நடிகர் விஜயகாந்த தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் குடியரசுத் தலைவர் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக அறிவித்திருக்கிறது.
அஇஅதிமுக குடியரசுத் தலைவர் தேர்தலில் முன்னாள் மக்களவைத் தலைவர் பி.ஏ.சங்மாவை ஆதரிக்கப்போவதாகவும், திமுக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கப்போவதாகவும் அறிவித்திருக்கும் சூழலில், தொடர்ந்து தமிழகத்தின் நலன்களைப் புறக்கணிக்கப்படுகின்றன.
குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்தாலும் தமிழர்களின் பிரச்சினை எதற்கும் தீர்வு காணப்படாது என்பதால் தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கமாட்டார்கள் என விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் கூறியிருக்கிறார்.
காவிரி, முல்லைப்பெரியாறு, கச்சத்தீவு, இலங்கைத் தமிழர் என தீராத பிரச்சினைகள் பல்லாண்டுகளாக இருந்தும் அவற்றைத் தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், யார் குடியரசு தலைவராக வந்தால் என்ன, வராவிட்டால் என்ன? தமிழ்நாட்டிற்கு என்ன பயன்? மாறாக குடியரசுத் தலைவர் தேர்தலில் கலந்து கொள்ளாமல் இருப்பதே மாநிலத்திற்கு செய்யும் நன்மை, எனவே தேர்தலை தேமுதிக புறக்கணிக்கும் என் விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
கடந்த சட்டமன்றத்தேர்தல்களில் அ இஅதிமுக அணியில் இடம்பெற்று 29 இடங்களில் வென்று சட்டமன்றத்தில் முதன்மை எதிர்க்கட்சியாக தேமுதிக விளங்குகிறது. ஆனால் ஒரு கட்டத்தில் அதற்கும் அ.இ.அ.தி.மு.கவிற்கும் இடையேயான உறவு முறிந்தது.
அண்மையில் நடந்த இரு சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் தேமுதிக அஇஅதிமுகவை எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்தியது. இரு இடைத்தேர்தல்களிலும் அக்கட்சி தோல்வியுற்றாலும் தன்னை திமுக, மற்றும் அ அதிமுகவிற்கு மாற்றாக நிலைநிறுத்திக்கொள்ள அது முயன்றுவருகிறது என்கின்றனர் நோக்கர்கள்.



0 Responses to குடியரசு தலைவர் தேர்தலைப் புறக்கணிக்க தேமுதிக முடிவு