தமிழரை மிரட்டுகிறது இராணுவம்; இலங்கை வந்த இந்தியக் குழு பரபரப்புப் பேட்டி
வன்னி முகாம்களில் தமிழர்களை நாங்கள் சந்தித்துப் பேசினோம். தமிழர்களின் நிலை இன்னும் மிக மோசமாகத்தான் உள்ளது. இலங்கையில் நடக்கும் கொடுமைகளைச் சொல்லத் தமிழர்கள் பயப்படுகிறார்கள். அந்த அளவுக்கு இலங்கை இராணுவம் அவர்களை மிரட்டி வைத்துள்ளது என இலங்கை வந்து திரும்பிய இந்தியக் குழு சென்னையில் தெரிவித்துள்ளது.
போவோர்ட் பிளாக் நாடாளுமன்ற உறுப்பினர் வருண் முகர்ஜி தலைமையில் சட்ட மன்ற உறுப்பினர் கதிரவன், போவோர்ட் பிளாக் தேசிய செயலாளர் தேவராஜன் ஆகியோர் வன்னிப் பிரதேசத்துக்குப் பயண்ம் செய்து நிலைமைகளைப் பார்வையிட்டுள்ளனர். அங்கிருந்து நேற்றுக் காலை விமானம் மூலம் சென்னை திரும்பினர்.
அவர்கள் நேற்றுக் கூட்டாகச் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இதன்போது அவர்கள் தெரிவித்ததாவது:
இலங்கையில் என்ன நடக்கிறது என்ற உண்மை நிலையைக் கண்டறிய இலங்கை சென்றோம். அங்கு 3 நாள் முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால், கிளிநொச்சி, வவுனியா உள்ளிட்ட பல பகுதிகளைப் பார்வையிட்டோம்.
அங்குள்ள முகாம்களில் தமிழர்களைச் சந்தித்து பேசினோம். தமிழர்களின் நிலை இன்னும் மிக மோசமாகதான் உள்ளது. இலங்கையில் நடக்கும் கொடுமைகளைச் சொல்ல தமிழர்கள் பயப்படுகிறார்கள். அந்த அளவுக்கு இலங்கை இராணுவம் அவர்களை மிரட்டி வைத்துள்ளது.
இலங்கைத் தமிழர்கள் புனர்வாழ்வுக்கு இந்திய அரசு ஆயிரம் கோடி ரூபா கொடுத்துள்ளது. அந்தப் பணத்தில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் வீதிகள் செப்பனிடப்பட்டுள்ளதைத் தவிர, மற்ற அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. தமிழர்கள் வீடு கட்ட தலா 3 லட்சம் ரூபா கொடுக்கின்றனர். அது போதுமானதாக இல்லை.
தமிழர்கள் வசிக்கும் பகுதியில் 89 ஆயிரம் பெண்கள் தங்களது கணவர் இறந்து விட்டாரா, அவர்கள் கதி என்னவென்று தெரியாமல் தவிக்கின்றனர். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசினோம்.
புத்தமத வழிபாட்டுக்கு மட்டும் முக்கியம் அளிக்கின்றனர். தமிழர்கள் அவதிப்படும் கொடுமைகளைப் பற்றி புகைப்படம், வீடியோ எடுத்துள்ளோம். நாங்கள் சேகரித்த ஆவணங்களை வைத்து போவோர்ட் பிளாக் செயற்குழுவில் விவாதித்து அறிக்கை தயாரிக்கப்படும். அந்த அறிக்கையை இந்திய அரசிடம் வழங்குவோம். நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சினையை எழுப்புவோம்.என்றனர்.



0 Responses to தமிழரை மிரட்டுகிறது இராணுவம்