மே 18 தமிழினம் ஈவிரக்கமற்ற, மனதகுலத்திற்கு எதிரான சிங்களப்
பேரினவாதக் கொடூரக் கொலைவெறி கொண்ட இனவெறியர்களால் அழிக்கப்பட்ட நாள்.
முல்லைத்தீவு மற்றும் வடக்கில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் பல
ஆயிரக்கணக்கான மக்கள் உயிர்களையும் இழந்து உடமைகளையும் இழந்திருதார்கள்.
அதில் இருந்து முற்றுமுழுதாக மீள முடியாத நிலையில் இருந்த தமிழ் மக்கள்
மீது மீண்டும் பேரழிவை ஏற்படுத்தியிருந்தது சிங்களப் பேரினவாதம்.
தமிழினத்தின் வரலாற்றில் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை
மறக்கமுடியாத மிகப்பெரிய துயரச் சம்பவமாகக் கருதப்படுகிறது. இந்த மகா
இனவழிப்பில் ஈடுபட்டவர்களுக்கு இதுவரை சிறிய தண்டனை கூட வழங்கப்படவில்லை,
ஆனால் இனவழிப்பில் ஈடுபட்ட போர்க்குற்றவாளிகளைக் காப்பாற்றுவதில் கவனம்
செலுத்திறார்கள் சிங்களப் பேரினவாதத்தின் ஆதரவுச் சக்திகள்.
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் ஆயுதத்தைக் கீழே வைக்காமல், தமிழீழப்
போராட்டத்தை இறுதிவரை முன்னெடுத்தது தான் மிகப்பெரும் வரலாற்றுத் தவறு
என்று சென்றவருடம் கூறியிருந்தார் எரிக் சோல்ஹெயம். இவ்வாறான பரப்புரைகளை
இன்றுவரை சிலர் மேற்கொண்டு வருகிறார்கள்.
சிங்களப் படையினர் தமிழர்களின் பகுதிகளில் இருந்து வெளியேறினால்
புலிகள் தங்களின் ஆயுதங்களைக் கீழே வைக்கத் தயாராகத் தான் இருக்கிறோம்
என்று சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்ற போது சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள்
கூறினார். தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்காமலும், தமிழர் வாழும்
பிரதேசங்களில் இருந்து இராணுவத்தை அகற்றாமலும் இருந்து கொண்டு. தமிழர்கள்
தங்களின் ஆயுதங்களைக் கீழே வைத்து அவர்கள் சரண் அடைந்தும், சிங்களப்
பேரினவாதிகளின் காலில் விழுந்திருக்கவேண்டும், அப்படி அவர்கள் நடந்து
கொள்ளாமையினால் தான் தமிழர்களைச் சிங்களப் பேரினவாதிகள் அழிந்தார்கள் என்று
கூறுகிறார்கள் சிலர். ஹிட்லரின் இனவெறியினால் உண்டான போர் வெறியால்
மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளுக்கு யார் காரணம்? ஹிட்லருக்கு அடிபணிந்து
சரண் அடையாதவர்களா காரணம்?
தொண்டு நிறுவனங்களை அனுமதிக்காது, ஊடகங்களை அனுமதிக்காது இனவெறி கொண்ட
போர் வெறியில் இனவழிப்பை மேற்கொண்ட சிங்களப் பேரினவாதிகளின் செயலை
மனிதவுரிமைகளை மதிப்பவர்களும், மனிதநேயமுள்ள எவராலும் நியாயப்படுத்த
முடியாது. ஆனால் சிலர் இவற்றை நியாயப்படுத்திச் சிங்கள அரசின் மீதுள்ள
பழியையும் சர்வதேச சமூகத்தின் மீதுள்ள பழியையும் புலிகள் மீது போட்டு
சிங்களப் பேரினவாதிகளைக் காப்பாற்ற முனைகிறார்கள்.
