மத்திய அரசு, பெட்ரோல் விலையை குறைக்கக் கோரியும், பால் விலை, பேருந்து கட்டணம், மின் கட்டண உயர்வினை குறைக்காத தமிழக அரசை கண்டித்தும் 30.05.2012 புதன்கிழமை காலை 10 மணி அளவில் விழுப்புரம் மாவட்ட திமுக சார்பில் திண்டிவனம் செஞ்சி சாலையில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். இதில் முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான பொன்முடி, முன்னாள் எம்எல்ஏக்கள் திண்டிவனம் சேதுநாதன், உளுந்தூர்பேட்டை திருநாவுக்கரசு, சின்னசேலம் உதயசூரியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின்,
அமெரிக்கா உள்பட பல நாடுகளில் பெட்ரோல் விலை குறைவாக உள்ளது. அப்படி இருக்கும்போது இந்தியாவில் மட்டும் அடிக்கடி பெட்ரோல் விலையை ஏற்றுவது மக்களின் மீது சுமையை ஏற்றுவதாக அமையும். மத்திய அரசே முடிந்த அளவு பெட்ரோல் விலையை குறைக்கும் என்று எதிர்ப்பார்க்கிறோம். மத்திய அரசு பெட்ரோல் விலையை திரும்ப பெற வேண்டும்.
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாங்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு, அதிமுக தரப்பிலிருந்து கபட நாடகம் என்றும் ஆர்ப்பாட்டம் நடத்த என்ன அருகதை உள்ளது என்றும் அறிக்கை வெளியிட்டனர்.
அதாவது மத்திய அரசில் கூட்டணியில் உள்ள பல கட்சிகள் இந்த பெட்ரோல் விலை உயர்வை கண்டித்துள்ளன. திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜியும் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினார். ஆனால் தமிழகத்தில் எங்கள் ஆட்சியின் போது பால் விலை, பஸ் கட்டணம், மின்சாரம் கட்டணம் ஆகியவற்றை நாங்கள் உயர்த்தவில்லை.
அதையெல்லாம் வரலாறு காணாத அளவிற்கு உயர்த்திவிட்டு இப்போது பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். இவர்களுக்குத்தான் ஆர்ப்பாட்டம் நடத்த யோக்கிதையில்லை. இவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம் தான் கபட நாடகம். இதை தமிழக மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். இதற்கு உரிய நேரத்தில் தகுந்த பாடத்தை கற்பிப்பார்கள் என்றார்.
எஸ்.பி.சேகர்
ஆர்ப்பாட்டம் நடத்த அதிமுகவுக்கு யோக்கிதையில்லை! மு.க.ஸ்டாலின் ஆவேசப் பேச்சு!
பதிந்தவர்:
தம்பியன்
30 May 2012
0 Responses to ஆர்ப்பாட்டம் நடத்த அதிமுகவுக்கு யோக்கிதையில்லை! மு.க.ஸ்டாலின் ஆவேசப் பேச்சு!