Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இயற்கை எழில் கொஞ்சும் திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பிரதேசத்தில் சகல வசதிகளுடனும் தமது விளைநிலத்தில் சொந்தமாக வேளாண்மை செய்தும், தமது கடற் பிரதேசத்தில் சுதந்திரமாக மீன்பிடித்தும் தங்களது வாழ்வாதாரத்தைப் பெருக்கிக்கொண்டு வாழ்ந்துவந்த மக்களின் வாழ்வில் பேரிடி விழுந்து ஆறு வருடங்கள் ஆகின்றன.

இப்பொழுது அப்பிரதேசத்து மக்கள் செய்வதறியாது நடுத்தெருவில் தவிக்கின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அதன் உத்தியோகபூர்வ பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரனும், வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும். கடந்த ஆம் திகதி கிளிவெட்டியில் உள்ள இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள சம்பூர் பிரதேசத்து மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினர்.

இவர்கள் கொட்டப்பட்டிருக்கும் பிரதேசத்திற்கும் கடலுக்கும் சுமார் முப்பது கிலோமீட்டர் தூரம் உள்ளது. வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் கூலி வேலையும் கிட்டவில்லை. மேலே குறிப்பிட்டதைப் போன்று சகல வசதிகளையும் தேடிக்கொண்டு சுகபோக வாழ்க்கையை அனுபவித்து வந்த சம்பூர் மக்கள் இன்று தங்களது காணிகளைக்கூட அடையாளம் காணமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருந்த வீடுகள் முற்றுமுழுதாக இடிக்கப்பட்டு, இவர்களது வளவுகளில் இருந்த மரங்கள் வேருடன் சாய்க்கப்பட்டு, வீட்டின் பின்புறமாகத் தோண்டப்பட்ட பாதாளக்குழிகளில் தள்ளப்பட்டு, மண்போட்டு மூடப்பட்டுள்ளது. ஆக கிட்டத்தட்ட செயற்கையான பூமிப்பிளவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் பாடசாலையும், வழிபாட்டுத்தலங்களும் கூட அடங்கும்.

'அன்னசாலைகள் ஆயிரம் அமைத்தலும், ஆலயம் பதினாயிரம் செய்தலும் ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தலே சிறந்த அறம்' என்று கல்வியின் பெருமையையும் அவசியத்தையும் போதித்தான பாரதி. ஆனால் சம்பூரில் இருந்த பாடசாலையையும் அழித்து கல்விக்குப் பெருமை சேர்ந்துள்ளது இலங்கை அரசு. இது ஆசியாவின் ஆச்சர்யம்தான்.

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றனர் எமது ஆன்றோர்கள். ஆனால் இவர்கள் இருக்கின்ற கோயிலையும் இடித்துத் தள்ளியள்ளனர். எத்தனை பெரிய சாதனை இது? ஓகோ தமிழினத்தின் அடையாளத்தை அழிப்பதுதான் இலங்கையின் பகுத்தறிவுக் கொள்கை போலும்.

பத்துதர பத்தடி தகரக் கொட்டிலில் சம்பூர் மக்களைத் திறந்த வெளிச் சிறைச்சாலையில் அடைத்து வைத்துள்ளது இந்த அரசாங்கம். வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் மூதாட்டிகளும் வயது முதிர்ந்த ஆண்களும் வெளியில் மரநிழலில் தஞ்சம் புகுகின்றனர். இரவில் சற்றும் பாதுகாப்பற்ற சூழலிலேயே இவர்கள் தமது வாழ்க்கையைக் கொண்டு செலுத்துகின்றனர். புற்றுநோயால் தனது கணவனை இழந்த ஒரு பெண் தனது இரண்டு பிள்ளைகளைக் கரைசேர்ப்பதற்கு வழிதெரியாமல் தவிக்கின்றார்.

இந்தக் கொட்டிலில்தான் இவர்களது சமையலறை, படுக்கையறை, உணவு உட்கொள்ளும் அறை, வரவேற்பறை, மாணவர்களுக்கான படிப்பறை என்ற அனைத்தும் அடங்குகின்றன. இதனால் இவர்களது குடும்ப அந்தரங்கம் கேள்விக்குறியாகியுள்ளது. குடிசைகள் அடுத்தடுத்து அமைந்துள்ளதால் குடும்ப இரகசியங்கள் பேணமுடியாதுள்ளது. தமது வீடுகளில் இவர்கள் இருந்த இருப்பையும் இப்பொழுது வாழ்கின்ற வாழ்க்கையையும் சம்பூர் மக்கள் ஏக்கத்துடன் ஒப்பீடு செய்கின்றனர்.

