பாகிஸ்தான் சிறையிலுள்ள 51 இந்திய மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப் போவதாகப் பாகிஸ்தான் அரசு இன்று வெள்ளிக் கிழமை அறிவித்துள்ளது.
மேலும் இதற்குக் கைம்மாறாக இந்தியாவும் தனது சிறைகளில் உள்ள பாகிஸ்தான் கைதிகளை விடுவிக்கும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் இடைக்காலப் பிரதமர் மிர் ஹசார் கான் கோசோ இக்கூற்றினைத் தெரிவித்துள்ளார். எனினும் இவரின் கூற்றில் எப்போது இந்த மீனவர்கள் விடுவிக்கப் படுவார்கள் எனத் தெரிவிக்கப் படவில்லை. மேலும் இம்முடிவு உள்துறை சட்ட அமைச்சர் அஹ்மெர் பிளால் சூஃபி, சிந்த் முதல் அமைச்சர் ஷஹிட் குர்பான் அல்வி, மூத்த உள்துறை வெளிநாட்டு அதிகாரிகள் மற்றும் பிரதமரின் செயலாளர் ஆகியோர் பங்கு பற்றிய கூட்டம் ஒன்றில் எடுக்கப் பட்டதாகக் கூறப்படுகின்றது.
கோசோ மேலும் தெரிவிக்கையில் 482 இந்தியர்கள் பாகிஸ்தான் சிறைகளிலும் 496 பாகிஸ்தானியர்கள் இந்தியச் சிறைகளிலும் வசிப்பதாகக் குறிப்பிட்டார்.
இதேவேளை பாகிஸ்தான் அரசின் இந்த அதிரடி நடவடிக்கை அங்கு சிறையில் சக கைதிகளால் தாக்கப் பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிர் விட்ட இந்தியரான சரப்ஜித் சிங் மரணத்தினால் பாதிக்கப் பட்ட டெல்லி இஸ்லாமாபாத் உறவினை சீர் படுத்தும் ஒரு முயற்சியாக இது மேற்கொள்ளப் பட்டிருக்கலாம் எனக் கருதப் படுகின்றது.
0 Responses to நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் சிறையிலிருந்து 51 இந்திய மீனவர்களை விடுதலை செய்ய உத்தேசம்