தேசியத் தலைவர் ஆயுதத்தைக் கீழே வைத்து, சிங்களப் பேரினவாதிகளின்
காலில் விழாமல், தமிழீழப் போராட்டத்தை இறுதிவரை முன்னெடுத்தது தான்
மிகப்பெரும் வரலாற்றுத் தவறு என்று எரிக் சோல்ஹெயம் கூறியவாறு உலகில்
உண்மையில் மக்களின் சுதந்திரத்திற்காகப் போராடுபவர்களால் நடந்து
கொள்ளமுடியாது. அடிபணி இல்லையென்றால் எல்லோரையும் அழிப்பேன் என்ற
சர்வாதிகாரத்தை எவராலும் எற்றுக் கொள்ள முடியாது. அவ்வாறு தான் சிங்களப்
பேரினவாதிகள் நடந்து கொண்டார்கள். அதனைச் சிலர் ஏற்றுக் கொண்டு சிங்களப்
பேரினவாதத்தின் இனவழிப்பை நியாயப்படுத்திப் பரப்புரைகளில் ஈடுபடுகிறார்கள்.
இவ்வாறான பரப்புரைகளை முன்னெடுப்பவர்கள் ஹிட்லரின் கொள்கையை ஏற்றுக்
கொள்ளுகிறார்களா? அன்று மேற்கத்தேயர்கள் பல நாடுகளைக் கைப்பற்றி மக்களை
அடக்கி ஆண்டு வந்தார்கள், அவர்களிடமிருந்து மக்கள் போராடிச் சுதந்திரத்தைப்
பெற்றார்கள். அன்று அடக்கி ஆண்ட மேற்கத்தேயர்கள் சிங்களப் பேரினவாதிகளைப்
போன்று இனவழிப்பை மேற்கொள்ளவில்லை. மக்கள் அடக்கு முறையை எதிர்த்து
சுதந்திரத்திற்காகப் போராடும் உரிமையுள்ளது. அவர்களின் உரிமையை மறுத்து
அவர்களை அழிப்பதே மிகப்பெரிய குற்றமாகும். தன்னுடைய சிங்கள மக்கள், அல்லது
தன்னுடைய நாட்டு மக்கள் முள்ளிவாய்க்காலில் இருக்கிறார்கள் என்ற சிந்தனை
சிங்களப் பேரினவாதிகளிடம் இருந்திருந்தால் அங்கே மிகப்பெரிய இனவழிப்பு
நடைபெற்றிருக்குமா? சமாதானத்தின் ஊடாக தங்களின் உரிமையைப் பெற்றுவிடலாம்
என்று ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த தமிழினத்தின் மீது யுத்தநிறுத்த
ஒப்பந்தத்தை மீறிச் சிங்கள அரசு போர் தொடுத்து தமிழினத்தை அழித்தது. தனது
சுயநலத்திற்காக ஒரு பக்கச் சார்பான நிலையில் இருந்து கொண்டும்,
சிங்களத்தின் தலையாட்டிப் பொம்மையாகவும் இருந்து கொண்டும், தமிழின
அழிப்பிற்கு உதவியும் புரிந்து, இனவழிப்பை வேடிக்கை பார்த்தது சர்வதேச
சமூகம்.
ஹிட்லரை விடக் கொடியவர்கள் சிங்களப் பேரினவாதிகள் பல ஆண்டுகளாக
தமிழருக்கு உரிமை வழங்க மறுத்து வருபவர்கள், அப்படியானவர்களுக்கு அதிகமான
அழுத்தங்களைக் கொடுத்து தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டிய சர்வதேச
சமூகம் சிங்களப் பேரினவாதப் பொய்யர்களின் பொய்ப் பித்தலாட்டங்களுக்கு
தலையாட்டிப் பொம்மையாகச் செயல்பட்டுக் கொண்டு புலிகள் மீதே அதிக
அழுத்தங்களைக் கொடுத்து, இறுதியில் தமிழின அழிப்பிற்கு துணையாக நின்றது.
