பால் விலை, பேருந்து கட்டண உயர்வை தொடர்ந்து மின் கட்டணத்தை தமிழக அரசு உயர்த் தியுள்ளது.
இதனை தமிழகத்தின் அனைத்து எதிர்கட்சிகளும் கண்டித்து போராட்டத்தை அறிவித்துள்ளன. எதிர்ப்பை கண்டு ஏற்றப்பட்ட மின்கட்டணத்தை மிக சொற்பமாக குறைத்து ஆணையிட்டார் முதல்வரான ஜெயலலிதா.
மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என தேமுதிக இன்று மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தியது. திருவண்ணாமலை நகரில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த்.
’’ஆளும்கட்சி படிப்படியாக மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலையை ஏற்றி வந்தது. ஆட்சிக்கு வந்ததும் 1200 கோடிக்கு வரி உயர்த்தியவர்கள், இப்போது பட்ஜெட்டிலும் வரிகளை உயர்த்தி மக்களை சுரண்டுகிறார்கள்.
மின்சாரமே தருவதில்லை ஆனால் மின் கட்டத்தை உயர்த்தியுள்ளது இந்த அரசாங்கம். கூடாங்குளம் செயல் படுத்தினால் அதில் உற்பத்தியாகும் அனைத்து மின்சாரமும் தமிழகத்திற்கு தான் என்ற மத்தியமைச்சர் நாராயணசாமி இப்போது பிரதமரிடம் கூறியுள்ளேன் நல்லது நடக்கும் என்கிறார். இவர்கள் கொள்ளையடிக்க என் மக்களை ஏமாற்றுகிறார்கள்.
மக்கள் ஏமாளிகளல்ல என்பதை முதலில் புரிந்துக்கொள்ளுங்கள். ஆளும்கட்சிக்கு பயம் வரவேண்டும் என்றால் இடைத்தேர்தல்களில் அவர்களை மக்களே நீங்கள் தோற்கடிக்க வேண்டும். பணம் தருகிறார்கள் என அதனை வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடக்கூடாது.
நான் ஏதாவது சட்டமன்றத்தில் கேள்வி கேட்டால், நாக்கை கடிக்கிறார்கள், கையை நீட்டி பேசுகிறார் என குற்றம்சாட்டி பேசவிடாமல் தடுக்கிறார்கள். ஜெயலலிதாவை யார் புகழ்ந்து பேசுகிறார்களோ அவர்களை எழுந்து பேசச்சொல்கிறார் சபாநாயகர்.
இதற்காகவா மக்கள் எங்களை தேர்ந்தெடுத்து அனுப்பினார்கள். மக்கள் பிரச்சனைகளை பேசத்தான் நாங்கள் சட்டமன்றம் வருகிறோம். அதனை ஆட்சியில் அமர்ந்துள்ளவர்கள் புரிந்துக்கொள்ள மறுக்கிறார்கள்.
எதை கேட்டாலும் புள்ளி விவரம் சொல்கிறார்கள். புள்ளி விவரம் என்பது விஷயத்தை மறைக்க சொல்லப்படுவது. யாருக்கு வேண்டும் புள்ளி விவரம். நிலக்கரி இறக்குமதி செய்வதில் கொள்ளையடிக்கிறார்கள். அதனால் மின் தட்டுப்பாடு தீராது.
மின்சார பற்றாக்குறை என்கிறார்கள். மின்பற்றாக்குறையை ஏற்படுத்துவதே கொள்ளையடிக்க தான். 14 மணி நேரம் மின்வெட்டால் அவதிப்படுகிறார்கள் என் மக்கள். இதை தீர்க்கிறேன் என்று சொல்லிதானே ஓட்டு வாங்கி ஆட்சியில் அமர்ந்தீர்கள். ஏன் இன்னும் அதை செய்யவில்லை.
1 மணி உச்சி வெய்யிலில் நான் பேசுவது என் மக்களுக்காக தான். சட்டமன்றத்தில் பேசும் என்னை தடுக்கிறார்கள். சங்கரன்கோயிலில் பணத்தை வாரி இறைத்தும், அதிகாரத்தை காட்டியும் வெற்றி பெற்றுள்ளீர்கள். இது நிலைக்காது என்பதை மனதில் கொள்ளுங்கள்’’ என மதியம் 12 மணிக்கு ஆரம்பித்து 1 மணி வரை கொளுத்தும் வெய்யிலில் தொண்டர்கள் மத்தியில் ஆவேசமாக பேசினார்.
தெற்கு மாவட்ட செயலாளர் மணிகண்டன், செங்கம் எம்.எல்.ஏ சுரேஷ் ஏற்பாட்டில் 5 ஆயிரத்தும் மேற்பட்ட தேமுதிக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுயிருந்தனர்.
ஆனால் 9 மணிக்கு ஆர்ப்பாட்டம் ஆரம்பம் என தொண்டர்களை வரவைத்திருந்தனர். ஆனால் விஜயகாந்த் வந்தது மதியம் 12 மணிக்கு தான். இதனால் நொந்து போய்விட்டனர்.
0 Responses to யாருக்கு வேண்டும் புள்ளி விவரம்: விஜயகாந்த் ஆவேசம்