இடைக்கால நிர்வாகத்தை புலிகள் நிராகரிக்கவில்லை, தமிழர் விடுதலைக் கூட்டணியும் இதில் தவறிழைக்கவில்லை, உண்மையில் கிழக்கின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்த அரசாங்கம் இறுதியில் புலிகளும் கூட்டணியும் பெயரைத் தரவில்லை என கூறியது.
இந்த உண்மையினை பிரதேசவாதம் பேசுபவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என மூத்த அரசியல்வாதியும், தமிழ்தேசிய பற்றாளருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கிழக்கில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் ஆற்றிய உரையில் இடைக்கால நிர்வாகம் தொடர்பாக பேசியிருந்தார். இது தொடர்பாக கேட்டபோது மேற்படி உண்மைகளை அவர் குறிப்பிட்டுச் சொல்லியுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
ஜெயவர்த்தன அரசும் டிக்சிற் போன்றவர்களும், குறித்த இடைக்கால நிர்வாகத்திற்கு புலிகள் தரப்பிலிருந்து பெயர்கள் தரப்படவில்லை என குறிப்பிட்டு, புலிகள் தரப்பில் குற்றம் சுமத்தினர்.
இந்த கருத்தை அடிப்படையாகக் கொண்டு இடைக்கால நிர்வாகத்தை கைவிட்டது புலிகள் என்றும் பிரதேசவாதங்களும் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆனால் நடந்த உண்மையான சம்பவத்தை கண்ணால் கண்டுணர்ந்த சாட்சிகள் சில இன்றும் வாழ்கின்றன.
அவற்றில் நானும் ஒன்று. அதனடிப்படையில் பலாலியில் பிரபாகரன், யோகி, மாத்தையா போன்றவர்கள் டிக்சிற் போன்றவர்களை சந்தித்தபோது, 7 பேரின் பெயர்களை புலிகள் கொடுத்திருந்தனர். இந்த விபரம் அன்றைய தினம் மாலையே எமக்குத் தெரிவிக்கப்பட்டது.
மேலும் அன்றை தினம் இரவு 9மணிக்கு வந்த பிரகடனத்தில், மட்டக்களப்பு சார்ந்த காசி ஆனந்தன், ரூட்ரவி போன்றவர்களின் பெயர்களை நீக்கிவிட்டு மேலதிகமாக இருந்த இருவரை அந்தப்பட்டியலில் இணைத்துக் கொண்டது.
எனவே கிழக்கின் பிரதிநிதித்துவம் இன்றிய இடைக்கால நிர்வாகத்தை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் அன்று புலிகள் இருந்தனர். இந்தப் பிரகடனத்தில் கூட்டணியின் பெயரும் இடம்பெற்றிருந்தது.
எனவே பத்மநாதனை தெரிவு செய்வதென நாம் தீர்மானித்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்திருந்தோம். எனவே முக்கியமான திருப்பு முனையாக இருந்து இந்த இடைக்கால நிர்வாகத்தை புலிகள் ஏற்கமுடியாது போனதற்கு மட்டக்களப்பின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போனமையே காரணம்.
எனவே புலிகள் இந்த விடயத்தில் மிகவும் அவதானமாக இருந்தனர். அதனடிப்படையில் புலிகள் சந்தர்ப்பத்தை தவறவிடவில்லை.அது திட்டமிட்டு அரசாங்கத்தினாலும், இந்திய இராணுவ அதிகாரிகளாலும் சிதைக்கப்பட்டதே தவிர, புலிகளும், கூட்டணியும் வரலாற்றுச் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தியது.
இதற்கான ஆதாரங்கள் பத்திரிகைகளிலும் ஜனாதிபதி செயலகத்திலும் இருக்கும். மேலும் உயிருடன் சில சாட்சிகளும் இருக்கின்றன என தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் இடைக்கால நிர்வாகத்தை நிராகரிக்கவில்லை: சீ.வீ.கே.சிவஞானம் (காணொளி இணைப்பு)
பதிந்தவர்:
தம்பியன்
05 June 2012
0 Responses to விடுதலைப் புலிகள் இடைக்கால நிர்வாகத்தை நிராகரிக்கவில்லை: சீ.வீ.கே.சிவஞானம் (காணொளி இணைப்பு)