சர்வதேச சமூகம் இன்றுவரை தமிழ் மக்களுக்கு என்ன ஆக்கபூர்வமான நன்மைகளைச்
செய்தது? உண்மையில் சிங்களப் பேரினவாதிகளுக்கு மிகப்பெரிய நன்மைகளைச்
செய்து இன்னும் மிகமோசமான நிலமைக்குத் தமிழ் மக்களை சர்வதேச சமூகம் கொண்டு
சென்றுவிட்டது. இன்றுவரை தமிழ் மக்களின் மனிதவுரிமைகளுக்கும் அவர்களின்
குரல்களுக்கும் மதிப்பளிக்காமல் சிங்களப் பேரினவாதத்தின் பித்தலாட்டங்களை
நம்பிக் கொள்ளுகிறது சர்வதேச சமூகம். ஆனால் இவர்களைத் தமிழ் மக்களும்,
விடுதலைப் புலிகளும் நம்பினார்கள் அவர் நேர்மையுடன் தான் நடந்துகொள்வார்கள்
என்றும் இவர்கள் தங்களுக்கு நிரந்தர விடிவைப் பெற்றுத்தருவார்கள் என்றும்
நம்பினார்கள். ஆனால் உறவாடி முதுகில் குத்தினார்கள்.
அன்று புலிகளின் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் எழுதிய கவிதை
வரிதான் ஞாபகம் வருகிறது. இக்கவிதை புலிகளின் உள்ளக்குமுறல் மட்டுமல்ல
ஈழத்தமிழரின் உள்ளக்குமுறலும் தான்.
''ஏனடா எரிக்கிறாய் என்றோ,
ஏனடா அடிக்கிறாய் என்றோ
எவனடா கேட்டீர் அவனை?
அடியென அவனுக்குச்
சாட்டை கொடுத்தவனும்
சுடுவென தோட்டா கொடுத்தவனும்
தடையென எமக்குத்தானே விதிக்கின்றனர்.
என்ன கொடுமையடா இது!''
உண்மையில் சர்வதேச சமூகம் பயங்கரவாதத்தை எதிர்க்கும் சக்தியாக
இருந்திருந்தால் முதலில் அழிக்கப்படவேண்டியவர்கள் சிங்களப் பேரினவாதிகளே.
இவர்கள் அழிக்கப்படாவிட்டால் இலங்கையில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த
முடியாது என்ற உண்மையை உணர மறுக்கிறது சர்வதேச சமுகம்.
இன்று உயரிய இலட்சியத்திற்கான தமிழீழப் போராட்டத்தின் மீதும் அதனைத்
தோளில் சுமந்த தமிழீழத் தேசியத் தலைவர் மீதும் முள்ளிவாய்க்கால்
இனவழிப்பின் பழியைத் தூக்கிப் போடுவதற்கு சில கயவர்கள் முற்படுகிறார்கள்.
இது தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன் புதிய தமிழர் கண்ணோட்டம் என்ற இதழில்
வெளியாகிய கட்டுரையின் சில பகுதிகள் இவை.
ஒரு புரட்சியில் தோல்வி ஏற்படுவதுண்டு. அதனால் புரட்சி முடிந்து
போனதாகிவிடாது. தோற்றதனாலேயே புரட்சியின் நடவடிக்கைகள் அனைத்தும் தவறு
என்றும் ஆகிவிடாது.
பொலிவியாவில் சேகுவேரோவுக்குத் தோல்வி ஏற்பட்டது. பிடிபட்டார்.
பொலிவியப் படை அவரை ஒரு கிரிமினல் குற்றவாளிபோல் இழிவுபடுத்தித்தான்
சுட்டுக் கொன்றது.
பின்னர் இந்நிகழ்வு பற்றி செய்தியாளர்கள் பிடல் காஸ்ட்ரோவிடம்
“சேகுவேரா பெரிய தவறு செய்து விட்டார் அல்லவா” என்று கேட்டனர். அதனை
உடனடியாக மறுத்து காஸ்ட்ரோ கூறினார், “ஒரு நடவடிக்கை தோல்வியடைந்து
விட்டதாலேயே அதற்கான நோக்கம். முயற்சி, செயல்முறை அனைத்தும் தவறு என்ற
முடிவுக்கு வந்து விடக்கூடாது. கியூபப் புரட்சியில் கூட முதலில்
எங்களுக்குத் தோல்விகள் ஏற்பட்டன” என்றார்.
1905-இல் ரசியப்புரட்சி குருதி வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது. மீண்டும் புத்துயிர் பெற்று 1917-இல் அப்புரட்சி வெற்றி பெற்றது.
