நீதி கேட்டு நெருப்பில் நீறாகும் இனம் நாம். வெள்ளிக்கிழமை என்றால், ஒரு கட்டி உப்பையே வெளியில் எடுக்காத எங்கள் மண், கொள்ளிவைக்கவும் யாரும் இன்றி கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்டுள்ள
உடலங்களை தன்னில் சுமக்கிறதே. எம் சகோதரிகளின் மார்பரிந்து, எம் மழலைகள் மீது பொஸ்பரஸ் குண்டுபொழிந்து, எம் முதியவர் உயிரை பட்டினியால் பறித்து, முட்கம்பிவேலிகளுக்குள் எம் உறவுகளை அடைத்து, வெள்ளைக் கொடியை குருதியில் நனைத்து, ஆயிரம் ஆயிரம் எம் உறவுகளை கொன்று குவித்து, முடிந்தது போரென்று உலகுக்கு சிங்களப் பேரினவாதம் முழக்கமிட்ட நாள் மே 18, 2009. ஆயினும், மே மாதம், சோகங்களை மட்டும் சுமப்பதற்கல்ல. விடுதலையை விரைவுபடுத்துவதற்கு, வீரத்திற்கு மூச்சுகொடுப்பதற்கு, தேசத்தை மீட்பதற்கு, தியாகங்களை நினைவு கூருவதற்கு. காலத்திற்கு கைகொடுத்து, ஞாலத்திற்கு நாம் யார் எனக்காட்டுவதற்கு, உலகம் எமக்கு தந்த உத்தரவாதமற்ற சந்தர்ப்பம். எங்களுக்காய் ஒரு 'இராமர்' வரட்டும், எங்களுக்காய் ஒரு 'இயேசுபிரான்' உயிர்கட்டும், என்ற எண்ணத்தை விட, எங்களுக்காய் நாம் போராட வேண்டும் என்ற உணர்வே மேலானாது. அதுவே, காலத்தின் கட்டாயமும், உலகத்தின் நியதியுமாகும். இன்றே சிந்தி, சபதம் எடு, செயல்பாடு. மறந்து விடாதே! நாம் வாழமட்டுமல்ல, எங்கள் மண்ணை ஆளவும் பிறந்தவர்கள். அவலத்தின் நாளையே எண்ணி அழுதபடி வாழாதே. நாம் எழப்போகும் எதிர்காலத்திற்காய், நாம் நிமிர்ந்து நின்ற கடந்த காலத்தையும் நகர்ந்துகொண்டிருக்கும் நிகழ்காலத்தையும் கணி. நாம் முட்கம்பிக்குள் சிக்குண்ட பூவல்ல. எமது மலர்வென்பதே முட்கம்பியில்தான் தோற்றம் பெற்றது. நாம் இன்று தனிமரமாக நிற்கக்கூடும் - ஆனால் நாம் நாளை ஒரு துளிர்விடும் மரமாக மாறுவோம் என்பதை மறந்து விடாதே. அலைகள் முன்னோக்கியே பாயும். நெருப்பு எப்போதும் நேராகவே எரியும். ஓளி எப்போதும் நேர்கோட்டிலேயே செல்லும். அதே போல், சுதந்திர தாகமுள்ள இனம் தன் இறுதி மூச்சுவரை போராடும். சிதறிய பிணங்களும், சிந்திய குருதியும், எம் இழப்பிற்கான எடுத்துக்காட்டு மட்டுமல்ல – எம் மீள் எழுச்சிக்குமானதுதான். காலமும் உலகமும், கைகோர்த்தெழுதிய தீர்ப்பென்று, நலிந்த சிந்தையோடு இருந்துவிடாதே. சூரியன் எழும் திசைதான் கிழக்கு. போராடும் இனத்திற்குத்தான் விடிவு. முள்ளிவாய்க்கால் ஒரு போராட்டத்தின் முடிவல்ல. இன்னொரு போராட்டத்திற்கான ஆரம்பம். நந்திக்கடல் அழிவின் சின்னமல்ல. நாம் மீளவும் எழுவோம் என்ற நம்பிக்கையின் அடையாளம். தமிழா!!! துணிந்திடு, எழுந்திடு, தேசம் விடிந்திடும் வரையினில் போராட்டத்தைத் தொடந்திடு. ச.பா.நிர்மானுசன் மே 18, 2011.
0 Responses to “நந்திக்கடல் அழிவின் சின்னமல்ல. நாம் மீளவும் எழுவோம் என்ற நம்பிக்கையின் அடையாளம்.”- தமிழ் இன அழிப்பு நாள்