Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


ஈழத்தமிழர்கள் வேதனை மற்றும் தமிழர்களின் கோபத்தை உணர்ந்து இலங்கைக்கான தங்களுடைய  பயணத்தை ரத்து செய்யுமாறு மத்திய சுற்றுச்சூழல் மந்திரி ஜெயந்தி நடராஜன் டெல்லியில் உள்ள இந்திய வணிக தொழில் கூட்டமைப்பு தலைவருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

 அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  'இலங்கைக்கு எம்.பி.க்கள் குழு ஒன்றை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்த இந்திய வணிக தொழில் கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளது. இந்திய குடிமகள் என்ற ரீதியிலும், குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவள் என்ற முறையில் 2009 ஆம் ஆண்டு போரின்போதும், அதற்கு பிறகும் இலங்கை அரசு அப்பாவி தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியது மிகுந்த வேதனையை எனக்கு ஏற்படுத்தியது.

 இறுதிக் கட்ட போரின்போது 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா.சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இலங்கையின் வடக்கு பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தை அகற்ற வேண்டும் என்று ஐ.நா.சபை பலதடவை கூறிவிட்டது. ஆனால் இதுவரை அது நடைபெறவில்லை. இலங்கையின் வடக்கு பகுதியில் இராணுவம் தொடர்ந்து தமிழர்கள் மீது அத்துமீறல்களில் ஈடுபட்டு மனித உரிமைகளை மீறி வருகிறது.

 இராணுவத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து துடைத்தெறியப்பட்டுள்ளனர். அவர்களது குடும்பங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. சொந்தங்களை இழந்து தமிழர்கள் தவிக்கிறார்கள். இராணுவத்தால் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவதை பலதடவை ஐ.நா. மனிதஉரிமை கண்காணிப்பு ஆவணப்படுத்தியுள்ளது.

 இலங்கையில் நடந்துள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா.சபையில் இரண்டு தடவை தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் சுதந்திரமான நன்பகத்தன்மையான விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த இரண்டு தீர்மானங்களையும் ஆதரித்து நமது நாடு வாக்களித்துள்ளது.

 நமது பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சார்பில் இலங்கையில் தமிழர்கள் உண்மையான அதிகாரம் பெறுவதற்கு வழிவகுக்கும் 13 ஆவது சட்டத்திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். என்றாலும் இந்தியாவின் இந்த கோரிக்கையை இலங்கை அரசு இன்னும் ஏற்கவில்லை.

 இதற்கிடையே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இலங்கை வடக்கு பகுதியில் உள்ள ஈழத்தமிழர்களின் மறுவாழ்வுக்கு நிதி உதவிகளை செய்துள்ளது. தமிழர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கவும், அத்தியாவசிய மருந்துகள் வாங்கவும் உதவிகள் செய்துள்ளன.

என்றாலும், இந்திய அரசால் செய்யப்படும் இத்தகைய ஆக்கப்பூர்வமான உதவிகளை ஈழத்தமிழர்கள் பெறும் வகையில் இலங்கை அரசு சரியானபடி செய்யத் தவறிவிட்டது.

இந்தியாவில் உள்ள தொழில் கழகங்களில் உயரிய மதிப்பில் உள்ள இந்திய வணிக தொழில் கூட்டமைப்பு ஈழத்தமிழர்களின் வேதனையையும், தமிழக மக்களின் மனவேதனையையும் அறிந்து இருக்க வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலையில் இலங்கை பயணத்தை மேற்கொண்டால் அது அப்பாவி ஈழத்தமிழர்களின் விஷயத்தில் ஆழமான காயம் ஏற்படுத்துவதாக இருக்கும்.

எனவே, இந்திய வணிக தொழில் கூட்டமைப்பு ஈழத்தமிழர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். தற்போது இலங்கைக்கு எம்.பி.க்கள் குழுவை அனுப்புவதை நிறுத்த வேண்டும். இதுதொடர்பாக எம்.பி.க்களுக்கும் நான் தனியே கடிதம் ஒன்றை எழுதியுள்ளேன். மேலும் இந்த இடத்தில் நான் ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். நான் கடிதத்தில் எழுதியுள்ள கருத்துக்கள் அனைத்தும் முழுக்க முழுக்க எனது தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும்.

0 Responses to இலங்கைக்குப் போகவேண்டாம்- மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன் கோரிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com