ஈழத்தமிழினத்தின் சுய நிர்ணயத்திற்கான நீண்ட விடுதலைப் போராட்ட வரலாற்றில்; ஓய்வில்லாது வீசிய பெரும் புயல் கேணல் கிட்டு. தமிழீழப்போராட்டக்களத்தில் தனிமனித சரித்திரமாய் திகழ்ந்த மூத்த தளபதி கேணல் கிட்டு ஒரு காலத்தின் பதிவு.
வங்கக்கடலில் சங்கமித்து 20 ஆண்டுகள் ஓடிமறைந்து போயினும் அந்த வரலாற்று நாயகனின் நினைவலைகள் அவர் பதித்துச் சென்ற தடங்கள் தமிழீழத் தேசிய ஆன்மாவில் ஆழவேரூன்றிச் சென்றிருக்கிறது.
எங்கள் தேசத்தின் ஒப்பற்ற தானைத்தளபதி கேணல் கிட்டுவும் மற்றும் லெப்.கேணல் குட்டிச்சிறி, மேஜர் மலரவன், கப்டன் ஜீவா, கப்டன் குணசீலன், கப்டன் நாயகன், கப்டன் றொசான், லெப்.அமுதன், லெப்.நல்லவன், லெப்.தூயவன். ஆகியோர் உலக மனிதாபிமான நிறுவனமான குவேக்கர்ஸின் அனுசரணையுடன் ஐரோப்பிய நாடுகளின் சமாதானத்திட்டத்துடன் தாயகம் நோக்கி எம்.வி.அகத் -16 எனும் கப்பலில் கடல்வழிப்பயணத்தினை மேற்கொண்டிருந்தவேளை பிராந்திய வல்லாதிக்கத்தின் சதியால் வங்கக்கடலில் தடுத்து நிறுத்தப்பட்ட கிட்டுவும், தோழர்களும், சரணடைய வேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
அவ்வேளை எதற்கும் தலைவணங்காத எம்தேசத்தின் ஒப்பற்ற வீரர்கள் சரணடைய மறுத்து கப்பலையும், தம்மையும் அழித்து வங்கக்கடலில் சங்கமமாயினர். இப்பெருந்துன்பத்தை எப்படி மறப்போம்.
வரலாற்றில் எப்போதாவது நிகழும் ஒரு சம்பவம் ஒரு இனத்தையே முழுமையாகச் சோகத்தில் ஆக்கிவிடுவதுண்டு. அத்தகைதொரு வரலாற்றின் பதிவுதான் கேணல் கிட்டுவின் வீரமரணம். அது தமிழீழ தேசத்தின் ஆன்மாவையே உலுக்கி விட்டிருந்தது. தமிழீழ மக்களால் பாசத்துடன் கிட்டுமாமா என அழைக்கப்பட்ட கிட்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதி சிறந்த எழுத்தாளன், கைதேர்ந்த புகைப்படப்பிடிப்பாளன் இராணுவ விற்பண்ணன், தலைசிறந்த இராஜதந்திரி, என பலமுகங்களைக் கொண்ட அவர் விடுதலைப்புலிகளின் சர்வதேசப்பொறுப்பாளராகவும், அதேநேரம் தமிழீழத் தேசியத்தலைவரின் சிந்தனைகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் செயல்வீரனாகவும், மக்கள் மத்தியில் உலா வந்தமையால் அவரின் இழப்பினை தாங்கிக்கொள்ளும் சக்தியினை அன்று எம் தேசம் கொண்டிருக்கவில்லை என்பது உண்மைதான்.
நான்கு நூற்றாண்டுகள் தமிழர் தேசம் இழந்த இறைமையை மீட்பதற்கான முதற்படிக்கலாக யாழ்க்குடாவை தமிழர் படையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த களமுனைத்தளபதி கேண்ல் கிட்டு ஆவார். யாரும் எதிர்பார்க்காத எதிர்வு கூறமுடியாத ஒரு நெருக்கடியான காலவேளையில் பிராந்திய வல்லாதிக்க அரசியல் சதிவலை நெருக்கடிகளுக்குள் எமது தேசியத்தலைமையை சிக்கவைக்க மேற்கொள்ளப்பட்ட வியூகங்களை உடைத்தெறிய எமக்குச் சொந்தமான ஒரு தளப்பிரதேசம் தேவை என தேசியத்தலைமை உணர்ந்த வேளை அதற்குச் செயல்வடிவம் கொடுத்து தனது கட்டளையின் கீழிருந்த சில நூறு போராளிகளை மாத்திரமே வைத்துக்கொண்டு யாழ்க்குடா நாட்டை தமிழீழ விடுதலைப்புலிகளின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த பெருமை கேணல் கிட்டுவையே சாரும்.
