Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இளவாகை சூடிய இளவல்

பதிந்தவர்: தம்பியன் 03 January 2013

கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியம் கடந்த டிசம்பர் 30. 2012 அன்று நடைபெற்ற தனது Top Talents விருது விழாவில் 'இளவாகை' என்னும் விருதினை அறிவித்திருந்தது.  இவ்விருது இளையோர் மத்தியில் அதியுயர் விருதாக கருதப்படும் என்றும், இளையவர் ஒருவரால் மிகவும் முக்கியமான சாதனையோ அல்லது செயலோ தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும், தமிழர் தேசத்திற்கும் நிகழ்த்தப்படும் வகையில் மட்டுமே இவ்விருது வழங்கப்படும் என்றும் கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியம் தனது செய்தியில் தெரிவித்துள்ளது.

'வாகை' என்னும் சொல் தமிழர் இலக்கியங்களிலும் வரலாற்றிலும் மிகவும் ஒன்றிப் பிணைந்த சொல்லாகவே காணப்படுகின்றது.  இச்சொல்லுக்கு வெற்றி என்றும் ஒரு பொருள் உள்ளது.  சங்ககால இலக்கிய நூல்கள் பல, பாலை நில மக்கள் தமது வெற்றியை குறிக்கும் முகமாக வாகைப்பூ சூடும் மரபைக் கொண்டிருந்தனர் என்பதை எடுத்துக் காட்டுகின்றன.  இத்துடன் தமிழீழ தேசத்தின் தேசிய மரமாகவும் வாகை மரம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது அனைவரும் அறிந்த ஒன்று.  இவ்விருது இளையோரைக் குறிப்பதால் 'இள' என்னும் சொல்லும் சேர்க்கப்பட்டு 'இளவாகை' என்று அழைக்கப்படுகின்றது.

முதன்முறையாக வழங்கப்படும் இந்த 'இளவாகை' விருது ஒரு முக்கிய சாதனை புரிந்த இளையவர் ஒருவருக்கு வழங்கப்பட்டது.  இவ்வாண்டு உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழ் இளையோர் இணைந்து 'உலகளாவிய தமிழ் இளையோர் அவையின்' மூலம் தமிழீழ உதைப்பந்தாட்டக் கழகத்தினை ஒழுங்கு செய்திருந்தனர்.  தமிழீழ உதைப்பந்தாட்டக் கழகம் ஈராக் நாட்டிற்கு வட  பிராந்தியத்தில் உள்ள 'குர்டிஸ்தானில்' நடைபெற்ற VIVA 2012 என்னும் அனைத்துலக கால்ப்பந்துப் போட்டியில் கடந்த ஜூன் மாதம் 2012இல் கலந்து கொண்டது.  இப்போட்டியிலே தமிழீழத்திற்காக  முதலாவது 'கோல்' (Goal)அடித்து சாதனை செய்த விளையாட்டு வீரர் மேனன் நகுலேந்திரன் என்பவர் கனடா நாட்டில் வசித்து வரும் ஒரு இளைஞன் ஆவார்.  இவருக்கே இந்த 'இளவாகை' விருது வழங்கப்பட்டது.

தமிழர் வரலாற்றை நோக்கும் பொழுது தமிழையும் தமிழரையும் காத்து நின்ற ஒவ்வொரு தலைவர்களும் பாகுபாடற்ற முறையில் திறமைகளைப் பாராட்டி ஊக்கப்படுத்தி அவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து வளர்த்ததை நாம் எமது வரலாற்று நூல்களிலும் அண்மைக்காலங்களில் எமது கண்முன்னேயும் காணக்கூடியதாக இருந்தது.  அந்த வகையில் இளையோரும் தம்மத்தியில் வளர்ந்து வரும் சக இளையோரை ஊக்குவிப்பதற்காக இவ்விருதுகளை ஒழுங்கு செய்வதுள்ளனர்.

0 Responses to இளவாகை சூடிய இளவல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com