புத்தாண்டை முன்னிட்டு நெடுங்கேணி மகாவித்தியாலய சிற்றூண்டிச்சாலையில் வைத்து சிறிலங்கா இராணுவத்தினர் பியர் விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் சிங்கள புத்தாண்டையடுத்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுமாறு வர்த்தகர்களுக்கு அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில், நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் இராணுவத்தரப்பினரால் பியர் விற்பனை செய்யப்பட்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றும், நேற்று முன்தினமும் நாடளாவிய ரீதியில் உள்ள மதுபானசாலைகளை மூடுமாறு கோரியதனையடுத்து அதனைக் கவனத்திற் கொண்டு நாடளாவிய ரீதியில் உள்ள மதுபானசாலை வர்த்தகர்கள் அனைவரும் கடைகளை மூடியிருந்தனர். இந் நிலையில் நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் தமது விற்பனையில் இராணுவத்தினர் மும்முரமாக ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருந்த நிலையிலும் பாடசாலை விடுமுறை விடப்பட்டிருந்த தருணத்தையும் அவர்களுக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு இராணுவத்தினர் ஒரு கல்லில் இருமாங்காய் என இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
விற்பனை நடைபெற்ற இரண்டு நாட்களிலும் வயோதிபர்களைக் காட்டிலும் இளைஞர்களே அதிகளவில் இதற்கு அடிமையாகியிருந்ததனைக் காண முடிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இத்துடன் வழமையாக வியாபார நிலையங்களில் விற்பனை செய்யும் விலையிலும் பார்க்க 10 ரூபா குறைவாகவே விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
தமிழினத்தை அழிப்பதற்காக துடித்துக் கொண்டிருக்கும் சிறிலங்கா அரசு அன்று யுத்தத்தினைக் கையாண்டு தமிழ் மக்களின் உயிர்களை அழித்தது. தொடர்ந்தும் சமாதானம் என்ற போர்வையில் அரசு ஆட்சியைக் கொண்டு நடத்தினாலும் எதிர்கால சந்ததியை அழித்தவிட வேண்டும் என்ற நோக்கிலேயே செயற்பட்டு வருகின்றது.
தற்போது தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் நடைபெறுகின்ற முக்கிய நிகழ்வுகளில் இராணுவம் இந்த வெறியாட்ட வியாபாரத்தில் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றது.
இதேபோல அண்மையில் முல்லைத்தீவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டி ஒன்றின் போது விளையாட்டுக்களில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களாக சாராயப் போத்தல்கள் வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவித்திருந்தன.
அது மட்டுமல்ல யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற இராணுவ சாகாச நிகழ்வில் இராணுவத்தினர் சாதாரண உடைகளில் பியர் கான் விற்பனையில் ஈடுபட்டிருந்தனர். இந் நிகழ்வுகளைக் காண வந்தவர்களில் அதிகளவானவர்கள் பாடசாலை மாணவர்களே இதனடிப்படையில் இவர்களது செயற்பாடுகள் பல கோணங்களில் சிந்திக்க வைக்கின்றது.
நாட்டினையும் நாட்டு மக்களையும் தாம் பாதுகாத்து வருகின்றதாகவும் அவர்களது கலை கலாசாரங்கள் பாதுகாக்கப்படுகின்றதாகவும் சர்வதேச நாடுகளுக்கு அறிக்கைக்கு மேலான அறிக்கை விட்டுக் கொண்டிருக்கும் அரசு எம்மையும் எம் இனத்தை அழித்தும், ஒழுக்கக்கட்டுப்பாட்டுடன் விளங்கிய தமிழ் மக்களின் கலாசாரத்தினைச் சிதைபதற்கும் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது என்பது கவலைக்குரிய விடயமாகும்.
0 Responses to சாராயமும் பியரும் விற்று சமுதாயத்தை அழிக்கிறது சிங்கள இராணுவம்