ஒரு தோல்வி வந்தவுடன், நடந்த அனைத்துமே தப்பாக நடந்து விட்டன என்று
பேசுவோர் இரு வகையினராகத்தான் இருப்பர். ஒரு வகையினர் சந்தர்ப்பவாதிகள்,
இன்னொரு வகையினர் எதிரியின் கையாட்கள். ஒரு தோல்வி குறித்துத் திறனாய்வு
செய்ய வேண்டாமா எனில், கட்டாயம் திறனாய்வு செய்யவேண்டும். அத்திறனாய்வுத்
தவறுகளைத் திருத்திக் கொண்டு அடுத்த பாய்ச்சலுக்கு செய்யப்படவேண்டும்.
புரட்சிக்கு எந்த வகையிலும் ஆதரவாகச் செயல்படாமல், வேடிக்கை
பார்த்தவர்கள் திறனாய்வு செய்யக்கூடாது. பகைவனின் பக்கச் சார்பாளர்கள்
திறனாய்வு செய்யக்கூடாது. அப்படிப்பட்ட ஆட்களின் திறனாய்வை தமிழீழ
விடுதலைப் புரட்சியின் ஆதரவாளர்கள் பொருட்படுத்தக் கூடாது, புறந்தள்ள
வேண்டும். இவ்வாறு அக்கட்டுரையில் உண்மைகள் எடுத்துரைக்கப்பட்டிருந்தன.
உங்களது கடமையையும், உங்களது சுமையையும் தனது உயிரிலும் மேலாகக்
கொண்டு அதனை இறுக்கிப் பிடித்துக்கொண்டார் தமிழீழத் தேசியத் தலைவர்,
இறுதிவரை அவர் இறுக்கிப் பிடித்துக்கொண்ட கொள்கைக்காகப் போராடினார். அவர்
போராடாமல் விட்டிருந்தால் சிங்களவன் தமிழனக்கு கோவணத்தைக் கூட விட்டு
வைக்காமல் அதனைக் கூட பிடித்து இழுத்து எடுத்திருப்பான். இன்று வடக்கில்
தேர்தலை நடத்துவதற்கு முன்னரே சிங்களவர்களைக் குடியேற்றி தமிழர்களை
வடக்கில் சிறுபான்மையானவர்களாக மாற்றுவதற்கு கொடிய சிங்களப் பேரினவாதிகள்
திட்டம் போட்டு செயல்படுத்துகிறார்கள். இது முள்ளிவாய்க்கால் போன்ற வேகமான
தமிழினச் சுத்திகரிப்பு நடவடிக்கைதான்.
ஹிட்லரின் நாஜிப் படையினர் யூதர்களுக்கு எதிரான இனப் படுகொலையை
நிகழ்த்தியது, ஆனால் நவின ஹிட்லரான மஹிந்த பயங்கரவாத அழிப்பு என்றும்,
மனிதாபிமான மீட்பு நடவடிக்கை என்ற போர்வையில் அவர் மேற்கொண்ட இனவழிப்பு
என்பது ஹிட்லரின் சிந்தனையை விழுத்தி அதனையும் மிஞ்சிவிட்டது மஹிந்தவின்
சிந்தனை. இது தான் சிங்களப் பேரினவாதிகள் கண்ட உண்மையான வெற்றி. இன்று
ஹிட்லர் உயிருடன் இருந்திருந்தால் அவருக்கு மஹிந்த எப்படி இனப்படுகொலையைப்
பயங்கரவாத அழிப்பு என்றும், மனிதாபிமான மீட்பு நடவடிக்கை என்ற போர்வையில்
மேற்கொள்ள வேண்டும் என்பதனைப் பற்றிய பாடங்களைக் ஹிட்லருக்கு சிறப்பாகக்
கற்றுக்கொடுத்திருப்பார்.
நம்புவோம். நாங்களும் யூதர்களைப் போன்றவர்களே சிங்களப் பேரினவாத
அடக்குமுறையில் இருந்தும் ஆக்கிரமிப்பிலிருந்து நாங்கள் மீளுவோம் என்று.
