சோனியா காந்திக்கு நான் பதவிப் பிரமாணம் செய்து வைக்கத் தயாராக இருந்தேன் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார். ஆனால் அவர் உண்மையைப் பேச வேண்டும், தயங்காமல் பேச வேண்டும். வரலாற்றுக்கு அவர் தவறிழைத்து விடக் கூடாது என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளார்.
நான் சோனியா காந்திக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கத் தயாராகத்தான் இருந்தேன். ஆனால், அவரோ யாருமே எதிர்பார்த்திராத மன்மோகன் சிங்கின் பெயரைக் கூறினார் என்று தனது எதிர் வரும் புதிய நூலில் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.
சோனியா காந்தி பிரதமராவதை அப்துல் கலாம்தான் தடுத்தார் என்று காங்கிரஸார் மத்தியில் பேச்சு இருந்து வரும் நிலையில் கலாமின் இந்தக் கூற்று புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கலாம் உண்மை பேச வேண்டும் என்று சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளார். ஹாங்காங்கிலிருந்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், வரலாற்றுக்கு உண்மையானவராக கலாம் இருக்க வேண்டும். வரலாற்றை மாற்ற முயலக் கூடாது.
சோனியா காந்திக்கு 2004ம் ஆண்டு மே 17ம் தேதி மாலை 3.30 மணிக்கு ஒரு கடிதத்தை அனுப்பினார் அப்துல் கலாம். அந்தக் கடிதத்தை அவர் முழுமையாக வெளியிட முன்வர வேண்டும். அது வெளியானால், பிரதமர் பதவிக்கு நீங்கள் நிறுத்தப்பட்டால் அந்த முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கலாம் கூறியது வெளிச்சத்திற்கு வரும்.
தனது கடிதத்தை கலாம் பகிரங்கமாக வெளியிட்டால் அவர் மீதான நம்பகத்தன்மை மேலும் அதிகரிக்கும். இந்தக் கடிதத்திற்கு மேலும் இரண்டு சாட்சிகள் உள்ளனர். ஒருவர் பிரதமர் மன்மோகன் சிங், இன்னொருவர் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர்சிங். அவர்கள் இருவருக்கும் மட்டுமே இந்தக் கடிதம் குறித்துத் தெரியும்.
சோனியா காந்தியின் பெயர் பிரதமர் பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்ட தகவல் கிடைத்தவுடன் நான் அன்று பிற்பகல் 12.30 மணிக்கு அப்துல் கலாமை ராஷ்டிரபதி பவனில் சந்தித்தேன். அப்போது சோனியாவை பிரதமராக்கினால் பெரும் சட்ட சிக்கல்கள் எழும் என்பதை அவரிடம் விளக்கினேன். பல சட்ட தடங்கல்கள் இருப்பதையும் அவருக்கு விவரித்தேன்.
இதையடுத்து அன்று மாலை 5 மணிக்கு சோனியா காந்திக்கு தான் கொடுத்திருந்த அப்பாயிண்ட்மென்ட்டை கலாம் ரத்து செய்தார். இதுதான் நடந்த உண்மை. எனவே அப்துல் கலாம் தயவு செய்து தனது கடிதத்தை வெளியிட வேண்டும். அப்போதுதான் அவர் வரலாற்றுக்கு உண்மையானவராக இருக்க முடியும் என்றார் சாமி.
சோனியா காந்தி இந்தியக் குடியுரிமை பெற்றவராக இருந்தாலும் கூட அவர் சட்டப்படி இன்னும் இத்தாலியர்தான். எனவே அவருக்குப் பிரதமர் பதவியை அளிக்கக் கூடாது என்று பி.ஏ.சங்மா, சுப்பிரமணியம் சாமி உள்ளிட்ட பலரும் பாஜக உள்ளிட்ட கட்சிகளும் அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு கோரிக்கை வைத்து அழுத்தம் கொடுத்தன என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் அப்துல் கலாம் தான் எழுதியுள்ள புதிய நூலில் இதுகுறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார். ஆனால் அவர் உண்மையை மறைப்பதாக சாமி கூறியுள்ளார்.
0 Responses to சோனியா விவகாரத்தில் கலாம் உண்மையை பேச வேண்டும்: சாமி