Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முள்ளிவாய்க்கால் பேரழிவு நிகழ்ந்து, நான்கு ஆண்டுகளை அண்மிக்கும் இம்மாதத்தில், அந்த அழிவில் பங்காளிகளாக இருந்த வல்லரசாளர்கள், வேறொரு மோதல் களத்தினை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் திறந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் நம்புகின்றனர்.

அந்தக் களம், கேரளாவின் திருவனந்தபுரத்திலிருந்து 200 மைல் தொலைவில் இருக்கும், 1191 தீவுக்கூட்டங்களை கொண்ட மாலைதீவாகும்.

அமெரிக்காவின் அணுவாயுதப் படைத்தளமான தியாகொர்காசியா, இந்தத் தீவிலிருந்து சற்றுத் தொலைவில்தான் இருக்கிறது. பிரித்தானியாவுடன் அமெரிக்கா செய்து கொண்ட உடன்பாடு, 2014 டிசம்பரில் காலாவதியாகிப் போவதால், மாலைதீவில் மாற்றுத் தளத்தை அமெரிக்கா தேடுகிறது என்கிற பார்வையும் உண்டு.

ஆனாலும் அமெரிக்காவின் 'ஆசியா-பசுபிக் சுழலச்சு' என்ற புதிய மூலோபாய திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாகவும் இந்த நகர்வு பார்க்கப்படுகிறது.

வரும் செடம்பரில் மாலைதீவில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்நாட்டிலுள்ள டிவெகி சிட்டீ (Dhivehi Sitee) என்கிற இணையம், அமெரிக்காவிற்கும் மாலைதீவிற்கும் இடையே முன்மொழியப்பட்ட ,வரைபு பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்த ஆவணத்தை (Status of Forces Agreement -SOFA) கசியவிட்டுள்ளது.

ஆனால் அப்படியானதொரு எண்ணம் தங்களுக்கில்லை என்று கூறினாலும், கசிந்துள்ள ஆவணம் போலியானதென்று அமெரிக்கா மறுக்கவில்லை.

இவ் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால், உலக ஆதிக்கத்தின் முக்கிய பிராந்தியமான இந்துமாகடல், மோதல் களமாக மாறும் என்கிறார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க.

இலங்கையில் இந்த வல்லரசுகளின் பனிப்போர் 80 களிலே ஆரம்பித்த கதையை அமைச்சர் மறந்துவிட்டார் போல் தெரிகிறது. இன்னமும் அது தொடர்ந்து கொண்டிருப்பதையிட்டு அதிகார வாசிகளுக்குக் கவலை இல்லை.

தென் ஆசியாவிலுள்ள பொருளாதார வளம் குறைந்த நாடுகள், வெளிநாட்டு நேரடி முதலீடு எங்கிருந்து வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் படைத்தவர்கள் என்பது பொதுவான உண்மை. இதில் மாலைதீவும் விதிவிலக்கல்ல.

இருப்பினும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு ஏற்படும் போட்டியில், வல்லரசுகள் மேற்கொள்ளும் காய் நகர்த்தல்கள், இரு அணிகளை உருவாக்கி விடும். அமெரிக்க சார்பு அணி, இந்திய சார்பு அணி என்கிற நிலைப்பாடுகளை அதிகாரப் போட்டியில் இறங்கும் அரசியல்வாதிகள் விரும்பி ஏற்றுக்கொள்வார்கள். இந்திய-சீன மற்றும் அமெரிக்க- சீன முரண்நிலைகளை கையாள்வதாகக் கற்பிதம் கொண்டு, ஏதோவொரு பலமான அணியைத் தேர்ந்தெடுப்பார்கள்.

இலங்கை போன்று மாலைதீவும், நீண்டகாலமாகவே இத்தகைய சீனா-இந்தியா-அமெரிக்கா இடையேயான ஆதிக்க முறுகல் நிலைக்குள் அகப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

இலங்கையில் போர் முடிவுற்று கடந்த நான்கு ஆண்டுகளில் பல மாற்றங்கள் பதிவாகியுள்ளன. பொருண்மிய ஆதிக்கத்திற்கான திரைமறைவு மோதல்கள் சீனாவிற்கும் இந்தியாவிற்குமிடையே தீவிரமடைவதையும் காண்கிறோம். பறிக்கப்படும் காணிகளை பங்கு போடுவதில் பன்னாட்டுக் கம்பனிகள் ஐந்து நட்சத்திர விடுதிகளில் அடிக்கடி கூடுவதையும் பார்க்கிறோம்.

ஆட்சி மாற்றமொன்றிக்கான அமெரிக்காவின் ஐ.நா.தீர்மானங்களும், இருக்கும் ஆட்சி சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விடக்கூடாதென்பதற்காக 'சீபா' ஒப்பந்தக் கனவோடு காத்திருக்கும் அண்டைநாடும்,
இயங்கமுடியாத நிறுவனங்களைக் கையேற்க தருணம் பார்க்கும் சீனாவும், திருமலைத் துறைமுகம் தம் வசமாகாதா என்று ஏங்கும் இவையனைத்தும், இலங்கையில் குவிக்கும் கவனத்தை மாலைதீவின் பக்கம் திருப்பியுள்ளது போல் தெரிகிறது.