எப்படியாவது எங்களைப் பிச்சையெடுக்க வைக்க வேண்டும் என்பதில் இந்த அரசாங்கம் முடிவெடுத்துச் செயற்படுவதாகவே எமக்குத் தோன்றுகின்றது. நாங்கள் எங்களைத் தேடி வந்தவர்களுக்குச் சோறுபோட்டவர்கள் எத்தனை துன்பம் வந்தாலும் பிச்சையெடுக்கின்ற கேவலத்தை மட்டும் நாங்கள் செய்ய மாட்டோம் என்றார் ஒரு முதியவர். தள்ளாத வயதிலும் அவரது தன்னம்பிக்கை எமக்கு ஆச்சரியமூட்டுவதாக அமைந்தது.

பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு முகாம்களுக்கருகாமையில் உள்ள பாடசாலைகளில் படிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொழில் வாய்ப்பு ஏதுமின்றி நாளாந்தம் ஒரு வேளை உணவிற்குக் கூட உத்தரவாதமின்றி இருக்கும் குடும்பச் சூழலில் உள்ள பிள்ளைகள் எவ்வாறு நிம்மதியாகத் தமது கல்வியைத் தொடர முடியும்? சில பிள்ளைகள் பாடசாலையில் மயங்கி விழுந்து விடுவதாகக்கூடத் தெரிகிறது. பிள்ளைகள் காலணிகள்கூட இல்லாமல் பாடசாலைக்குச் செல்கின்றனர்.

மழையோ அல்லது காற்றுடன் கூடிய மழையோ பெய்தால் இவர்களது நிலை மிகவும் பரிதாபம். ஏற்கனவே இவர்களது தகரக் கொட்டில்கள் உக்கிப்போய் எந்நேரமும் சரிந்துவிழக்கூடிய நிலையில் உள்ளது.

இதேவேளை முகாமில் இருந்த ஒருவர் தெரிவிக்கையில், மலசலக் கூடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் இப்பொழுது பிரதேசசபை அதனைத் திருத்திக்கொடுப்பதாகவும் இடம்பெயர்ந்த ஒருவர் தெரிவித்தார். நாள்தோறும் பவுசர்களில் தண்ணீர் வழங்கப்படுவதாகவும் மேலதிகத் தேவைகளுக்கான நீரை அருகில் இருக்கும் ஆற்றிலிருந்து எடுத்து வருவதாக தெரிவித்தார்.

அவர்களை இங்கிருந்தும் அகற்றும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் அரசாங்கம், வாழ்வதற்கே தகுதியற்ற நிலங்களைக் காட்டி நீங்கள் இங்குதான் தங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஆனால் சம்பூர் மக்கள் தங்களது இடத்தைத் தவிர வேறு எங்கும் தம்மால் குடியேற முடியாது என்று திட்டவட்டமாக மறுத்து வருகின்றனர்.

இதனால் அவர்களை இப்பொழுது வசிக்கின்ற இடத்திலிருந்து அப்புறப்படுத்தும் நோக்கில், அவர்களுக்கான உலர் உணவுக் கொடுப்பனவுகளை அரசாங்கம் நிறுத்தியுள்ளது. மீள்குடியேற்றம் முடிவுற்று ஆறுமாதங்களின் பின்னரே உலர் உணவுகள் நிறுத்தப்படுவது வழக்கம். ஆனால் இடைத்தங்கல் முகாமிலேயே இவர்களுக்கான உலர் உணவுக் கெடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் பட்டினிபோட்டு மக்களைப் பணிய வைக்க அரசாங்கம் முயற்சிப்பதாகத் தெரிகின்றது.

இத்தகைய இடநெருக்கடிக்கு மத்தியிலும் இடம்பெயர்ந்து வாழும் சம்பூர்வாழ் தமிழ்ப் பிள்ளைகள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி தமது பல்கலைக்கழக அனுமதியைப் பெற்று பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு அதனை தமது வாழ்க்கைக்கான சவாலாக எடுத்துக்கொண்டு துணிவுடனும் தன்னம்பிக்கையுடனும் எதிர்கொள்கின்றனர்.

