முள்ளிவாய்க்கால் பெருவலியின் கூட்டுநினைவின் 4ம் ஆண்டினை உலகத் தமிழனம் நினைவேந்தியிருக்கும் இவ்வேளை, தமிழீத்தினை வென்றடைவதற்கான தமிழர் தரப்பின் நிகழ்ச்சி நிரலினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உரத்திரகுமாரன், தனது மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் உரையில் தெளிவாக முன்னிறுத்தியுள்ளார்.
உலகத் தமிழினம் நோக்கிய தனதுரையின் தமிழீழ சுதந்திர சாசன முரசறைவுப் பெருநிகழ்வில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் வழங்கியிருந்தார்.
அவரது உரையின் முழுவடிவம்:
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் நான்காவது ஆண்டு நினைவை உலகத் தமிழினம் நினைவுகூரும் இவ்வேளையில், இறைமையும் சுதந்திரமும் கொண்ட சுதந்திரத் தமிழீழம் குறித்த நமது பற்றுறுதியை வெளிப்படுத்தும் வகையில் தமிழிழ சுதந்திர சாசனத்தை நாம் முரசறைந்தவாறு நாம் இங்கு கூடியுள்ளோம்.
முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் ஊடாக தழிழீழ மக்களின் சுதந்திர வேட்கையினை நசுக்கி விடலாம் எனக் கருதியிருந்த சிங்களத்துக்கு நமது தமிழீழ சுதந்திர சாசனச முரசறைவு மீண்டுமொருமுறை தமிழீழ மக்களின் சுதந்திர வேட்கையினை எவராலும் அழித்துவிட முடியாது என்பதனை முகத்தில் அறைந்தால் போல எடுத்துக் கூறியுள்ளது.
முள்ளிவாயக்க்கால் தமிழீழ மக்களின் தேசிய ஆன்மாவில் பெரும் வலியையும் துயரையும் தந்த காரணத்தாலும் காலத்தால் மறக்க முடியாத கூட்டு நினைவாக அமைந்து விட்ட காரணத்தாலும் மே 18 ஆம் திகதியினைத் தேசிய துக்க நாளாக நாம் பிரகடனம் செய்திருக்கிறோம்.
துயரத்தால் சோர்ந்து போகும் நாளாக இல்லாமல் உயிரத்துடிப்புடன், மீண்டு எழும் நாளாகவே மே 18ம் நாளினை நாம் கருகிறோம். இவ்வாறே மே-18 தமிழர் வாழ்வில் தடம் பதித்திருக்கிறது. இன்றைய தமிழீழ சுதந்திர சாசன முரசறைவும் இதனைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.
முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் பின்னும் சிங்களத்துடன் இணைந்து வாழ்வது என்பது குறித்து மானுடத்தை நேசிக்கும் மனிதர் எவரும் பேச முடியுமா? 21 ஆம் நூற்றாண்டில் வன்னிப்பெருநிலம் மீது, தமிழீழ மக்கள் மீது சிங்களம் நிகழ்த்திய கொடுமை போல கொடுமைகள் எதுவும் உலகில் வேறு எங்கும் நடந்திருக்கிறதா?
முள்ளிவாய்க்காலில் இனஅழிப்புக்குள்ளன நமது மக்கள் யுத்தப் பூமியில் வாழ்ந்த காரணத்தால் மட்டும் இத்தகைய கொடுரமான முறையில் கொல்லப்படவில்லை. இவர்கள் தமிழராக பிறந்து விட்ட காரணத்தால், தமிழ் மொழியைப் பேசிய காரணத்தால், தனித்துவமான ஒரு அடையாளம் கொண்ட மக்களாக இருந்தார்கள் என்ற காரணத்தினால்தான் இத்தகைய பெரும் கூட்டுத்தண்டனையினை நமது மக்கள் சுமந்திருக்கிறார்கள்.
இனஅழிப்பு யுத்தமுறையாக சிங்களத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. சிங்கள இளைஞர்களும் ஒன்றுக்கிரு தடவைகள் ஆயுதம் ஏந்திப் போராடியிருக்கிறார்கள். இதில் ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் சிறிலங்கா அரசால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இருந்த போதும் சிங்கள சமூகத்தைக் கொடுமையான முறையில் கூட்டாகத் தண்டிக்கும் வகையில் அரசின் நடவடிக்கைகள் அமைந்திருந்தனவா?
