையில் நகர் மற்றும் புறநகர் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் தேர்வு நடக்கிறது. திமுகவின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (14.4.2012) மாலை மற்றும் நாளையும் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
மதுரையில் முதன்முறையாக அழகிரி இல்லாமல் திமுக நேர்காணல் நடப்பது இதுவே முதல் முறை என்கிறது மதுரை திமுக வட்டாரம்.
இன்று காலையில் அழகிரி ஆதரவாளர்கள் மதுரை அழகர்கோயில் சாலையில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் ஒன்று கூடி, இன்று ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் நேர்காணல் கூட்டத்தையும், நாளை நடக்கவுள்ள பொதுக் கூட்டத்தையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இதையறிந்த ஸ்டாலின் தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது.
இதையடுத்து மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ. தளபதி, மு. க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இளைஞரணி நேர்காணலுக்கு அழகிரி ஆதரவாளர்கள் வரவில்லை என்றால் நான் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அதிரடியாக கூறினார்.
இதன் பின்னர் அழகிரி ஆதரவாளர்கள் ஒவ்வொருவரும் தளபதியை நேரிலும், தொலைபேசியிலும் தொடர்புகொண்டு, ‘’அண்ணன்( அழகிரி ) இல்லாத இடத்தில் நாங்கள் இருக்க மாட்டோம். அவர் அனுமதி இல்லாமல் நாங்கள் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டோம். அவர் உத்தரவு போட்டால்தான் நாங்கள் பங்கேற்போம்’’ என்று கூறியுள்ளனர்.
உடனே தளபதி, ‘’ நானும் அழகிரி ஆதரவாளர்தான். அப்படியிருந்தும் நான் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறேன் என்றால், அதுக்கு காரணம், இது கட்சி பொது நிகழ்ச்சி. திமுக சார்பில் நடைபெறும் திமுக இளைஞரணி கூட்டத்தில் திமுகவினரின் கடமை. கட்சியின் தலைமைக்கு கட்டுப்பட்டு நாம் பங்கேற்க வேண்டும்’’ என்று எவ்வளவோ கேட்டுப்பார்த்தும், ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டத்தை புறக்கணிப்பது என்கிற முடிவில் உள்ளனர் அழகிரி ஆதரவாளர்கள்.
இதனால் மதுரை திமுகவில் பரபரப்பு நிலவுகிறது.
- முகில்
0 Responses to ஸ்டாலின் ஆதரவாளர்கள் - அழகிரி ஆதரவாளர்கள்: மதுரையில் பரபரப்பு