ஆஸ்திரேலியா வந்தடைந்த அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த 200 வீரர்களுக்கும், ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் தலைமையில் உற்சாகமான வரவேற்பளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வடபகுதி துறைமுகமான டார்வின் நகரிலுள்ள றோயல் விமானப்படைத் தளத்தில் இன்று வந்திறங்கிய அமெரிக்கப் படையினரை வரவேற்றுப் பேசிய, ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர், அமெரிக்கப்படையினரின் வருகை, மிக உற்சாகமும் மகிழ்ச்சியும் அளிப்பதாகக் குறிப்பிட்டார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது கையெழுத்தாகிய ஒப்பந்தத்திற்கு அமைவாக, அமெரிக்கப் படைகள் ஆஸ்திரேலியா வந்துள்ள. முதற்கட்டமாக தற்போது 200 கடற்படையினர் வந்திறங்கியுள்ள போதும், கட்டம் கட்டமாக இது அதிகரிக்கப்பட்டு, 2017 ல் 2500 படையினர் அங்கு இருக்கக் கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலியா வந்திருக்கும் அமெரிக்கக் கடற்படையினர், டார்வின் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்துள்ள அமெரிக்கப் போர்க்கப்பல் மூலம் ஆசிய பசிபிக் பெரும் கடல்களில் போர்பயிற்சியும், ரோந்தும், மேற்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் இவ்வாறான கடற்படை நடவடிக்கை, ஆசியக் கடற்பரப்பில் வியட்நாம் போருக்குப் பிந்திய முதலாவது பாரிய கடல் நடவடிக்கை எனவும், மேற்படி கடற்பரப்பில் அமெரிக்காவின் படைபலத்தை நிலைநிறுத்துவதற்கான முயற்சி எனவும், மற்றொரு புறத்தே சீனாவைக் குறிவைத்து நகர்த்தப்படும் ஒரு இராணுவ நடவடிக்கை எனவும், அவதானிகள் கருத்துத் தெரிவித்திருப்பதாகவும் அறிய வருகிறது.
0 Responses to அமெரிக்க கடற்படைக்கு ஆஸ்திரேலியா உற்சாக வரவேற்பு!