தினமும் சாப்பாட்டிற்கே சிரமப்படுகின்ற பெற்றோர்களால் தமது பிள்ளைகளின் கல்விக்கு உதவ முடியாமல் ஒரு புறமும் அவர்களது படிப்பை இடைநிறுத்திவிடக் கூடாது என்று மறுபுறமாகவும் மிகுந்த கவலையுடன் உள்ளனர். அவர்களது படிப்புச் செலவிற்காகவும், தங்குமிடம் மற்றும் ஏனைய தேவைகளுக்காகவும் மாதந்தோறும் பத்தாயிரம் ரூபாய்வரை தேவைப்படுவதாகக் கூறுகின்ற பல்கலைக்கழக மாணவ மாணவியர் செய்வதறியாது தவிக்கின்றனர்.

இவர்களது கல்விச்செலவிற்கும் மக்களின் உணவுப் பிரச்சினைக்கும் தீர்வு காண்பதற்கு எமது நல்லுள்ளங்கள் முன்வர வேண்டும்.

கடந்தமுறை நடைபெற்ற கிழக்குமாகாணத் தேர்தலின்போது வாக்குக் கேட்பதற்கு இம்மக்களை அணுகிய கிழக்கு மாகாணத்தின் முன்னால் முதல்வர், தான் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக இம்மக்களை சொந்த இடத்தில் குடியேற்றுவதாக வாக்குறுதி அளித்தார். அப்போது இந்த மக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கியிருந்துள்ளனர்.

ஆனால், இவர் பதவியேற்றதும் முதல் வேலையாக மட்டக்களப்பில் இருந்த இந்த மக்களை உடனடியாக அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றி இப்பகுதியில் கொண்டுவந்து கொட்டிவிட்டுச் சென்றுள்ளார்.

வேலை செய்வதற்கான சூழலின்றி, வருமானத்திற்கு வழியின்றி பலர் தம்மிடம் இருந்த பொருட்களை விற்று அதனைக்கொண்டு இவ்வளவு காலமும் வாழ்க்கையை நடத்திவிட்டனர். இனி வைப்பதற்கோ, விற்பதற்கோ ஏதுமில்லை. கடன் கொடுப்பதற்கும் யாருமில்லை, கேட்பதற்கும் வழியில்லை. எம்மில் அநேகர் கடன்சுமையால் வாடுகின்றோம்.

இந்நிலை தொடர்ந்தால் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறுவழியில்லை சிலர் அதனை முயற்சித்தும் பார்த்துவிட்டனர். தக்க தருணத்தில் தலையிட்டதால் அவர்கள் காப்பாற்றப்பட்டனர் என்றார் ஒருவர். மூன்றுவேளை உணவையும் ஒரே வேளையில் மாலை 4மணிக்குமேல் உட்கொள்வதாகவும் சிலர் தெரிவித்தனர்.

தங்களது பிரதிநிதிகளிடம் பேசுவதற்கே எமது மக்கள் அஞ்சுகின்றனர். நாங்கள் சென்றவுடனேயே இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும், இராணுவ சீருடை அணிந்த சிப்பாயும், ஒரு காவலர்துறை ஊழியரும் அங்கு வந்துவிட்டனர். எமது மக்கள் எம்முடன் என்ன பேசுகிறார்கள் என்பதை அவர்கள் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கின்றனர். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. நாங்கள் மக்கள் பிரதிநிதிகள். எமது மக்கள் சாலை ஓரங்களில் ஓட்டைக் கொட்டிலில் குடியிருக்கும்போது அவர்களைப் பார்ப்பதும் அவர்களது நிலையை அறிவதும், அவர்களது குறையைக் கேட்பதும், அவர்களது தேவைகளைத் தெரிந்துகொள்வதும் எமது கடமை. அந்தவகையில், நாம் எமது கடமையைச் செய்யும்போது அதற்கு இடைஞ்சல் செய்யும் விதத்தில் அவர்களது பிரசன்னம் அமைந்தது.

மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான மின்நிலையங்கள் எமக்குத் தேவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இதற்காக எமது மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு, அவர்கள் அனாதராவாக விடப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து, சொந்தப் பிரதேசத்திலேயே அகதிகளாக்கப்பட்டு அந்த இடத்தில்தான் அந்த மின்சார உற்பத்தி நிலையம் வரவேண்டும் என்றால் அப்படியொரு மின்சார உற்பத்தி நிலையம் எமக்குத் தேவையில்லை என்பதுதான் எமது நிலைப்பாடு.

இந்நாட்டில் மக்கள் நடமாற்றமட்ட எத்தனோயோ காணிகள் உள்ளன. அப்படியொரு காணியில் புதிய மின்சார உற்பத்தி நிலையத்தைத் தாபிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள முடியும். அதனைச் செய்வதற்கு இந்த அரசாங்கம் முன்வரவேண்டும். இனியும் தாமதிக்காமல் சம்பூர் மக்களைத் திரும்பவும் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்ற வேண்டும்.

மின்சார உற்பத்தி நிலையம் தொடங்கப்பட்டவுடன் வழங்குவதற்கு உத்தேசித்துள்ள எந்த உதவியும் இந்த மக்களுக்குத் தேவையில்லை. அதற்குப் பதிலாக அவர்கள் குடியிருந்த காணிகளில் அவர்களது வீடுகளில் அவர்களை நிம்மதியுடன் வாழவிடுங்கள். அதுவே நீங்கள் அவர்களுக்குச் செய்யும் பேருதவி.

தங்களது இந்த அடிப்படை உரிமையைப் பெற்றுக்கொள்வதற்கே கூட அவர்கள் தமது வாக்குரிமையைத் துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இம்மக்கள் மீள்குடியேற்றப்படும்வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்நாட்டின் ஏனைய ஜனநாயக முற்போக்குச் சக்திகளை இணைத்துக்கொண்டு தொடர்ந்தும் குரல் கொடுக்கும்.

தங்களைச் சந்திக்க வருபவர்கள் முகாமிற்கு முன்புறமுள்ள இராணுவ காவலரணில் அறிவித்துவிட்டே தங்களைச் சந்திக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாகவும், தொண்டு நிறுவனங்கள் உதவ முன்வந்தாலும் தடுத்து நிறுத்தப்படுவதாகவும் தெரியவருகிறது.

தங்களது குறைகளை தமது வழிபடும் தெய்வமான காளியிடம் செவ்வாய்க்கிழமைகளில் முறையிட்டு வந்த மக்கள் இப்பொழுது அதற்கும் வழியின்றித் தவிக்கின்றனர். நாங்கள் எங்கள் அம்மாவைப் பிரிந்ததேயில்லை. ஆனால் இன்று எங்கள் அம்மா எங்களைப் பிரிந்து உணவின்றி இருக்கின்றாள். எங்களது துயரமும் நாங்கள் வடிக்கும் கண்ணீரும் அவளுக்குத் தெரியும். நாங்கள் அவளின் அருளால்தான் உயிர்வாழ்கின்றோம் என்றார் இடைத்தங்கல் முகாம்வாசி ஒருவர்.

வடக்கிலும் - கிழக்கிலும் வாழ்வாதாரத்தைப் பறிந்து, அவர்களது பூர்வீகக் காணிகளைப் பறித்து அநாதரவாக விடப்பட்ட எமது மக்களை மீண்டும் அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்துவதும் சிறைச்சாலைகளில்கூட பாதுகாப்பற்று இருக்கும் எமது அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிப்பதும், காணாமல் போயுள்ளவர்களின் நிலை தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து பொறுப்பான பதிலைப் பெற்றுக்கொள்வதும், எமது நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொள்வதுமே இன்று எம்முன்னுள்ள பாரிய கடமையாகும்.

அதனைச் செய்வதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் தங்களது கட்சி அரசியலை மறந்து விரைவாகவும், விவேகமாகவும், சுறுசுறுப்புடனும் செயலாற்ற வேண்டும் என்று கூறினர்.

0 Responses to சம்பூர் மக்களின் அவல வாழ்வுக்கு விடிவுகிட்டுமா! அம்மக்களின் தற்கொலை எண்ணம் தடுத்து நிறுத்தப்படுமா?- நேரடி ரிப்போர்ட்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com