Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழர் தாயக பகுதிகளில் உள்ள பாடசாலைகளில், சிங்கள இராணுவ வீரர்கள், இராணுவ சீருடையில் கல்வி கற்றுக்கொடுப்பதாக எழுந்த முறைப்பட்டை இராணுவ பேச்சாளர் ருவான் வணிக சூர்ய மறுத்துள்ளார்.

தமிழ் பாடசாலைகளில் இராணுவ படையினர் சீருடைகளில் சிங்கள மொழியை கற்பித்து வருவதாக முன்னர் குற்றச்சாட்டு எழுந்திருந்தது.

இதை மறுத்துள்ள வணிக சூர்ய  'கிளிநொச்சி கல்வி வலயத்தில் கணிதம், விஞ்ஞானம், சிங்களம் ஆகிய பாடங்களுக்காக ஆசிரியர்கள் பற்றாக்குறையினால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக வலய கல்வி அலுவலர்கள் சில மாதங்களுக்கு முன்னர் கிளிநொச்சி பாதுகாப்பு படை தளபதிக்கு அறிவித்ததனர்.

இதை தொடர்ந்து கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின் தளபதி, படையினரிடையே ஓர் ஆய்வை மேற்கொண்டு இந்த பாடங்களை தமிழில் கற்பிக்க கூடியவர்களை இணங்கண்டு, தெரிவு செய்யப்பட்ட்வார்களுக்கு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் உதவியுடன் கற்பித்தல் முறைகளில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் தற்போது கிளிநொச்சி மாணவர்களுக்கு கற்றல் நடவடிக்கைகளை வழங்க தயாராக உள்ளதாக  தெரிவித்தார்.

எனினும் எவரும் சீருடையில் கற்பிக்க மாட்டார்கள். சிவில் உடையில் தான் கற்பிப்பார்கள். இது கூட உரிய அதிகாரிகள் கிடைக்கும் வரையிலான தற்காலிக ஏற்பாடுகள் தான். நல்லெண்ணத்துடனான எமது செயற்பாட்டை சுயநல நோக்கமுள்ள சிலர், 'இராணுவம் இதை வலியுறுத்தி செய்வதாக' சித்தரிக்கின்றனர். இது பிழையானது. அடிப்படையற்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  மேலும், இதுவரையில் எந்தவொரு இராணுவ வீரரும் எந்தவொரு பாடசாலையிலும் சீருடையுடன் கடமையாற்றவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இராணுவத்தினரை பாடசாலைகளில் கற்பிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கான தேவை என்ன? பாடசாலைகளையும் இராணுவ மயமாக்குகின்ற ஒரு நடவடிக்கையாகவே தாங்கள் இதனை நோக்குகிறோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் யோசப் ஸ்டாலின் அதிருப்தி வெளியிட்டிருந்தார்.

மேலும் 'பாடசாலை மாணவர்களுக்கு சிங்கள மொழியை கற்பிக்க வேண்டிய தேவை இருந்தால் அதற்கான ஆசிரியர்களை ஆசிரிய சேவையில் உள்வாங்கி அவர்களுக்கு உரிய நியமனம் வழங்கி அதனை மேற்கொள்ள வேண்டும். அதை விடுத்து இராணுவத்தினரே நேரடியாக கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது எந்த விதத்திலும் முறையற்றது.
இலங்கை ஆசிரியர் சேவையின் யாப்புக்கு முரணான இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும்' என இலங்கை ஆசிரியர் சங்கம் தனது கடிதம் மூலமாக கல்வி அமைச்சு அதிகாரிகளிடம் கோரியுள்ளது.

இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது அப்பாவி பொதுமக்கள் பெருமளவில் உயிரிழந்தமைக்கும், மருத்துவமனைகள், பாடசாலைகளில் தஞ்சமடைந்திருந்தவர்கள் மீது எரிகணை வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டமைக்கும், இலங்கை இராணுவத்தினருக்கு முக்கிய பங்கிருப்பதாக சுயாதீன விசாரணை தகவல்கள் தெரிவித்து வந்தன. மேலும்
பாலியல் வல்லுறவு, சித்திரவதை என தொடர்ச்சியாக வி.புலிகளின் முன்னாள் போராளிகள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளுக்கும் இலங்கை இராணுவத்தினரே பொறுப்பு கூறவேண்டியவர்களாக உள்ளனர்.

இந்நிலையில் போரினால் அழிவடைந்த கிளிநொச்சியில் ஆசிரியர் பற்றாக்குறை எனக்காரணம் காட்டி அதே இலங்கை இராணுவத்தினரை ஆசிரியர்களாகவும் தற்போது சித்தரித்து பணியில் அமர்த்துவது தமிழர்களுடனான ஆரோக்கியமான நல்லுறவை ஏற்படுத்த கூடியதா எனும் கேள்வியும் இங்கு முன்வைக்கப்படுகிறது.

0 Responses to கிளிநொச்சி பள்ளிகளில் ஆசிரியர்களாக கடமை புரியும் இராணுவத்தினர்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com