சுவீடனின் தலைநகர் ஸ்டொக்ஹொல்ம் இற்கு மேற்கே உள்ள ஹுஸ்பி எனப்படும் குடியிருப்பில் சுமார் 11 000 வெளிநாட்டைச் சேர்ந்த முதல் மற்றும் இரண்டாவது தலைமுறை மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இங்கு உள்ள கட்டடம் ஒன்றினுள் தன்னை ஒரு பெண்ணுடன் உள்ளே பூட்டிக் கொண்ட 69 வயது முதியவரை மீட்கும் போது கத்தியால் அவர் போலிசாரைத் தாக்க முனைந்ததால் சுட்டுக் கொல்லப் பட்டார்.
இம் முதியவரின் மரணத்தைத் தடுத்திருக்கலாம் எனவும் இச்சம்பவம் போலிசாரின் அராஜகத்தையே குறிக்கிறது எனவும் கொதிப்படைந்த சுவீடன் மக்கள் ஞாயிற்றுக் கிழமை இரவு தொடக்கம் தொடர்ந்து மூன்று நாளாகப் பெரும் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் ஹுஸ்பியில் ஒன்று கூடிய 200 பொது மக்கள் கற்களை போலிசார் மீது வீசியும் வீதியில் நின்ற கார் வண்டிகளை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப் பட்டதுடன் 10 கார்களும் பல கன்டெயினர்களும் கொளுத்தப் பட்டன. போலிசாருடன் நிகழ்ந்த மோதலில் 7 போலிசார்கள் காயமடைந்தனர். இக்கலவரத்தில் 6 பேர் கைது செய்யப் பட்டு அவர்களில் இருவர் விசாரணைக்குப் பின் விடுவிக்கப் பட்டதாக போலிஸ் சார்பான பேச்சாளர் ஜோர்கென் கார்ல்ஸ்ஸொன் தெரிவித்தார். மேலும் ஃபிட்ஜா (Fittja) எனும் இன்னொரு நகரிலும் கலவரம் வெடித்ததுடன் பொதுச் சொத்துக்கள் நாசமாக்கப் பட்டதாகவும் இக்கலவரத்துக்கும் நடந்த சம்பவத்துக்கும் நிச்சயம் தொடர்பிருக்கலாம் எனவும் போலிஸ் தெரிவித்துள்ளது.
கொல்லப் பட்ட முதியவரின் தாய்நாடு எதுவெனத் தெரிவிக்க போலிசார் மறுத்து விட்டனர். இதேவேளை கலவரத்தை அடக்கும் போதும் போலிசார் லத்தியால் பெண்களை அடித்துத் துன்புறுத்தியதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.
0 Responses to போலிசாருக்கு எதிராக சுவீடனில் 3 ஆவது நாளாகத் தொடரும் கலவரம்