Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு

28.05.2012.

உண்மை, உழைப்பு, உறுதி என்றைக்கும் காலத்தின் தேவையாகும்.

இன்று புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழீழ மக்களைப் பொறுத்தவரையில் தமிழர் அமைப்புக்கள் ஊடகங்கள், பத்திரிகைகள், இணையத்தளங்கள் மிகவும் முக்கியம் வாய்ந்தவையாகவும், மக்கள் எதிர்பார்க்கின்ற விடயங்களுக்கு நம்பிக்கையாகவும், உண்மையாகவும், ஆதரவு கொடுத்து அரவணைக்க வேண்டியவையாகவுமே இருக்க வேண்டியவைகளாகும்.

கடந்த 13.05.2012 ஞாயிற்றுக்கிழமை பிரான்சு தமிழர் புனர்வாழ்வுக்கழகம், தமிழர் விளையாட்டு விழா சம்பந்தமான ஒன்று கூடலினை நடாத்தியிருந்தது. அதில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு கலந்துகொண்டதாகத் தமது தொலைக்காட்சியில் பொய்யானதொரு செய்தியினை ஜிரிவி தெரிவித்திருந்தது.

அந்தச் செய்தியில் எந்த வித உண்மையுமில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்வதுடன், பிரான்சு தமிழர் விளையாட்டு விழா சம்பந்தமாகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினராகிய நாம் எமது தெளிவான நிலைப்பாடு என்ன என்பதைக் கடந்த வருடம் தெட்டத்தெளிவாக பகிரங்கமாகத் தெரியப்படுத்தியிருந்தோம். மக்களும் அதனை ஏற்று தமது நிலைப்பாட்டை எடுத்திருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

ஆனால் இன்றுவரை தமிழர் புனர்வாழ்வுக்கழகம் தனது நிலைப்பாட்டில் இருந்து மாறாததும், அதனை நியாயப்படுத்த முன்வைத்திருக்கின்ற விடயங்களும், காரணங்களும் மிகுந்த வேதனையை அளிக்கின்றது. பிரான்சில் உள்ள தமிழர் புனர்வாழ்வுக்கழகம் தமது செயற்பாட்டினைப் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவுடன் சேர்ந்து செயற்பட வேண்டாம் என்று பிரான்சு காவல்துறையினர் தமக்கு கூறியதாகவும், இன்னும் உண்மைக்குப் புறம்பான சில விடயங்களை பொறுப்பானவர்கள் கூறிவருகின்ற அதே வேளை முள்ளிவாய்க்காலுக்குப் பிற்பாடு புதிதாக உருவாகிய அமைப்புக்களுடன் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் கைகோர்த்து நிற்பதுவும், அந்தப் புதிய கட்டமைப்புகள் யாருக்காக, யாருடன் நிற்கின்றார்கள், பணியாற்றுகின்றார்கள் என்பதை இதுவரை வெளியே மக்களுக்குத் தெரிவிக்காத நிலையிலும், இவர்களுக்குப் பின்னால் நிற்பவர்களின் உண்மைத்தன்மை தெரியாத காரணத்தால் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் செயற்பாடு மீதில் நம்பிக்கையீனத்தையே ஏற்படுத்துகின்றது.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவானது ஆண்டு தோறும் பல செயற்பாடுகளை இந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கமையவும், காவல்துறையின் அனுமதியுடனும், ஆதரவுடனுமே நடாத்தி வந்துள்ளது, வருகின்றது. தமது வழிமாறிய பயணத்தை நியாயப்படுத்த காவல்துறையினை காரணம் காட்டிக்கொள்வதும், தாம் இதுவரைகாலமும் உழைத்த அமைப்பை அவமதிக்கும் நிலைப்பாடாகும்.

இந்த நேரத்தில் எம்மை வழிநடத்திச் செல்லும் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைத்துளிகளை ஏறிட்டு நோக்குவோமாக “பயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு, கோழைத்தனத்தின் தோழன், உறுதிக்கு எதிரி, இந்த பயத்தை கொன்று விடுபவன்தான் தன்னை வென்றுவிடுகின்றான், அவன்தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்’’ என்ற உண்மையை தேசியத்தலைவரின் வழித்தடத்தை உண்மையாகப் பின்பற்றுகின்றவர்கள் கடைப்பிடிக்க வேண்டியதொன்றாகும்.

