வன்முறையில் தொடர்ந்து பாமக ஈடுபடுமானால், அக்கட்சியை தடை செய்யவும் தமிழக அரசு தயங்காது என தமிழக முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக அறிவித்துள்ளார்.
ராமதாஸ் கைது செய்யப்பட்ட பிறகு பாமகவினரால் அரசு சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தி எதிர்க்கட்சியினர் கொண்டுவந்த கவனயீர்ப்பு தீர்மானம் மீது தமிழக முதல்வர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த சேதம் குறித்து கணக்கிடப்பட்டு பாமகவிடமிருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை சர்ச்சைக்குரிய மரக்காணம் பகுதிக்குள் நுழைய ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு தடை விதித்து விழுப்புரம் ஆளுனர் சம்பத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மரக்காணக் ஜாதிக்கலவரம் தொடர்பில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட பாமகவினர் கடந்த 30ம் திகதி கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். பின்னர் ஜாமினில் விடுதஜ்லை ஆனார்கள். இந்நிலையில் தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பியுள்ளதாக ஆட்சியர் அறிக்கை ஒன்றில் வெளியிட்டுள்ளார்.
மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் பொது அமைதியும், சமூக நல்லிணக்கத்தையும் நிலை நாட்டும் பொருட்டு ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் அனைத்து முன்னணி சங்கங்களில் தலைவர்கள் மற்றும் உறுப்பினர் ஆகியோர் மரக்காணம் மற்றும் அதன் தொடர்புடைய பிற பகுதிகள் அல்லது 30-4-13ம் தேதி முதல் பாமக சார்பில் போராட்டங்கள் நடைபெற்ற பகுதிகளில் நுழைய குற்றவியல் நடைமுறை சட்டம் 144-ன் கீழ் தடையாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
0 Responses to பாமகவை தடைசெய்ய தமிழக அரசு தயங்காது : தமிழக முதல்வர்