ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் பிரணாப் முகர்ஜி போட்டியிடுவார் என்று அக்கூட்டணியின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் இல்லத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தவிர, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்திராகாந்தி அமைச்சரவை முதல் மன்மோகன் சிங் அமைச்சரவை பதவி வகித்தவர் பிரணாப் முகர்ஜி. நிதி, பாதுகாப்பு, வெளியுறவு ஆகிய துறைகளில் பொறுப்பு வகித்துள்ளார்
பொது வாழ்வில் நீண்ட அனுபவம் கொண்டவர் பிரணாப் முகர்ஜி. அவரை ஆதரிக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளுக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரணாப் முகர்ஜிக்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, குடியரசுத் தலைவர் பதவிக்கு மிகச் சிறந்த வேட்பாளர் பிரணாப் முகர்ஜி தகுதியானவர் என்றார்.
பிரணாப் முகர்ஜிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திமுக எம்பி டி.ஆர்.பாலு உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரணாப் முகர்ஜியை ஆதரிக்குமாறு, பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜுடன், பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டார். பிரணாப் முகர்ஜி பெயர் அறிவிக்கப்பட்டதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கும் என்று பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.



0 Responses to ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி! ஐ.மு.கூ. கூட்டத்தில் முடிவு!