முள்ளிவாய்க்கால் போன்றதொரு பகுதியில் அம்மாந்தோட்டையிலோ, மாத்தறையிலோ ஜே.வி.பி தமக்கெனக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை வைத்திருந்ததாகவும் இங்கு 4 இலட்சம் மக்கள் வாழ்ந்து வந்தார்கள் என்றும் ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம்.
இத்தகையதொரு சூழல் இருந்திருக்குமானால் ஜே.வி.பி. யை வெற்றி கொள்வதற்காக முள்ளிவாய்க்கால் சூத்திரத்தை சிறிலங்கா அரசு தேர்ந்தெடுத்திருக்குமா? அப்படி தேர்ந்தெடுத்திருக்கத்தான் முடிந்திருக்குமா? நிச்சயமாகத் தேர்ந்தெடுத்திருக்க முடியாது. அப்படித் தேர்ந்தெடுத்திருக்கவும் சிங்கள மக்கள் அனுமதித்திருக்க மாட்டார்கள்.
முள்ளிவாய்க்காலில் வாழ்ந்த மக்கள் தமிழர்கள் என்ற காரணத்தினால்தான் 1 இலட்சத்துக்கும் அதிகமானவர்களை கொன்று குவித்து, மிஞ்சிய அனைவரையும் வேரரறுத்து, தாய்நிலத்தில் இருந்து பிடுங்கியெறிந்து கோரத்தாண்டவம் ஆடி, போரில் வெற்றி கொண்டதாக பெரு முழக்கம் செய்ய சிங்களத்தால் முடிந்திருக்கிறது.
சிங்களத்தின் தமிழின அழிப்பு என்ற திட்டமிட்டதொரு இலக்குக்கு முள்ளிவாய்க்கால் சூத்திரம் நன்கு பொருந்திப்போயிருக்கிறது. முள்ளிவாய்க்காலில் நடந்தேறியது வெறும் போர்க்குற்றங்களல்ல, தமிழின அழிப்பேதான் என்பதற்கு சிங்களம் எத்தகைய நோக்கோடு தமிழினப் படுகொலையினை செய்திருக்கிறது என்பதனையும் நோக்கும் எவரும் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும்.
இங்கு நான் சிங்களம் எனக் குறிப்படுவது சிங்கள தேசத்தைச் சேர்ந்த தனிப்பட்ட மனிதர்களையல்ல என்பதனையும் பதிவு செய்ய விரும்புகிறேன். மானுடத்தை நேசிக்கும் சிங்களச் சகோதரர்கள் நிறையவே உள்ளார்கள். முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற தமிழின அழிப்பின் ஆதாரங்களை அனைத்துலக அரங்கில் வெளிக் கொணரும் அரும்பணியாற்றும் பலர் உள்ளனர்.
தமிழீழ மக்களின் தேசத்தகைமையும் அவர்களின் தன்னாட்சி உரிமையையினை அங்கீகரிக்கும் தோழர்கள் பலர் உள்ளனர். ஆனால் இவர்கள் குரல்கள் எல்லாம் சிங்கள பேரினவாத முழக்கத்தன் மத்தியில் மிக மெதுவாகவே ஒலிக்கக் கூடிய நிலையே உள்ளமை வேதனையானதொரு நிலையே.
இங்கு நான் சிங்களம் எனக் குறிப்பிடுவது சிங்கள பௌத்த பேரினவாத அரச கட்டமைப்பையும் சிங்கள இனவாதச் சித்தாந்தத்தினையும்தான். இவைதான் எமது மக்களை முள்ளிவாய்க்காலில் இனஅழிப்புக்குளாக்கியது. தொடர்ந்தும் கட்டமைப்புரீதியான இனஅழிப்புக்கு உள்ளாக்கி வருகிறது.
எம்மைப் பொறுத்தவரையில் இலங்கத் தீவில் இரண்டு நாடுகள் உள்ளன. சிறிலங்கா, தமிழீழம் ஆகியனவே இந்த இருநாடுகள். தமிழீழம் தனக்கென தேசியத்தலைவர் தலைமையில் நடைமுறை அரசினைக் கட்டி எழுப்பியிருந்தது. இந்த நடைமுறையரசினை முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பை நிகழ்த்தி சிறிலங்கா ஆக்கிரமித்தள்ளது.
