பிரதமர் மன்மோகன் சிங்கை அசாம் மாநிலத்திலிருந்து ராஜ்சபா எம்.பியாக மீண்டும் தேர்வு செய்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஆர்ப்பாட்டங்கள நடைபெற்றுள்ளன.
பிரதமர் மன்மோகன் சிங்கின் எம்.பி பதவிக்காலம் முடிவடைவதால் எதிர்வரும் மே 30ம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அவர் நேற்று அசாம் தலைநகர் குவஹாத்தியில் வேட்பு மனுவைத்தாக்கல் செய்தார். அவர் வேட்பு மனுத்தாக்கல் செய்வதை பத்திரிகையாளர்கள் படமெடுக்க அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பானது. பின்னர் மாநில முதல்வர் தருண் கோகாய் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தினார்.
இந்நிலையில், அசாம் மாநிலத்தில் பிரதமர் மன்மோகன் சிங் எம்.பியாக முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை எந்தவித பயனும் ஏற்படவில்லை என கூறி அசாம் அனைத்து மாணவர் ஒன்றியத்தின் சார்பில் குவஹாத்தி நகரில் போராட்டம் நடைபெற்றது. இதில் மன்மோகன் சிங்கை போன்று வேடமணிந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதே போன்று பாஜக, ஆம் ஆத்மி, சிபிஐ (எம்.எல்) கட்சிகளும் தனித்தனியே பிரதமர் மன்மோகன் சிங்கின் வேட்பு மனுவை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை, பிரதமர் தனது வேட்பு மனுத்தாக்கலின் போது தன்னிடம் 1996ம் ஆண்டு வாங்கிய பழைய மாருதி கார் ஒன்றைத்தவிர வேறு எந்த வித மிகப்பெறுமதியான சொத்துக்களும் தன்னிடம் இல்லை என விபரம் வெளியிட்டுள்ளார்.
வேட்புமனுவுடன் அளிக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பிலான உறுதிச்சான்றிதழில், தனது மொத்த ஆண்டு வருமானம் ரூ.40,51,964 என குறிப்பிட்டுள்ளார். மேலும் 5 பிக்சட் டெபாசிட் மற்றும் 3 சேமிப்பு கணக்குகளுடன் சேர்த்து தனக்கு இருக்கும் அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.3,87,63,188 என குறிப்பிட்டுள்ளார். சண்டிகரில் இருக்கும் வீடு மற்றும் டில்லியில் உள்ள அபார்ட்மெண்ட் ஆகிய அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.7,52,50,000 எனவும், ரூ.21,033 மதிப்புள்ள 1996 ம் ஆண்டு மாடல் மாருதி கார் தனக்கு சொந்தமாக இருப்பதாக கூறிய உள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்கின் மனைவி குர்சரண் கவுரிடம் ரூ.20,000 பணம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அவரிடம் ரூ.3,45,332 மதிப்புள்ள 150.8 கிராம் தங்கமும், வங்கி சேமிப்பு தொகையாக ரூ.16,62,570 ம் உள்ளதாக மன்மோகன் சிங்கின் சொத்து விபர கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Responses to எதிர்ப்புக்கு மத்தியில் அசாம் மாநிலத்தில் ராஜ்சபா எம்.பி பதவிக்கு பிரதமர் மன்மோகன் சிங் மீண்டும் வேட்பு மனுத்தாக்கல்