பிரான்சில் பாரிசு மத்தியல் அமைந்திருக்கும் சோதியா கலைக்கல்லூரி தனது
23 வது ஆண்டு நிறைவினை 08.12.2012.சனிக்கிழமை காலை 11.00 மணிமுதல் இரவு
21.00 மணிவரை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
பிரான்சில் ஏனைய தமிழ்ப்பாடசாலைகளுக்கு, முன்மாதிரியாகவும் கடந்த 23
வருடங்களாகவும் இயங்கி வரும் சோதியா கலைக்கல்லூரி காலை 10.30 மணிக்கு
தமிழர்களின் பாரம்பரிய நடனமான இனியம் அணியுடன் சிறப்பு விருந்தினர்,
மாவீரர் குடும்பத்தினர், நிர்வாகிகள், ஆசிரியர்கள் சகிதம் அழைத்து
வரப்பட்டு வீரவேங்கை மாவீரர் கேணல்.பரிதி அவர்களின் பெற்றோர்கள்
ஈகைச்சுடரினை ஏற்றி வைக்க மாவீரர். மேஐர் சோதியாவின் திருவுருவப்படத்திற்கு
கேணல் பரிதி அவர்களின் மகளும், கேணல் பரிதியின் படத்திற்கு துணைவியாரும்
மலர் மாலையை அணிவித்தனர். அகவணக்கம் செலுத்தப்பட்டது. மங்கல விளக்கேற்றலினை
நிர்வாகிகள் ஏற்றி வைத்தனர்.
தமிழ்ச்சோலைக்கீதம் மாணவ மாணவிகளால் பாடப்பட்டு, வரவேற்புரையும்
அதனைத்தொடர்ந்து புஸ்பாஞ்சலி நடனம், அபிநயப்பாடல், கவிதை, பாட்டு, வாத்திய
இசை, விடுதலைப்பாடல் நடனங்கள், எழுச்சி நடனங்கள், பாரதியார் பாடல்,
தாளலயம், மிருதங்க இசை, சுரத்தட்டு இசை, கிராமிய நடனம், கரத்தே நிகழ்வு,
ஆங்கிலப்பேச்சு, வயலின் இசை, நாட்டிய நாடகம், கலைத்திறன் போட்டியில் வெற்றி
பெற்றோர்களுக்கான மதிப்பளித்தல், சிறப்புரை போன்ற இடம் பெற்றன.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக டென்மார்க்கில் இருந்து திரு. பொன்
மகேசுவரன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில் எமது
புலம் பெயர் வாழ்வில் தமிழ்மொழியின் முக்கியத்துவமும், அதற்காக
தாய்மண்ணிலும், புலத்திலும் கொடுக்கப்படும் உயிர் கொடைகளும், 2009 ம்
ஆண்டிற்கு முன்பும், பின்பும் இருக்க எமது அரசியல் நிலைப்பாடுகளும், அதில்
எம்மவர்கள் சிலரின் நிலைப்பாடும் எவ்வாறு உள்ளது என்பதை மிகத்தெளிவாக
விளக்கியிருந்ததோடு அடுத்த கட்டமாக இன்றைய தாயகத்தின் பல்கலைக்கழக
மாணவர்களின் எழுச்சியும், அதனோடு சேர்ந்து புலம் பெயர்ந்த தமிழ் மக்கள்
நாமும் பயனிக்க வேண்டிய தேவையையும் தெளிவு படுத்தியிருந்தார்.
ஆசிரியர்களுக்கான மதிப்பளித்தலினை இளைப்பாறிய தலைமை ஆசிரியரும் தமிழர்
ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளருமரிய திரு. சத்தியதாசன் அவர்கள்
வழங்கியிருந்தார். சோதியா கலைக்கல்லாரியில் 374 பிள்ளைகள் கற்று வருவதும்,
அனைவருக்கும் நிகழ்வில் பங்கு கொள்ள வைத்தமையும், உற்சாகத்துடன்,
சந்தோசத்துடன் குழந்தைகள் கலந்து கொண்டமையும், நிகழ்வின் இறுதிவரை
பெற்றோர்கள் இருந்து கண்டு களித்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
மண்டபத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
0 Responses to பிரான்சில் சோதியா கலைக்கல்லூரியின் 23 வது ஆண்டு விழா