எகிப்தின் முன்னாள் அதிபர் கொஸ்னி முபாரக் உயிர் பிரியும் நிலையில் எகிப்தில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து இவருடைய இதயத்தை இயங்கவைக்கும் முயற்சிகள் பெருமெடுப்பில் மேற்கொள்ளப்பட்டன.
இப்போது இயந்திரமூலம் செயற்கையாக இவருடைய இதயம் இயங்க வைக்கப்பட்டு, உயிர் தரிக்கச் செய்யப்பட்டுள்ளது.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பதினேழு தினங்களில் இவருடைய நிலை மரணத்தின் விளிம்பை அடைந்துள்ளது.
இவருடைய மரணம் எகிப்தில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்துமா இல்லையா என்பது தெரியவில்லை.
அடுத்து மக்கள் போராட்டநிலை எவ்வாறு அமையும் என்பதை திட்டவட்டமாக உளவறியும் வரை இவருடைய செயற்கை மரணச் செய்தி தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.
அதேவேளை வேறு சில செய்திகள் இவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கின்றன.
கொஸ்னி முபாரக் என்பவர் எகிப்திய சரித்திரத்தில் ஒரு சின்னமாக விளங்குவதை மறுக்க இயலாது, பிரான்சில் லூயி மன்னன் ஆட்சி இறக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது போல எகிப்திய சர்வாதிகார ஆட்சியின் வீழ்ச்சியாக இவருடைய வரலாறு அமையும்.
இஸ்ரேல் என்ற ஜென்மப் பகைவனுடன் ஒப்பந்தம் செய்து ஆட்சியை நடாத்தினாலும் இஸ்ரேலுடைய பாதிப்பை விட பாரிய பாதிப்பை இவருடைய குடும்ப ஆட்சி எகிப்திற்குள் ஏற்படுத்தியது.
நாட்டினது ஒட்டு மொத்த செல்வத்தையும் சூறையாடி தனது குடும்பத்தவர் பெயர்களில் வங்கி வைப்பு செய்து, சர்சாதிகார ஆட்சியை நடாத்தினார்.
தனது ஆட்சிக்கு துணையாக அமெரிக்காவை வைத்து ஒரு நாட்டையே சீரழிவு நிலைக்குள் வைத்திருந்தார் என்ற குற்றத்தை சுமந்தார்.
இவருடைய ஆட்சிக்கு எதிராகக் கிளம்பிய போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கினார்.
அத்தருணம் பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ய உத்தரவு பிறப்பித்தார் என்ற குற்றச்சாட்டில் இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
அரசனும் ஆண்டியாவான் என்ற பழமொழி போல இப்போது இவருடைய வாழ்வு சுடுகாட்டுக்கு வந்துள்ளது.
சதாம் உசேன், பின் லேடன், கடாபி, முஸாரப் என்று கருங்காலி தலைவர்கள் முறிந்து வீழ்ந்த காட்சிகளில் இவர் பெயரும் பதிவாகும்.
எகிப்தில் நடந்த புரட்சி உண்மையான மக்களாட்சியா என்றால் இதுவரை அதற்கு மகிழ்வான, மன நிறைவான பதில் கொடுக்க இயலாத நிலையே காணப்படுவதையும் மறுக்க இயலவில்லை.
அலைகள்



0 Responses to எகிப்திய முன்னாள் அதிபர் கொஸ்னி முபாரக் மரண நிலையில்...