பாஸ்டன் குண்டுவெடிப்பு சந்தேகநபர் ட்சார்னேவ் தான் இறுதியாக பதுங்கியிருந்த படகில் எழுதி வைத்திருந்த சில குறிப்புக்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அதில் பாஸ்டன் குண்டுவெடிப்பில் உயிரிழந்த பொதுமக்கள் தொடர்பில், 'இது ஒரு பக்கவிளைவு கொண்ட பாதிப்பு' என அவர் வர்ணித்துள்ளார். மேலும் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தனது சகோதரன் ஒரு தியாகி என கூறியுள்ளார்.
'ஒரு இஸ்லாமியனை தாக்கினால், அனைத்து இஸ்லாமியர்களையும் தாக்குகிறீர்கள்' என்றும் எழுதிவைத்துள்ளார். மேலும் அமெரிக்க இராணுவம், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கைகளுக்கு பழிவாங்கும் முகமாகவே இக்குண்டுவெடிப்பை நிகழ்த்தியுள்ளதாகவும் எழுதியுள்ளார்.
இதில் எழுதிவைத்த விடயமும், வைத்தியசாலையில் பொலிஸாருக்கு ட்சார்னேவ் கூறிய விடயங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை என நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவிக்கிறது.
கடந்த ஏப்ரல் 15ம் திகதி பாஸ்டன் மரதன் ஓட்டப்போட்டியில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் மூன்று பேர் கொல்லப்பட்டும், 264 பேர் காயமடைந்துமிருந்தனர். இது தொடர்பில் சந்தேக நபர்களாக ட்சார்னேவ் மற்றும் அவரது சகோதரரை தேடி பொலிஸார் வேட்டையில் இறங்கிய போது பொலிஸாருடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ட்சார்னேவின் சகோதரர் கொல்லப்பட்டிருந்தார். ட்சார்னேவ் படகு ஒன்றில் காயங்களுடன் பதுங்கியிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தார். தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்டால் மரணதண்டனை வழங்கப்பட வாய்ப்பிருக்கிறது.
0 Responses to 'ஆப்கான், ஈராக் மீதான அமெரிக்க தாக்குதலுக்கு பழிவாங்கவே பாஸ்டன் குண்டுவெடிப்பு?'