Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


முதலிடம் பெற்ற அபினேஷ் தாயாருடன்

தமிழகத்தின் பிளஸ் 2 பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன.  மாநில அளவில் கடந்த வருடம் போன்று இம்முறையும் நாமக்கல் பள்ளி மாணவர்களே மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் இடங்களை பிடித்துள்ளனர்.
நாமக்கல் பள்ளி மாணவர்கள் அபினேஷ் மற்றும் ஜெய்சூர்யா ஆகியோர் 1200 மதிப்பெண்களுக்கு 1189 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.

இவர்களில் ஜெய்சூர்யாவின் பெற்றோர் வறிய நிலையில் அவரை படிக்க வைத்துள்ளனர். தந்தை முதுகுத்தண்டு பாதிப்பினால் படுத்த படுக்கையாக இருக்க, தாயார் கூலி வேலை செய்து மகனை படிக்க வைத்துள்ளார். எதிர்கால இலட்சியம் மூட்டு, முதுகுத்தண்டு அறுவைச்சிகிச்சை நிபுணராக வேண்டும் என்கிறார் ஜெய்சூர்யா.

அபினேஷ் இதய மாற்று அறுவை சிகிச்சை நிபுணராக வேண்டும் என்கிறார்.

இம்முறை தேர்வு எழுதியவர்களில் 88.1% வீதமானோர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இம்முறையும் மாணவியர்கள் 91% வீதமும், மாணவர்கள் 84.7% வீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மதிப்பெண் சான்றிதழ்: பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள் அந்தந்தப் பள்ளிகளில் மே 27-ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. மாணவர்கள் விடைத்தாள் நகல்களைப் பெறவும், மறுகூட்டலுக்கும் வெள்ளிக்கிழமைமுதல் (மே 10) விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் நகலைப் பெற்ற பிறகே மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இம்முறை இயற்பியல் பாட்டத்தில் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதே போன்று கணிதப்பாடத்தில் முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

விலங்கியல் பாடத்தில் எவருமே முழு மதிப்பெண் எடுக்கவில்லை. எனினும் வேதியல், உயிரியல் பாடங்களில் முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சென்னை சாந்தோமில் உள்ள ரோசரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.காவ்யா 1192 மதிப்பெண் எடுத்துள்ளார். எனினும் அவர் பிரெஞ்சு மொழியை முதன்மைப் பாடமாக தேர்வு செய்ததால் மாநில ரேங்க் பெறவில்லை.

அதேபோல், சம்ஸ்கிருதப் பாடத்தை எடுத்து மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்த மாணவி எச்.அபிநயாவும் ரேங்க் பட்டியலில் இடம்பெறவில்லை. ஆதம்பாக்கம் எஸ்.டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி மாணவியான இவர் 1,191 மதிப்பெண் பெற்றுள்ளார்.

இம்முறை தேர்வுகளில் எதிர்பார்த்தை விட குறைவான மதிப்பெண் பெற்றதால் இரு மாணவிகள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒருவர் 1200க்கு 1063 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

மாணவ மாணவிகளிடம் சமூகம் தேவைக்கதிகமாக எதிர்பாக்கும் தவறான அணுகுமுறையின் விபரீத பின்விளைவே என்கிறார் கல்வியாளர் எஸ் எஸ் ராஜகோபாலன். பிபிசிக்கு அளித்த செவ்வி ஒன்றின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

0 Responses to பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின : நாமக்கல் பள்ளி மாணவர்கள் முதலிடம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com