பாகிஸ்தான் லாகீர் கோத் லாக்பத் சிறையில் தாக்குதலுக்கு உள்ளாகி சரப்ஜித் சிங் கோமா நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நிலையில், அச்சிறைச்சாலையின் அதிகாரிகள் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை சரப்ஜித் சிங், சக சிறைக்கைதிகளால் கூறிய ஆயுதங்களால் கடுமையாக தாக்கப்பட்டார். தலை, கழுத்து மற்றும் உடல் முழுவதுமான காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் அவர் ஜின்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கோமா நிலையில் உள்ள அவரது உடல் நிலை இன்னமும் மோசமடைந்தே செல்வதாகவும் உயிர் பிழைக்கும் சாத்தியம் மிக குறைவாகவே இருப்பதாகவும் மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சரப்ஜித் சிங்கை நேரடியாக பார்வையிட பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவரது குடும்பத்தினர் மீண்டும் இந்தியாவுக்கு திரும்பியுள்ளனர். சரப்ஜித் சிங்கை இந்தியாவுக்கு கொண்டுவந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், குறைந்தது இந்திய மருத்துவர்களை கொண்டாவது சிகிச்சை அளிக்க வேண்டும் என புதிய கோரிக்கையை முன்வைத்துள்ளனர். சரப்ஜித் சிங்கின் நிலையை நேரில் விளக்கி கூற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்க நேரம் கேட்டும் அவரது குடும்பத்தினர் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இத்தாக்குதல் சம்பவம் தொடப்ரில் நான்கு சிறைச்சாலை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், துணை சுப்பிரிண்டண்ட் உட்பட குறித்த நால்வரையும் உடனடியாக சேவை நிறுத்தம் செய்துள்ளதாகவும் முதலில் பாகிஸ்தான் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இன்று வெளியாகியுள்ள தகவல்களின் படி இதுவரை எந்தவொரு சிறைச்சாலை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எதனால் இந்த தவறு நிகழ்ந்தது என விளக்கமளிக்க மட்டுமே பஞ்சாப் மாநில அரசினால் அவர்கள் அழைக்கப்பட்டிருந்த்தாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை கண்டித்து, அதற்கு பழிவாங்கும் வகையிலேயே சரப்ஜித் சிங் மீது ஆறு கைதிகளால் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது.
செங்கல்லினால் தலையில் தாக்கப்பட்டும், கூறிய ஆயுதங்களால் கழுத்து, உடல் முண்டப்பகுதிகளில் கீறியும் சரப்ஜித் சிங் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது. இத்தாக்குதல் தொடர்பில் குறித்த சிறைச்சாலையின் இரு மரணதண்டனை கைதிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த 1990ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தின் லாகூரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இத்தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சரப்ஜித் சிங்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவரது கருணை மனுவை முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பர்வேஷ் முஷாரப் நிராகரித்திருந்தார்.
சரப்ஜித் சிங் கவனக்குறைவாக பாதை மாறி இந்திய எல்லைத்தாண்டி பாகிஸ்தானுக்கு புகுந்துவிட்டதாகவும், முழுமையாக தன்னிலை மறந்த நிலையில் சாட்சி சொல்ல நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தாகவும், சரப்ஜித் சிங்கின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது கோமா நிலையில் இருக்கும் சரப்ஜித் சிங்கின் உடல் நிலை இன்னமும் மோசமடைந்து செல்லும் போதும் அவர் இன்னமும் மூளைச்சாவு அடைந்துவிடவில்லை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். முன்னர் இது தொடர்பில் வெளிவந்த தகவல்கள் உண்மையில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
0 Responses to உயிருக்கு போராடும் சரப்ஜித் சிங் : லாகூர் சிறை அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை