ஆள்கடத்தலை முறியடிப்பதற்கு வங்காள விரிகுடா நாடுகள் தம்மிடையே புலனாய்வுத்துறையை பலப்படுத்த வேண்டும் என இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத முறியடிப்பு மற்றும் நாடு கடந்த குற்றச்செயல்கள் தொடர்பில் ஆராயும் செயற்குழு கூட்டம் நேற்று முன் தினம் கொழும்பில் தொடங்கியது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்,
இலங்கை கடந்த மூன்று தசாப்த காலங்களாக பயங்கரவாத நடவடிக்கைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. அத்துடன் போதை வஸ்து மற்றும் ஆட்கடத்தல் உள்ளிட்ட பிரச்சினைகளையும் இலங்கை அடிக்கடி சந்தித்து வந்தது.
இலங்கை மட்டுமின்றி வங்காள விரிகுடா பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளும் இதே பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வந்தனன். இவற்றை கட்டுப்படுத்துவதற்கு இந்த நாடுகளுக்கு இருக்க வேண்டிய மிகவும் முக்கியமான ஒன்று புலனாய்வாகும். புலனாய்வு சீராக இருப்பதற்கு பிராந்திய நாடுகளுக்கு இடையே தகவல் பரிஆற்றம் மிக அவசியம் ஆகும்.
எமது பிராந்தியத்தில் ஆள்கடத்தல் என்பது மிகவும் மோசமாகி வருகிறது. பொருளாதார காரணங்களை முன்வைத்து பிறந்த நாட்டிலிருந்து ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பா ஆகிய அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கு மக்கள் சட்டவிரோதமாக செல்ல முனைகின்றனர்.
இவர்களை ஆட்கடத்தல் செய்வோருக்கு இவ்வியாபாரம் ஒரு இலாபம் தரும் வர்த்தக நடவடிக்கை ஆகும். இவ்வாறு ஆள்கடத்தலில் ஈடுபடுவோர் சர்வதேச பயங்கரவாதம், போதை வஸ்து கடத்தலுடனும் தொடர்பு பட்டுள்ளனர். வேறு நாடுகளுக்கு இவ்வாறு சட்டவிரோதமாக செல்ல முனைபவர்கள் தமது சொத்துக்களை கூட கடத்தல் காரர்களிடம் அடமானம் வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே ஆட்கடத்தலை தடுப்பதற்கு பிராந்திய வலய நாடுகள் தமது புலனாய்வுத்துறையை பலப்படுத்துவதுடன், தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு கூட்டுறவினை மேற்கொள்வதன் மூலம் தமக்கிடையிலான இலக்குகளை இலகுவாக எட்டுவதில் வெற்றியடைய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 2009ம் ஆண்டு சிவில் யுத்தம் முடிவடைந்த போதும் ஆஸ்திரேலியா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இலங்கையிலிருந்து படகுகள், விமானங்கள் மூலம் சட்டவிரோதமாக தப்பிச்செல்லும் தமிழ் அகதிகளின் எண்ணிக்கை இன்னமும் குறைந்தபாடில்லை. இதில் கடந்த சில மாதங்களில் மாத்திரம் 1200க்கு அதிகமானோரை ஆஸ்திரேலியா இலங்கைக்கு திருப்பியனுப்பியுள்ளது.
யுத்தம் முடிவடைந்த போதும், தொடர்ந்து மனித உரிமைகள் மறுக்கப்படுதல், சமத்துவம், சுதந்திரம் இல்லாமை, வறுமை நிலை, எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகும் நிலை என்பவற்றால் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலிருந்து பெருமளவிலான தமிழர்கள் இன்னமும் வெளிநாடுகளுக்கு அதிகளாக செல்வதில் அக்கறை செலுத்தி வருகின்றனர்.
0 Responses to ஆள்கடத்தலை தடுக்க பிராந்திய நாடுகள் புலனாய்வு தகவல் பரிமாற்றத்தை பலப்படுத்த வேண்டும் : கோத்தபாய