Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்திலுள்ள கல்லூரி மாணவர்கள் தன்னெழுச்சியாகப் போராடி வருகிறார்கள்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு எதிராக இந்தியாவே தீர்மானம் கொண்டுவர வேண்டும், தமிழீழத்திற்கு ஆதரவாகக் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து அறவழியில் போராடி வருகிறார்கள்.

அவர்களின் போராட்டங்களை முடக்கும் வகையில் தமிழக அரசு கல்லூரிகளைக் காலவரம்பின்றி மூடுவதற்கு ஆணையிட்டுள்ளது. விடுதிகளும் மூடப்பட்டு மாணவர்கள் வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். தமிழக அரசின் இந்த நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழக மாணவர்கள் எவரும் மாநில அரசுக்கு எதிராக எந்தக் கோரிக்கையையும் முன்வைக்கவில்லை. சட்டம்- ஒழுங்குக்குப் பாதிப்பு ஏற்படும் வகையிலும் நடந்துகொள்ளவில்லை. அவர்களுடைய கோரிக்கை யாவும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாகவே அமைந்திருக்கிறது.

இந்நிலையில், மாணவர்களின் போராட்டத்தை ஆதரிக்க வேண்டிய தமிழக அரசு, அதை முடக்க முனைந்திருப்பது ஏனென்று புரியவில்லை. மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர தமிழக அரசு விரும்பியிருந்தால், 'உங்களுடைய உணர்வுகள்தான் தமிழக அரசின் உணர்வும். எதிர்வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் மாணவர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் தீர்மானம் கொண்டு வருகிறோம்' என்று அறிவித்திருக்கலாம்.

போராடும் மாணவர்களிடம் அமைச்சர்களை அனுப்பி அமைதிப்படுத்தியிருக்கலாம். அதையெல்லாம் விட்டுவிட்டு கல்லூரிகளை முடுவதும் விடுதிகளை அடைப்பதும் எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. தமிழக அரசு தனது நிலையை மாற்றிக்கொண்டு கல்லூரிகளைத் திறப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

மாணவர்களுக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை அரசியல் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மத்திய அரசைக் காப்பாற்றுவதற்குச் செய்யும் முயற்சியோ என்கிற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

இதனை தமிழக அரசு விளக்க வேண்டும். ஏற்கனவே தமிழக சட்டப்பேரவையில் ஈழத் தமிழர் குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தமிழக அரசு உறுதியாக இருக்குமேயானால் போராடும் மாணவர்களை முடக்காமல் அந்தப் போராட்டங்களின் ஞாயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவதால் மாணவர்களின் போராட்டம் ஓய்ந்துவிடாது. இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படும் வரை அது தொடரவே செய்யும்.

ஈழத் தமிழ் மக்களுக்கு உலக அரங்கில் நீதியைப் பெற்றுத் தர உரிய நேரம் இதுதான். அதற்கான போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ள மாணவர்களை விடுதலைச் சிறுத்தைகள் மனமார வாழ்த்துவதோடுஇ அத்தகைய போராட்டத்தை முடக்கும் தமிழக அரசின் நடவடிக்கையை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம் என தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Responses to மாணவர்களின் போராட்டத்தை முடக்கும் தமிழக அரசுக்கு திருமாவளவன் கண்டனம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com