கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழருமான ராதிகா சிற்சபேசனுக்கு லண்டனின் வி.கே.கிருஷ்ண மேனன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வி.கே.கிருஷ்ண மேனன் இன்ஸ்டிடியூட்டின் இயக்குனர் டாக்டர் Cyriac Maprayil தெரிவிக்கையில், மனித உரிமைகளுக்கு தைரியமாக போராடிய இளம்பெண் என்ற வகையில் அதனை பாராட்டுவதற்காக இவருக்கு இந்த ஆண்டுக்கான வி.கே.கிருஷ்ண மேனன் விருதை தமது நிறுவனம் அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2006ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இவ்விருது அரசியல், பொருளாதாரம், இலக்கியம், அறிவியல், மனித உரிமை போன்ற துறைகளில் சிறந்து சேவை ஆற்றுபவர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.
இலங்கையில் பிறந்து வளர்ந்து ராதிகா சிற்சபேசன், தனது குடும்பத்தினருடன் 5வயதில் கனடாவில் குடியேறியவர். இலங்கையின் தனது சக தமிழர்கள் உட்பட சிறுபான்மையினத்தவர் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராகவும், மனித உரிமைகள் மேம்பாட்டுக்காகவும் பாடுபட்டு வந்த அவர், கனடாவில் இடம்பெற்ற பொது தேர்தலில் புதிய ஜனநாயக கட்சி சார்பில், போட்டியிட்டு வெற்றி பெற்று, கனேடிய பாராளுமன்றம் செல்லும் முதல் தமிழராக சாதனை படைத்திருந்தார். பதவியேற்பின் போது நாடாளுமன்றத்தில் முதலில் தமிழில் உரையாற்றிய பின்னர் அவர் ஆங்கில மொழியில் உரையாற்றியிருந்தார்.
ஜகவர்லால் நேருவின் அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் வி.கே.கிருஷ்ண மேனன். இந்தியாவுக்கும், பிரித்தானியாவுக்கும் இடையே உறவுகள் மேம்படவும், கலை, இலக்கியம், பொருளாதாரம், சமூகம், கல்வி முதலிய துறைகளில் பரஸ்பர புரிந்துணர்வு ஏற்படவும், இந்தியன் லீக் எனும் தன்னார்வ அமைப்பை அவர் லண்டனில் உருவாக்கினார். இதன் சார்பிலேயே வி.கே.கிருஷ்ணமேனன் இன்ஸ்டிடியூட் எனும் குறித்த உயர் கல்வி நிறுவனம் லண்டனில் செயற்பட்டு வருகிறது.
0 Responses to ராதிகா சிற்சபேசனுக்கு வி.கே.கிருஷ்ண மேனன் விருது