சிங்கள இனவெறி அரசின் இராணுவத்தினருக்கு சென்னை தாம்பரத்தில், இராணுவ தொழில்நுட்பப் பயிற்சி அளிக்க இந்திய அரசு ஏற்பாடு செய்துள்ளதை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிப்பதோடு, சிங்கள இராணுவத்தினரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த 2009 மே மாதம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் போரில் தமிழின மக்களை லட்சக் கணக்கில் கொன்று குவித்த சிங்கள இனவெறி அரசுக்கு, தொடர்ச்சியாக இந்திய அரசு துணை போவது தமிழினத்திற்கு எதிரான நடவடிக்கையாகும்.
போரின்போது சிங்கள இனவெறி அரசுக்கு இந்தியா பல்வேறு வகைகளில் உதவி செய்துள்ளது. ஒரு மாபெரும் இன அழிப்பைச் செய்து, சர்வதேசப் போர்க் குற்றவாளி என அனைத்துலக நாடுகளின் கண்டனத்துக்குள்ளாகியுள்ள சிங்கள அரசின் இராணுவத்தினருக்கு இந்தியாவில், அதுவும் தமிழகத்தில் இராணுவப் பயிற்சி அளிப்பதற்கு இந்திய அரசு அனுமதித்திருக்கிறது.
மேலும், இலங்கையிலிருந்து தமிழகம் வருபவர்கள் குறித்த தகவல்களை தமிழக அரசுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஏற்கனவே சுட்டிக்காட்டியும்கூட, தமிழக அரசுக்குத் தெரிவிக்காமல், தமிழகத்தில் சிங்கள இராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்க இந்திய அரசு அனுமதி அளித்திருப்பது, தமிழக மக்களுக்கும், தமிழக அரசுக்கும் விரோதமான இந்திய அரசின் போக்கையும் தமிழக அரசையும் ஒரு பொருட்டாகவே மதிக்காத இந்திய அரசின் நிலைப்பாட்டையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
முள்வேலி முகாம்களுக்கும் தமிழர்கள் மீதான அடக்குமுறை, தமிழகத்தில் சந்தேகத்தின் பேரில் சிறப்பு முகாம்களில் ஈழத் தமிழர்கள் அடைத்து வைக்கப்படும் கொடுமை, தமிழக மீனவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் என தொடர்ந்து தமிழினத்திற்கு எதிராகச் செயல்படும் இந்திய அரசின் போக்கை கண்டிக்கிறோம்.
இராணுவப் பயிற்சிக்காக தமிழகம் வந்துள்ள சிங்கள இராணுவத்தினரை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் இல்லையேல் விடுதலைச் சிறுத்தைகள் அவர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்று எச்சரிக்கிறோம் என தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பயிற்சிபெறும் சிங்கள இராணுவத்தினரை திருப்பி அனுப்பவேண்டும்: தொல்.திருமாவளவன் அறிக்கை
பதிந்தவர்:
ஈழப்பிரியா
05 July 2012
0 Responses to தமிழகத்தில் பயிற்சிபெறும் சிங்கள இராணுவத்தினரை திருப்பி அனுப்பவேண்டும்: தொல்.திருமாவளவன் அறிக்கை