களமுனையில் கற்பனைக்கெட்டாத சிகரத்தினைத் தொட்டுநின்ற கேணல் கிட்டு தேசவிரோதிகளின் நயவஞ்சகத்தாக்குதலினால் தனது ஒரு காலினை இழந்திருந்த நிலையிலும், போர்க்களத்திலும் சரி, அரசியல் சதுரங்கத்திலும் சரி சலித்தவனல்ல என்பதனை நிரூபிக்கக்கூடியவன் என்பதை சர்வதேசப் பொறுப்பாளனாக லண்டனில் தங்கியிருந்த காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் சர்வதேசக்கட்டமைப்புக்களை ஒழுங்குபடுத்தி சீரமைத்து, சர்வதேச வலையமைப்புக்குத் தேவையான மூலோபாயங்களை வகுத்து நிறுவன மயப்படுத்தப்பட்ட ஒரு கட்டமைப்பாக அனைத்துலக தொடர்பகத்தை வலுவாக நிலைநிறுத்தி தன்னுடைய நிர்வாக ஆளுமையை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தியிருந்தார்.
இத்தகைய அவருடைய ஆளுமையின் வளர்ச்சியும், வீரியமும் அவர் தாயகத்தில் தடம்பதித்தால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இன்னுமொரு மிகப்பெரும் பாய்ச்சல் ஏற்படும் என்பதை நன்குணர்ந்த பிராந்திய வல்லாதிக்க அரசியற் கொள்கைவகுப்பாளர்கள் கிட்டு என்கின்ற இரண்டாம் கட்டத் தலைமை தமிழீழத்திற்குச் செல்வதை தடுத்துநிறுத்தி முடக்க முனைந்ததன் விளைவு எம்தேசம் கிட்டு என்கின்ற மாபெரும் மனிதனை பறிகொடுக்க நேர்ந்தது.
இத்தகைய எதற்கும் தலை சாய்க்காத கிட்டு என்கின்ற வரலாற்று நாயகனை இழந்து இருபது ஆண்டுகள் கடந்த பின்னும் உலக ஒழுக்கு மாறிவிட்டது புதிய அரசியல் ஒழுங்கொன்று பிறந்துவிட்டது. இப்புதிய உலக ஒழுங்குக்கமைய இந்தியப்பெருங்கடல் புவிசார் அரசியற் கொள்கைகளில் தலைகீழான மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டது.
இந்திய அரசு கொண்டிருந்த பிராந்திய அச்சுறுத்தல் மேலும் கூர்மையடைந்துவிட்டது. இந்து சமூத்திரத்தின் ஆளுகை மெல்ல மெல்ல சீனாவின் கைக்குள் நழுவிச் செல்லமளவிற்கு ஸ்ரீலங்கா சீனாவுடன் கைகோர்த்து நிற்கிறது. என்றுமே ஸ்ரீலங்கா இந்தியாவிற்கான நட்புநாடாக இருக்கப்போவதில்லை என்பதும் தெளிவாகத் தெரிகிறது. ஆனாலும் ஈழவிடுதலைப்போராட்டம் சம்பந்தமான வெளிநாட்டுக் கொள்கைகளில் மட்டும் இந்தியா ஏனோ மாற்றங்களை ஏற்படுத்தாமல் மிகைப்படுத்தப்பட்ட, நியாயமற்ற அச்சங்களையும், சந்தேகங்களையும் முன்னிலைப்படுத்தி பகைமை உணர்வுடனேயே பார்க்கிறது.
ஆனால் தமிழீழ தேசமும் மக்களும் இந்தியாவை என்றுமே நட்புரிமையுடனேயே பார்க்க முற்படுகின்றனர். இதனை உணர்ந்து கொள்ள இந்தியக் கொள்கை வகுப்பாளர்களுக்கு இன்னும் எவ்வளவு காலம்தான் தேவை என்பதை ஸ்ரீலங்காவே அவர்களுக்கு உணர்த்துவர். இத்தகைய இன்றை காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நெருக்கடிகள், நிமிர்வுகள், இன்றைய சரிவுகள் எல்லாவற்றையும் தாண்டி அடுத்த கட்ட போராட்டத்தின் பாய்ச்சலுக்கு இன்னுமொரு கிட்டுவின் பிரசவத்தை எம் தேசம் அவாவி நிற்கிறது.