எமது மண்ணில் எற்படுகின்ற போரினால் பொருளாதாரத் துன்பத்தை எம் மக்கள் அனுபவிக்கக்கூடாது என்ற நீண்ட தீர்க்க சிந்தனையால் உருவாக்கப்பட்டுக் கட்டிக்காக்கப்பட்டு இறுதிவரை பல நெருக்கடிகளை, உயிர் இழப்புக்களை எதிர்கொண்டு செயற்பட்ட தமிழர் புனர்வாழ்வுக்கழகமானது இன்று தனது மனிதநேயப்பணியை தொடராமல் நிற்பதுவும், குழப்பத்தில் நிற்பதுவும், குழப்பப்படுவதும் தமிழ் மக்கள் எவராலும் ஏற்றுக்கொள்ளவே முடியாததொன்றாகும். உண்மையில் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தில் பணியாற்றுகின்றவர்கள் பலர் தமிழீழத் தேசியத்தலைமையை ஏற்றுக் கொண்டு அர்ப்பணிப்போடு செயற்பட்டவர்கள், இன்னும் அந்த மனநிலையிலேயே இருந்து வருகின்றனர்.

எமதினத்திற்கு நடந்த இனவழிப்பிற்கு நீதி வேண்டி உலகம் முழுவதும் வாழுகின்ற தமிழ் மக்களும், அமைப்புகளும் கருத்து முரண்பாடுகளை விட்டு தமது சனநாயகப் போராட்டத்தை தொடர்ந்து நடாத்தி வருகின்றனர். இதேபோல மனிதநேயப் பணியை ஆற்றிய தமிழர் புனர்வாழ்வுக்கழகம் தனது பணிக்கு தடையாக இருக்கும் சிங்கள தேசத்தின் நிலைப்பாட்டை வெளியில் தெரிவிப்பதற்கு ஏன் பின் நிற்கின்றது என்ற கேள்வி எழுகின்றது.

இதுவரை தம்மோடு பணியாற்றிய தாய்க் கழகங்களை புறம் தள்ளி, மாற்றான் தாயின் உதவியை எதிர்பார்ப்பது எதற்காக என்றும், ஒரு புதிய நிகழ்ச்சித்திட்டத்தில் செயற்படுகின்றதா என்ற கேள்வியுமே ஏற்படுகின்றது. இதுவரை தாயகத்திற்கு உதவிட்ட எமது தமிழ் மக்களின் ஒவ்வொரு சதங்களும் மக்களின் வியர்வையும், செங்குருதியுமாகும்.

எனவே தூரநோக்கோடு தேசியத் தலைமையினால் உருவாக்கம் கண்ட தமிழர் புனர்வாழ்வுக்கழமானது தொடர்ந்து பிழையான வழிநடத்தலில், பாதையில் பயணிப்பதையும், இவற்றை நியாயப்படுத்தி உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுகின்ற ஊடகங்களின் பொய்மைத்தன்மையை இனியும் எமது தமிழ் மக்களும், தமிழர் அமைப்புக்களும் அனுமதிக்க முடியாது.

எனவே தமிழர் புனர்வாழ்வுக்கழகம் சரியான பாதையில் செல்ல வேண்டிய அவசியம் இருப்பதால் அதைச் சீர்திருத்தி கொண்டு செல்லும் தலையாய கடமை தமிழ் மக்களாகிய எல்லோரிடமே தங்கியுள்ளது. எனவே இவற்றை சீர்செய்து கடந்து வந்த ஒழுங்கான பாதையில் தடைகளை உடைத்து எமது துன்பப்படும் மக்களுக்கு உதவிடுவோம் என்பதோடு மக்களின் பணத்தில் செயற்பட்டு வரும் ஜிரிவி பொய்யான செய்தியை மக்களுக்குள் கொண்டு செல்வது இவர்கள் மீதான நம்பிக்கையீனத்தை ஏற்படுத்துகின்றது.

எனவே நடைபெறாத ஒரு விடயத்தை நடந்ததாக கூறிய ஜிரிவி தொலைக்காட்சியினர் உண்மை நிலையினை மீண்டும் தெரியப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதோடு, இனியும் பொய்யான செய்தியை வெளிவிடுவதையோ, பொய்யானவர்கள் பக்கம் சாய்வதையோ எமது மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை விளங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

மேற்குறிப்பிட்ட ஊடகம், தரப்பட்ட செய்தியையே ஒளிபரப்பினோம் என்று பதில் கூறி மழுப்புவதைவிட்டு, செய்தி வருமுன் ஒருமுறை உறுதிப்படுத்தல் அவசியம் ஆகும். இது ஊடகதர்மமும், பொறுப்பான செயற்பாடுமாகும்.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு

0 Responses to பயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு | பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com