இன்னும் நூறு முள்ளிவாய்க்கால் படுகொலைகளைச் சந்திக்க நேரிடும்" என சிங்கள அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் இனவெறிப் பேச்சைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பா தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
இலங்கையின் ஜாதிக ஹெல உறுமய கட்சியைச் சேர்ந்த சிங்கள அமைச்சர் சம்பிக்க ரணவக்க அண்மையில் தமிழினத்திற்கு எதிராகப் பேசியிருப்பது சிங்களவர்களின் இனவெறித் திமிரை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு. சம்பந்தன் அவர்கள், கடந்த மாதம் மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் 14வது தேசிய மாநாட்டில், "வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பாரம்பரிய நிலம் என்பதை உறுதிப்படுத்தியாக வேண்டும்'' எனப் பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்த அமைச்சர், "சம்பந்தன் அவர்களின் பேச்சு மீண்டும் சிங்களவர்களை சண்டைக்கு இழுப்பதாக உள்ளது. அதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இவ்வாறு பேசுவது தொடர்ந்தால் இன்னும் நூறு முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நீங்கள் சந்திக்க நேரிடும்'' என்று ஆணவத்தோடு கொக்கரித்திருக்கிறார்.
சிங்கள ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு ஆதிக்க வெறி பிடித்தவர்களாகவும் இனவெறி பிடித்தவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதற்கு இந்த அமைச்சரின் பேச்சு ஒரு சான்றாக அமைந்துள்ளது.
ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களே இந்த அளவுக்கு வெறித்தனமாகப் பேசும்போது, ஆட்சியிலோ அதிகாரத்திலோ இல்லாத சிங்கள இனவெறிக் கும்பலிடம் எத்தகைய காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கவே அச்சமாக உள்ளது.
மேலும், சிங்களப் படையினர் எந்த அளவுக்கு தமிழர்களை நடத்துவார்கள் என்பதை நம்மால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத அளவுக்கு வேதனையைத் தருகிறது.
சிங்களவர்களின் வரவுக்கு முன்னர் ஒட்டுமொத்த இலங்கைத் தீவும் தமிழர்களின் தாயகமாக இருந்தது என்பதும், பின்னர் வடக்கு-கிழக்கு மாகாணம் மட்டுமின்றி தென்னிலங்கையின் ஒரு பகுதியும் தமிழர்களின் ஆட்சி எல்லைக்குள் இருந்தது என்பதும் வரலாற்று உண்மை.
இந்த வரலாற்று உண்மையைக்கூடச் சொல்லக்கூடாது என்கிற அளவுக்கு சிங்கள ஆட்சியாளர்களிடம் இனவெறி தலைவிரித்தாடுகிறது என்பதை இந்த அமைச்சரின் பேச்சிலிருந்து அறிய முடிகிறது.
கேட்பதற்கு நாதியில்லை என்கிற ஆணவத்திலிருந்துதான் இன்னும் நூறு முள்ளிவாய்க்கால் படுகொலைகளைச் சந்திக்க நேரிடும் என்று வெளிப்படையாக அவர்களால் பேச முடிகிறது.
புலிகளால் மீண்டும் எழ முடியாது. தங்களுக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது என்கிற இறுமாப்பு அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இனவெறியன் சம்பிக்க ரணவக்கவை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தமிழ் மக்களை அச்சுறுத்தும் வகையில் தமிழ் மக்களுக்கு எதிரான இனவெறியைத் தூண்டும் வகையில் இவ்வாறு பேசியிருக்கிற அந்த அமைச்சரை இந்திய அரசும், தமிழக அரசும் மிக வன்மையாகக் கண்டிக்க வேண்டும் எனவும் விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.
அவ்வமைச்சரின் ஆணவமான இப்பேச்சைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் விடுதலைச் சிறுத்தைகள் அறவழியிலான ஆர்ப்பாட்டங்களை ஆங்காங்கே நடத்திட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
இவண்
தொல்.திருமாவளவன்
சிங்கள அமைச்சரின் இனவெறிப் பேச்சைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்!
பதிந்தவர்:
தம்பியன்
20 June 2012



0 Responses to சிங்கள அமைச்சரின் இனவெறிப் பேச்சைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்!