பிரிட்டனிலிருந்து ஒளிபரப்பாகும் சனல் 4 தொலைக்காட்சியின் மூத்த அதிகாரி ஒருவரை அவர் இலங்கையை வந்தடைந்து ஓரிரண்டு நாட்களுக்குள் வெளியேற்றிவிட்டதாக இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.
அதேவேளை, அவரது மனைவியான இலங்கை வம்சாவளி தமிழ்ப் பெண்ணும் நாட்டுக்குள் அனுமதிக்கப்படாமல் விமானநிலையத்தில் வைத்தே திருப்பியனுப்பப்பட்டதாக இலங்கை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சனல் 4 தொலைக்காட்சியில் பன்முக நிகழச்சிகளுக்கான பிரிவின் தலைமை அதிகாரியான ஸ்டுவர்ட் கொஸ்க்ரோவ் நாடு கடத்தப்பட்டுவிட்டதாக இலங்கை அரசின் அதிகாரபூர்வ இணையதளமொன்று கூறியிருந்தது.
ஆனால், ஸ்டுவர்ட் கொஸ்க்ரோவ் நாடுகடத்தப்பட்டதாகக் கூறமுடியாது, அவரை நாட்டிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டது என்று தான் கூறவேண்டும் என்று இலங்கையின் குடிவரவுத் துறைக்குப் பொறுப்பான அதிகாரி பிபிசியிடம் கூறினார்.
இலங்கைக்குள் இருக்கக்கூடாதவர்களின் கண்காணிப்புப் பட்டியலில் ஸ்டுவர்ட் கொஸ்க்ரோவின் பெயரும் இருந்ததால் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அதே காரணத்திற்காகத்தான் அவரது மனைவி ஷிராணி சபாரட்ணமும் விமானநிலையத்தில் வைத்தே விசா அனுமதி மறுக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டார் என்றும் அந்த அதிகாரி மேலும் சுட்டிக்காட்டினார்.
'இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியவர்கள்'
நாட்டுக்குள் அனுமதிக்கப்படாதவர்களின் தடைப் பட்டியலில் இவர்களின் பெயர்கள் எதற்காக இருக்க வேண்டும் என்று கேட்டபோது, 'எந்தவிதமான காரணங்களும் இன்றி இலங்கையின் புகழுக்கு களங்கம் விளைவித்த சனல்4 தொலைக்காட்சியை சேர்ந்தவர்கள் அவர்கள், அதற்காகத்தான் திருப்பியனுப்பப்பட்டார்கள்' என்று அந்த குடிவரவுத்துறை அதிகாரி பிபியிடம் பதிலளித்தார்.
இதேவேளை, இலங்கையில் பிறந்தவரான ஷிராணி சபாரட்ணம், சனல் 4 தொலைக்காட்சியில் ஒருபோதும் பணியாற்றியதில்லை, அவர் யூகேடிவி (லைஃப் ஸ்டைல் டிவி) என்ற செய்தி ஊடகமற்ற, நாளாந்த வாழ்க்கைமுறைகள் பற்றிய தொலைக்காட்சியொன்றில் தான் பணியாற்றியுள்ளார் என்று சனல்4 நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் பிபிசியிடம் கூறினார்.
இதேவேளை, சிராணி சபாரட்ணத்தின் கணவரான ஸ்டுவர்ட் கொஸ்க்ரோவ், சனல்4 தொலைக்காட்சி ஒளிபரப்பி சர்ச்சையை ஏற்படுத்திய 'இலங்கையின் கொலைக்களம்' விவரணப்படங்களில் எந்தவிதமான செய்திரீதியான பங்களிப்பையும் செய்திருக்கவில்லை என்றும் சனல்4 பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
'ஊடகவியலாளர் கொஸ்க்ரோவின் கடவுச்சீட்டு மற்றும் விசா இரண்டுமே செல்லுபடியாகின்றவையாகத்தான் இருந்தன. ஆனால் அவரது புதிய கடவுச்சீட்டில் இருந்த பெயர்களின் நடுவில் உள்ள பெயர் ஒன்று விசாவில் உள்ள பெயரொன்றுடன் பொருந்திப் போகவில்லை என்ற காரணத்தைக் காட்டியே அவர் திருப்பி அனுப்பப்பட்டதாக சனல் 4 அதிகாரி கூறியுள்ள தகவலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் பெரும்பான்மைச் சிங்களவர்களின் ஆதிக்கம் மிக்க இராணுவம், 2009ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்டப் போர் நடவடிக்கையின்போது, தமிழ் சிவில் மக்களுக்கு எதிராகவும் போரில் கைதானவர்களுக்கு எதிராகவும் கடுமையான வன்முறைகளை பிரயோகித்திருந்ததாக குற்றஞ்சாட்டும் செய்திகளையும் விவரணப்படங்களையும் தொடர்ச்சியாக வெளியிட்டுவந்த சனல் 4 தொலைக்காட்சி தொடர்பில் இலங்கை அரசாங்கம் கடும் ஆத்திரத்தில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஊடக தர்மத்துக்கு கட்டுப்பட்டுத்தான் இலங்கை தொடர்பான செய்திகளை வெளியிட்டுவருவதாக சனல் 4 தொலைக்காட்சியும் அதன் தரப்பை நியாயப்படுத்துகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.



0 Responses to சனல்4 அதிகாரியும் அவரது மனைவியும் தடைப்பட்டியலில் உள்ளனர்