இதனால் சிங்கள இனவாத அரச கட்டமைப்பு போரில் தமிழர் தேசத்தை வெற்றிகொண்டதாக நாம் கருதவில்லை. பெரும் கொடிய போரை நடாத்தி தமிழர் தேசத்தை, தமிழீழ மண்ணை சிறிலங்கா ஆக்கிரமித்துள்ளதாகவே நாம் நோக்குகிறோம்.
தமிழீழ மக்களை ஆள்வதற்கு நமது மக்கள் தமது கைகளிலுள்ள இறைமையினை சிங்களத்திடம் கையளிக்கவில்லை. இதனால் தழிழீழ மண்ணில் உள்ள சிறிலங்கா ஆக்கிரமிப்பு அரசின் எல்லாக் கருவிகளும் தமிழீழ மண்ணில் இருந்து வெளியேற வேண்டும்.
சிங்கள ஆக்கிரமிரமிப்பு இராணுவம் முதற்கொண்டு நிர்வாக இயந்திரம் வரையிலான அனைத்து சிங்கள அரசின் அடையாளங்களும் ஆக்கிரமிப்பின் சின்னங்களே என நாம் உரத்துக் கூற விரும்புகிறோம்.
தமிழீழ மக்கள் சிங்கள பேரினவாத்தின் கீழ் அடிபணிந்து வாழாது சுதந்திரமாக வாழவே விரும்புகிறார்கள். இதற்காக சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசை அமைத்தக் கொள்வதே ஒரு ஒரு வழி என்பதனை வரலாறு தெளிவாக வெளிப்படுத்தி நிற்கிறது. இதற்காக கடந்து நான்கு தசாப்தங்களாகத் தமிழீழ மக்கள் பெரும் உயிர் ஈகம் செய்து போராடியிருக்கிறார்கள்.
முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கு பின்னர் தமிழீழத் தனியரசின் அவசியம் மேலும் வீச்சாகத் தமிழீழ மக்களால் உணரப்பட்டுள்ளது. தாயகத்தில் தமது அரசியல் பெருவிருப்பினை வெளிப்படுத்தக் கூடிய அரசியல்வெளி நமது மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ள்ளது.
முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் ஓராண்டு நினைவின் போது உயிர்ப்பெடுத்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் இன்று முள்ளிவாயக்கால் நான்காவது ஆண்டு நினைவின்போது நாம் முரசறைந்துள்ள தமிழீழ சுதந்திர சாசனமும் தமிழீழ மக்களின் சுதந்திர வேட்கையின் குறியீடுகளாக அமைகின்றன.
இன்று நாம் முரசைறைந்துள்ள தமிழீழ சுதந்திர சாசனம் மூலம் நாம் நமது போராட்டத்தில் முக்கியமதானதொரு காலடியை முன்னோக்கி வைத்தள்ளோம். தமிழீழ விடுதலைப் போராட்டம் தற்போது புதிய பரிமாணத்தை எட்டியள்ளது. தற்போது அரசியல் இராஜதந்திர வழிமுறை மூலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத் நாம் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.
நாம் வாழ்ந்து கொண்டு கொண்டிருக்கும் 21 ஆம் நூற்றாண்டின் இரண்டாவது தசாப்தத்தில் உலகம் பல மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.
இம் மாற்றங்களுக்கேற்ப நம்மை நாம் புதுப்பித்துக் கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கிறது. நமது நிலைப்பாடுகளையும் கொள்கைகனைளயும் தெளிவாக அனைத்துலச சமூகத்தின் முன்னால் வைக்க வேண்டிய அவசியம் உள்ளது. இவற்றை நாம் உணர்ந்து கொண்டே தமிழீழ சுதந்திர சாசனத்தை முரசறையும் செயற்பாட்டை ஆரம்பித்தோம்.
இந்த சுதந்திர சாசனத்தை, முக்கியமான வரலாற்று நிகழ்வுகளையும் ஆவணங்களையும் கவனத்திற் கொண்டும் மக்களோடு மேற்கொண்ட கருத்துப் பரிமாற்றஙகளை உள்வாங்கியும் தமிழீழத்துக்கான அறிவியல் சமூகத்தின் துணையோடு உருவாக்கியுள்ளோம். மக்களின் கருத்துக்களை உள்வாங்குவதற்காக கேள்விக் கொத்தொன்றினையும் தயாரித்து வெளியிட்டிருந்தோம்.
