மே 1ஆம் திகதியான இன்று தொழிலாளர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தமிழக முதல்வர் ஜெயலலிதா தொழிலாளர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து நேற்று செய்தி வெளியிட்டுள்ளார். அதில் உழைப்பில்தான் உடல் வலிமை உறுதி பெறும். உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்.
உழைப்பின் பயனால் கிடைக்கும் உயர்வே மனநிறைவு அளிக்கும். நம்பிக்கையோடு உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம் என்பதை தெரிவித்துக் கொண்டு, தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த மே தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என தனது வாழ்த்துச் செய்தியில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதேவேளை திமுக தலைவர் கருணாநிதி தமது மே தின வாழ்த்துச் செய்தியில் தொழிலாளர்களோடு தொழிலாளியாகக் கலந்து அவர்கள் மீது வாஞ்சையை வளர்த்துக் கொண்டு, அவர்தம் வாழ்க்கை மேம்பாட்டிற்காக இளமைக் காலம் தொட்டு தொய்வின்றிப் பாடுபடுபவன் என்னும் உணர்வோடு தொழிலாளர் சமுதாயத் தோழர்களுக்கு எனது உளமார்ந்த தோழர்களுக்கு எனது உளமார்ந்த மே தின நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கண்ணீரும், வியர்வையும், செந்நீரும் சிந்திப் போராடும் வர்க்கம் விடுதலையை வென்றெடுக்கும் என்பதற்கு அடையாளமாகத் திகழும் இந்த மே நாளில், ஈழத் தமிழர் விடுதலைக்காகச் சிந்தும் கண்ணீரும், இரத்தமும் வீண் போகாது என்றும், அவ்வுரிமைப் போராட்டத்தில் உலகத் தமிழர்கள் மட்டுமல்லாமல் உழைக்கும் வர்க்கமும் தங்கள் பங்களிப்பைத் தந்திட வேண்டும் என்று வேண்டிச் சூளுரைத்து மே தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன், என கூறியுள்ளார்.
மேலும் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், விஜயகாந்த் உள்ளிட்ட பல தலைவர்கள் தங்களது மே தின வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளனர்.
0 Responses to மே 1 தொழிலாளர்கள் தினம் : தலைவர்கள் வாழ்த்து