அதற்கு நமது இனப்படுகொலையை உலகம் அங்கீகரிக்க ஒன்று பட்டு உழைப்போம். நமது
உரிமைக்காகவும் அடக்கு முறைக்கு எதிராகவும் ஜனநாயக வழியிலும், ஆயுதம்
ஏந்தியும் போராடி அழித்து அடக்கப்பட்டு விட்டோம். இனி இவற்றுக்கு நீதி
கேட்டுப் போராட வேண்டிய மிகமுக்கியமான காலகட்டத்தில் நாம் நிற்கின்றோம்.
அதனை நாம் செய்யாவிட்டால் ஈழத்தமிழினத்திற்கு ஒருபோதும் விடிவு ஏற்படாது,
கடவுளால் கூட நமது இனத்தைக் காப்பாற்ற முடியாது. ஆகையால் முள்ளிவாய்க்கால்
இனப்படுகொலையினை பயன்படுத்தி ஈழத்தமிழர்களுக்கு நிரந்தர விடியலை ஏற்படுத்த
உலகத்தமிழினம் கடுமையாக உழைக்க வேண்டும். அமெரிக்காவும் சர்வதேச நாடுகளும்
சிங்கள அரசிற்கு எதிராகத் தொடர்ந்து தீர்மானம் கொண்டு வந்துகொண்டே
இருக்கும், இதனால் ஈழத்தமிழருக்கு நன்மைகள் விளைந்து கொண்டே இருக்கும் என்ற
முட்டாள்தனமான நம்பிக்கைகளை வைத்துக்கொண்டே தமிழர்கள் இருந்துவிடக்
கூடாது. சர்வதேச மட்டத்தில் உரிமைக்களுக்காகவும் அடக்குமுறைகளுக்கு
எதிராகவும் தமிழர்கள் மேற்கொள்ளுகின்றன முயற்சிகளை விடச் சிங்கள அரசு
அவற்றுக்கு எதிராக மேற்கொள்ளும் முயற்சிகளே மேலோங்கி நிற்கின்றன.
தமிழர்கள் ஒன்றிணைந்து ஈழத்தமிழரின் உரிமைக்காகப் போராட வேண்டும்
ஆனால் ஒன்றிணைவோம் என்ற அழைப்பும் அதன் செயல்பாடுகளும் தமிழரின் நலனுக்கு
எதிராகவும் எதிரிகளிடம் சரணடைவதற்கான செயல்பாடுகளாகவும்
இருந்துவிடக்கூடாது.
நாம் உறுதியாக சபதம் எடுக்க வேண்டிய தருணத்திலேயே இருக்கிறோம்.
சிங்களப் பேரினவாதத்தை நன்கு உணர்ந்து கொண்ட ஞானி எமது தேசிய தலைவர், அவர்
வழியில் சென்று நமது இனத்தின் விடுதலையைப் பெறுவதற்கு இந்நாளில்
உறுதிகொள்வோம். போராட்ட வடிவங்கள் மாறலாம், ஆனால் இலக்கு ஒன்றுதான் அது
தமிழீழம். அதனை தமிழர்கள் வென்றெடுக்காவிட்டால் ஈழத்தில் தமிழர்கள்
வாழ்ந்தார்கள் என்ற வரலாறு மட்டும் தான் இனி இருக்கும்.
தமிழினப் பெண்களை கொடூரமான முறையில் படுகொலை செய்து, அவர்களை
நிர்வாணமாக்கி, பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களின் மார்பில் தனது
கால்களை வைத்துப் புகைப்படங்களை எடுத்துக்கொண்ட சிங்களவனுக்கு தமிழர்கள்
சொல்லும் செய்தி என்ன? மறப்போம், மன்னிப்போம் என்பதா? அல்லது குற்றவாளிக்
கூண்டில் ஏற்றித் தூக்குக்கயிறுக்கு அனுப்புவோம் என்பதா? வலியைத்
தந்தவனிடமே திருப்பிக் கொடு என்பது நமது மறத்தமிழர் பிரபாகரன் அவர்களின்
வாக்கு.
விஸ்வா
0 Responses to முள்ளிவாய்க்காலும் தமிழீழப் போராட்டமும் - விஸ்வா