இச்சுதத்நிர சாசன உருவாக்கத்துக்காக 1 இலட்சம் மக்களது கருத்துக்களை கேள்விக் கொத்துக்களின் ஊடாக உள்வாங்குவது எனத் திட்டமிட்டிருந்தோம். எமது எதிர்பார்ப்புக்கும் மேலாக 1,10, 000 க்கும் மேற்பட்டவர்கள் கேள்விக் கொத்தின் ஊடாகத் தமது கருத்தக்களை எமக்கு வெளிப்படுத்தியிருந்தனர். இதில் ஆயிரக்கணக்கானோர் தமிழீழத் தாயகத்தில் இருந்தும் தமது கருத்துக்களை எமக்கு அனுப்பியிருந்தனர்.
மக்களது இந்த பங்குபற்றல் தமிழீழ சுதந்திர சாசனத்துக்கு பெரும் வலிமையைத் தருவதோடு, தமிழீழ சுதந்திரம் குறித்து அவர்கள் கொண்டிருக்கும் பற்றுதியையும் வெளிப்படுத்தி நிற்கிறது. இந்த சுதந்திர சாசனத்தை மக்கள் மயப்படுத்தும் வேலைகளை நாம் தொடர்ச்சியாக மேற்கொள்ளவுள்ளோம்.
தமிழீழ விடுதலையினை வென்றெடுப்பதற்காக இந்த சுதந்திர சாசனம் எவ்வாறு பயன்படப் போகிறது? இதனை எவ்வாறு நாம் பயன்படுத்தப் போகிறோம்? இது இன்று நம்மில் பலருக்கு எழுகின்ற கேள்வியாக இருக்கும்.
இத் தமிழீழ சுதந்திர சாசனம் தமிழீழத்தை வென்றெடுப்பதற்கான அனைத்துலக உறவுகளை வென்றெடுப்பதற்கு அடிப்படையாக அமையக்கூடிய ஆவணமாக அமையும். தமிழீழம் எத்தகைய நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கப் போகிறது? எத்தகைய கொள்கைகiளைக் கடைப்பிடிக்கப் போகிறது? போன்றவற்றை நாம் இந்த சுதந்திர சாசனம் மூலம் கோடிட்டுக் காட்டியுள்ளோம்.
உதாரணமாக தமிழீழத்தின் வெளியுறவுக் கொள்கை ஜனநாயக நாடுகளுடன் கூடுதல் நட்புறவைக் கொண்டதாக அமையும் என்பதனையும் இந்தியாவினை தமிழீழம் நட்பு நாடாகக் கொள்ளும் எனவும் தமிழீழ சுதந்திர சாசனம் முரசறைந்துள்ளது.
இது போன்று நிலைப்பாடு, கொள்கை சார்ந்து பல்வேறு விடயங்களை தமிழீழ சுதந்திர சாசனம் தெளிவுபடுத்தயுள்ளது. இதனால் ஒரு தொலைநோக்குடன் தமிழீழத்துக்கான ஆதரவை வென்றெடுப்பதற்கான செயற்பாடுகளை மேற்கொள்வதங்கு தமிழீழ சுதந்திர சாசனம் துணை செய்யும்.
அரசுகளின் ஆதரவினை வென்றெடுப்பதற்கு முதற்படியாக பல்வேறு நாடுகளிலும் வாழும் குடியியில் சமூகத்தின், அறிவியல் சமூகத்தின் ஆதரவினை நாம் தமிழீழத்துக்கு வென்றெடுப்பதில் தமிழீழ சுதந்திர சாசனம் காத்திரமான பங்கை வழங்கும் என்பது நமது நம்பிக்கை.
இன்று நம் முன்னால் உள்ள பிரதான சவால் பலமிக்க அரசுகளின் ஆதரவை தமிழீழத்துக்கு ஆதரவாக எவ்வாறு வென்றெடுப்பது என்பதுதான். இந்தியா, அமெரிக்கா உட்பட உலகில் பலமிக்க அரசுகள் இலங்கைத்தீவின் தேசிய இனப்பிரச்சினைக்கு இரு அரசுகள் தீர்வுமுறையினை இன்னும் கவனத்திற் கொள்ளவில்லை.
இலங்கைத்தீவு பிரியாதவகையில் அரசியல் தீர்வு என்பதனைப் பற்றியே இவர்கள் பேசுகிறார்கள். உலகில் எந்த ஒரு நாடும் பிரிந்து தனிநாடு உருவாகக்கூடாது என்பதல்ல இவர்களது நிலைப்பாடு. இவ்வாறு பிரிந்த செல்லலே கூடாது என்ற றிலைப்பாடு இருந்திருக்குமேயானால் கடந்த வருடம் தென் சூடான் பிரிந்து சென்று தனிநாடாகியிருக்க முடியாது.
நோர்வே, வங்காள தேசம் உட்பட உலகில் பல நாடுகள் உருவாகியிருக்கவும் முடியாது. மாறாக நாடுகள் பிரிதலும் பிரியாது தடுக்கப்படலும் பலம் மிக்க உலக அரசகளின் நலன்கள் என்ற சமன்பாட்டிலிருந்தே தீர்மானிக்கப்படுகின்றன.
இலங்கைத் தீவில் தமிழீழம் என்ற நாடு உருவாகாது பேணிக் கொள்ளலே தமது நலன்களுக்கு உகந்தது என இந் நாடுகள் தற்போது கருதுகின்றன. இந் நிலையில் மாற்றம் ஏற்படும் நிலை இரு தளங்களில் இருந்து எழ வேண்டும்.
ஒன்று புவிசார் அரசயலில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக இலங்கைத்தீவு தொடர்பான பலம் மிக்க அரசுகளிடம் இருந்து வரும் மரபு சார்ந்த சிந்தனையில் ஒரு அசைவு ஏற்படவேண்டும்.
இலங்கைத் தீவில், இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கிடையே நிலவும் புவிசார் அரசியல் உறவுகளும் முரண்களும் இதற்கான வாய்ப்பான சூழலை ஏற்படுத்தும் நிலைமகள் உள்ளன. இரண்டாவது, தமிழீழ ஆதவுத்தளம் ஒரு வலுமையமாகத் திரள்வடைந்து, இந்தியா, அமெரிக்கா போன்ற பலமிக்க நாடுகளை இரு அரசுகள் தீர்வுக்குச் சாதகமாக கொள்கை மாற்றத்தை ஏற்படுத்தும் நிலையை ஏற்படுத்த வேண்டும்.
இங்கு முதலாளது தளமும் இரண்டாவது தளமும் இணையும் வகையில் வரலாறு முன்னோக்கி நகரும்போது நமது சுதந்திரத்துக்கு சாதகமாக அனைத்துலகச் சூழல் உருவாகும். இதில் இரண்டாவது தளத்தில் நமது செயற்பாடுகளின் பங்கு முக்கியமானது. இரண்டாவது தளத்தில் செயற்படுவததற்கு தமிழீழச் சுதந்திர சாதனத்தின் பாத்திரமும் கனதியானது.
தமிழீழத் தயாகமும், புலமும், தமிழகமும் உலகத் தமிழினமும் இணையும் போது தமிழீழ மக்கள் ஒரு வலுமையமாக, இலங்கைத் தீவில் சிறிலங்கா அரசுக்கு மாற்றான ஓர் அரச மையமாக உருவெடுப்பது சாத்தியமானது. இதற்காக நாம் அனைவரும் இணைந்த வகையில் உழைப்போம் என முள்ளிவாயக்கால் ஈகிகள் நினைவாக நாம் உறுதி கொள்வோமாக.
ஒரு மக்கள்கூட்டம் தான் விடுதலை அடைவது எனத் திடசங்கற்பம் பூண்டு விட்டால், இதற்காக விட்டுக் கொடுப்பற்றுப் போராடுவது எனத் தீர்மானித்து போராட்டக்களத்தில் இறங்கி விட்டால்இ தமது போராட்ட வழிமுறையை புத்திபூர்வமாக அமைப்பதில் வெற்றி கண்டு விட்டால் அந்த மக்களது விடுதலையை எவராலும் தடுத்த விடமுடியாது. தமிழீழ மக்களின் சுதந்திரத்தையும் இவ்வாறே வரலாறு பதிவு செய்யும் என்பது திண்ணம் என குறிப்பிட்டுள்ளார்.
0 Responses to தமிழீழத்தினை வென்றடைவதற்கான தெளிவான நிகழ்ச்சி நிரலை முன்நிறுத்திய பிரதமர் வி.உருத்திரகுமாரனின் மே18 உரை !