வரும் யூன் 15க்குள் 15 பேரை செங்கல்பட்டு சிறப்பு முகாமிலிருந்து விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். பிறகு ஒவ்வொரு மூன்று மாதத்திலும் 5 பேர் சிறப்பு முகாமிலிருந்து விடுதலையாவார்கள் என்று கொடுக்கப்பட்ட உறுதிமொழியை தமிழக அரசு அதிகாரிகள் காற்றில் பறக்கவிட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதியோடு 13 நாட்களாக உண்ணாநிலையை மேற்கொண்ட 15 பேர் தங்களது உண்ணாநிலையை கைவிட்டு காத்திருந்தனர்.
ஆனால், யூன் 14ம் தேதி வரை விடுதலைக்கான உறுதி மொழியை காப்பாற்ற எவ்வித நடவடிக்கையையும் எடுக்காத நிலையில், யூன் 15 காலை 9 மணி முதல், கொடுத்த உறுதி மொழியினை செயல்படுத்தும் வரை, செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகளில் 6 பேர் நீர் மட்டும் அருந்திய நிலையில் உண்ணாநிலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.
இதற்காக முறையாக மனுவை உயர் அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டுள்ளது.
உண்ணாநிலை மேற்கொள்ள தீர்மானித்துள்ள முகாம் வாசிகளின் பெயர்கள் வருமாறு:
1. செந்தூரன் (வயது : 31)
2. மதன் (வயது : 34)
3. ஜெயதாசன் (வயது : 34)
4. சதீஷ் குமார் (வயது : 28)
5. பாராபரன் (வயது : 39)
6. செல்வராஜ் (வயது : 42)
உண்ணாநிலை இருக்கவுள்ளவர்களில் மூன்று பேர் ஏற்கனவே நோயாளிகளாக உள்ளனர். இவர்கள் அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.
உண்ணாநிலை மேற்கொள்ள தீர்மானித்துள்ள ஆறு முகாம் வாசிகளும், தங்களுக்கு உணவுக்காக அரசு வழங்கி வரும் சம்பளப் படியையும் வாங்குவதில்லை என முடிவெடுத்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள வெளிநாட்டவர்களிடம் உரிய ஆவணம் இல்லையென்றாலும் அல்லது தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்புள்ளவராக கருதப்பட்டாலும், அவ்வாறானவர்களை, நீதி மன்றம் அல்லது பிணையில் விட்டாலும் தமிழக அரசின் சிறப்பு உளவுப்பிரிவான கியூ பிரிவு காவல் துறை அதிகாரிகள், தமிழக அரசின் சிறப்பு அனுமதி பெற்று சிறப்பு முகாமினுள் அடைக்கப்படுவார்கள். சிறப்பு முகாம்கள் தமிழகத்தில், இரண்டு இடங்களில் உள்ளன.
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் மொத்தம் 32 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 29 பேர் 2009-ல் இலங்கையின் இனப்படுகொலைக்கு பயந்து தாய் தமிழகத்திற்கு உயிரை காத்துக் கொள்ள தங்களது தாய் மண்ணை விட்டு புலம்பெயர்ந்து வந்தவர்கள். மீதமுள்ள மூன்று பேர் நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர்கள்.
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் ஈழத்தமிழர்களில் 29 முகாம் வாசிகளில், 8 பேர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு தற்போது வழக்கு எதுவும் நிலுவையில் இல்லாதவர்கள். மீதமுள்ள 21 பேருக்கு வழக்கிருந்த போதும், குற்றப் பத்திரிகை வழங்காமலும் அல்லது நீதி மன்ற விசாரணைக்கோ கொண்டும் செல்லப்படுவதில்லை.
இந்நிலையில் சென்ற முறை அரசு அதிகாரிகளால் கொடுக்கப்பட்ட உறுதிமொழிகளை உடனடியாக நிறைவேற்றித் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் பொருட்டு உண்ணாநிலையை மேற்கொள்ள உள்ளனர்.
உலகத் தமிழர்கள், தமிழகத்தில் உள்ள ஊடகங்கள், தமிழீழ ஆதரவாளர்கள், தமிழ் உணர்வாளர்கள், மனித உரிமை அமைப்பினர் என எல்லோரது ஆதரவையும் நாடு அதே வேளை, இம்முறை தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை உறுதியாக உண்ணாநிலையை நிறுத்தப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.
விடுதலை உறுதிமொழியினை காற்றில் பறக்கவிட்ட தமிழக அரசு அதிகாரிகள்! உறுதியான உண்ணாநிலையில் முகாம் வாசிகள்!!
பதிந்தவர்:
ஈழப்பிரியா
15 June 2012



0 Responses to விடுதலை உறுதிமொழியினை காற்றில் பறக்கவிட்ட தமிழக அரசு அதிகாரிகள்! உறுதியான உண்ணாநிலையில் முகாம் வாசிகள்!!