"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"
பிரித்தானியத் தமிழர் ஒன்றியம் (BTU)
ஐக்கிய இராச்சியம்
கேணல் கிட்டு மற்றும் அவருடன் வீரமரணமடைந்த மாவீரர்களின் 20ம் ஆண்டு நினைவு நாள்
சதாசிவம் கிருஸ்ணகுமார் என்னும் இயற்பெயரை கொண்ட கேணல் கிட்டு அவர்கள் 02.01.1960 ஆம் ஆண்டு பிறந்தார். 1983 ஆம் ஆண்டு இறுதிக் காலத்தில் இந்தியாவவுக்குப் பயிற்சிக்கு எனச் சென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் முதற்குழுவில் கேணல் கிட்டு அவர்கள் இடம்பெற்றார். பயிற்சியை முடித்து தமிழீழம் வந்த கேணல் கிட்டு 02.03.1984 ஆம் ஆண்டு நடைபெற்ற குருநகர் இராணுவமுகாம் தாக்குதல் உட்பட பல்வேறு தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்து நெறிப்படுத்தினார்.
இதேநேரம் யாழ் மாவட்டத் தளபதியாக இருந்த கப்டன் பண்டிதர் 09.01.1985 ஆம் ஆண்டு வீரமரணமடைய அவரின் இடத்திற்கு கேணல் கிட்டு அவர்கள் நியமிக்கப்பட்டார். யாழ் மாவட்டத் தளபதியானவுடன் யாழ். காவல்த்துறை நிலையத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று நடாத்தி, அங்கிருந்த பெருந்தொகையான ஆயூதங்களைக் கைப்பற்றினார்.
பங்குனி மாதம் 1987 ஆம் ஆண்டு இறுதியில் மேற்கொண்ட கைக்குண்டுத் தாக்குதலில் தனது இடதுகாலை இழந்தார். யாழ் மண்ணை முற்றிலும் மீட்டெடுத்து யாழ்மாவட்ட தளபதியாகவும் சிறந்த படகோட்டியாகவும் மற்றும் பல்முக ஆற்றலுடையவராகவும் திகழ்ந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக வளர்ச்சிக்கு கேணல் கிட்டு அவர்கள் ஆற்றிய பங்களிப்பு அளப்பெரியது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இலங்கை இந்திய அரசுகளுடன் இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளிலும் பங்காற்றி செயற்ப்பட்டார்.
1989 இல் இலங்கை அரசுடன் பேசுவதற்கு கொழும்பு சென்ற குழுவில் அங்கம் வகித்த கேணல் கிட்டு விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுப் பொறுப்பாளராக அங்கிருந்தபடியே லண்டன் சென்றார். பின்னர் லெப். கேணல் குட்டிசிறி, மேஜர் வேலன், கப்டன் குணசீலன், கப்டன் றௌஷான், கப்டன் ஜீவா, கப்டன் நாயகன், லெப். அமுதன், லெப். தூயவன், லெப் நல்லவன் உட்பட 10 பேருடன் 'குவேக்கர்ஸ்' இன் சமாதானச் செய்தியுடன் சர்வதேச கடற்பரப்பினூடாக எம்.வி அகத் என்ற கப்பலில் தமிழீழம் திரும்புகையில் 16.01.1993 ஆம் ஆண்டு இந்தியக் கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்ட போது கப்பலை வெடிக்க வைத்து வீரமரணமடைந்து தமிழ் வீரம் காத்தார்.
கேணல் கிட்டு அவர்கள் உட்பட 10 வீரவேங்கைகளினதும், ஆயிரமாயிரம் மாவீரர்களின் மற்றும் தமிழீழ மக்களின் கனவினை நனவாக்க தமிழ் இளையோர்களின் பங்களிப்பு இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத ஒன்றாகும்.
முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னரும் தமிழருக்கெதிரான இனப்படுகொலை பல்வேறு வடிவங்களில் சிறிலங்கா அரசு முன்னெடுத்து வருகின்றது. சுயநிர்ணய உரிமை கொண்ட தனித் தமிழீழம் தான் தமிழரின் தீர்வாக அமையும் என்பதை சர்வதேசத்திற்கு எடுத்து கூறும் பொறுப்பு தாயகக் குரல்கள் நசுக்கப்பட்ட நிலையில் புலம்பெயர் இளையோரிடமே உள்ளது.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
நன்றி
தமிழ் இளையோர் அமைப்பு - யேர்மனி
ஊடகப்பிரிவு.
0 Responses to தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் கிட்டு ஒரு தனி மனித சரித்திரம்