பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் பொறுப்பை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் மத்திய அரசு ஒப்படைத்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும்போதெல்லாம் இங்கு பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் 18 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
5 மாநில தேர்தல் மற்றும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரால் சில மாதங்களாக பெட்ரோல் விலை உயர்த்தப்படவில்லை. பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்த நிலையில், பெட்ரோல் விலையை இதுவரை இல்லாத அளவுக்கு லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தி கடந்த 23&ம் அறிவிப்பு வெளியானது.
இந்த விலை உயர்வுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பின. பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, ஐ.மு. கூட்டணியில் உள்ள கட்சிகளும் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கட்சித் தொண்டர்களுடன் 2 நாட்களுக்கு முன்பு பிரமாண்ட பேரணி நடத்தி, தனது கண்டத்தை தெரிவித்தார்.
தமிழகத்திலும் பல்வேறு கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அதிமுக சார்பில் நேற்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேமுதிக வினர் வரும் 1&ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து 31&ம் தேதி நாடு தழுவிய பந்த் நடத்தப்படும் என்று பா.ஜ. தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்தது.
அதேபோல இடதுசாரி கட்சிகளும் 31&ம் தேதி பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளன. அதன்படி, நாடு முழுவதும் நாளை பந்த் போராட்டம் நடக்கிறது. பந்துக்கு பல்வேறு தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
பந்த் போராட்டத்தின்போது அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் முன்பு போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சமூக விரோதிகள் நாசவேலைகளில் ஈடுபடக்கூடும் என்பதால் முக்கிய இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பந்த்தையொட்டி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
0 Responses to நாடு முழுவதும் நாளை "பந்த்"