இருதரப்போடு விளையாடும் மாலைதீவு குறித்து , இந்தியாவின் கவனம் எப்போதும் உண்டு.

ஆனாலும் இலங்கை, மாலைதீவு மற்றும் செசெல்ஸ் போன்ற சிறிய பிராந்திய நாடுகளுடன் ,கடல் கண்காணிப்பில் பாதுகாப்பு ஒத்துழைப்பு வழங்கும் இந்தியா, இந்த நாடுகளின் உட்கட்டுமான அபிவிருத்திப் பணிக்கான போதியளவு நிதி உதவியை வழங்க முடியாமல் இருக்கிறது. இந்த இடைவெளியை அல்லது இயலாத தன்மையையே சீனா பயன்படுத்துகிறது.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியா மேற்கொண்ட கடந்த காலத் தலையீடுகளை நோக்கினால், 1987 இல் அமைதிப்படையின் வருகை, 1988 ல், இரவல் படை மாலைதீவில் மேற்கொண்ட சதியினை முறியடிக்க வழங்கிய உதவி என்பன குறிப்பிடத்தக்கன.

பிரச்சினைகளை உருவாக்குவதும், பின்னர் அதனைத் தீர்க்க ஓடிச் செல்வது போல் நடிப்பதும், இந்த நவீன யுக சதித் தத்துவத்தின் ஒரு பரிமாணமாகவும் இருக்கிறது.

தற்போது, மத்தியில் நீர்த்தேக்கமுள்ள வட்ட வடிவிலான 26 பவழப்பாறைகளில் (atoll), கடற்கண்காணிப்பு ராடர் வலையமைப்பினை இந்தியா நிர்மாணித்துக் கொண்டிருக்கிறது.
தமது தேசிய-பிராந்திய நலனோடு உடன்படும் ஆட்சியாளர்கள், அண்டைய நாடுகளில் இருக்க வேண்டும் என்பதைத்தான் எந்த நாடும் விரும்பும். இலங்கையிலும், மாலைதீவிலும் இதையே இந்தியா எதிர்ப்பார்க்கிறது.

ஆனால் அண்மையில் மாலைதீவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால், இந்திய தேசம் விசனமடைந்தது என்பதனை மறுக்க முடியாது.

1965 இல் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் அடைந்த மாலைதீவில், முடியாட்சி போன்றதொரு எதேச்சாதிகார ஆட்சிதான் நடைபெற்றது.

அதிபர் மாமூன் கயூமின் 30 ஆண்டுகால ஆட்சி 2008 பொதுத்தேர்தலோடு முடிவிற்கு வருகிறது. அக்டோபரில் தேர்தல் நடைபெற்று, நவம்பரில் முஹமட் நசீட் புதிய அதிபர் பதவியை ஏற்கிறார்.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் அரச எதிர்ப்பாளர்களை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்ட, குற்றவியல் நீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல்லா முஹமட் அவர்களை, 2012 சனவரியில் கைது செய்கிறார் மாலைதீவின் வரலாற்றில் முதன் முறையாக சனநாயக ரீதியில் அதிபராகத் தெரிவானவர் என்று சொல்லப்படும் முகமட் நசீட்.

இதற்கு எதிராக பொலிசாரும் பொது மக்களும் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் எதிர்வினையாக ஆட்சி நிர்வாகம் சீர்குலைந்து, அதிபர் நசீட் பதவி விலகுகின்றார்.

இது ஆட்சிக்கவிழ்ப்பா அல்லது பதவி விலகலா என்கிற விவாதங்கள் நீடிக்கும் போது, நீதிமன்ற அழைப்பாணையையும், பயணத் தடையையும் மீறிய குற்றச்சாட்டினை முன்வைத்து, அவர் மீது பிடியாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது.
பின்னர் அவர் இந்தியத் தூதரகத்தில் அடைக்கலம் புகுந்து ,10 நாள் கழித்து வெளியே வந்தார்.

தற்போது ஆட்சியில் இருக்கும் முகமட் வாஹீட் , தனது அதிகாரத்தை பலப்படுத்தும் வகையில் இந்தியாவிற்கு எதிரான நகர்வொன்றினை மேற்கொண்டார்.

அதாவது, இந்தியாவின் பெங்களூரைத் தளமாகக் கொண்டியங்கும் GMR என்கிற நிறுவனம், முஹமட் நசீட் காலத்தில் செய்து கொண்ட மாலே விமானநிலைய நிர்வாக ஒப்பந்தத்தினை வகீட் ரத்து செய்தது விட்டார்.

511மில்லியன் டொலர் முதலீட்டில், புதுப்பிக்கக் கூடிய 10 வருட ஒப்பந்தத்தை ரத்து செய்த விவகாரம், தவறானது அல்ல என்கிற தீர்ப்பினை சிங்கப்பூர் உயர் நீதிமன்றமும் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் இதற்கான நஷ்ட ஈடாக $800 மில்லியன் வழங்கவேண்டுமென GMR நிறுவனமும், அது அதிகமான தொகை ,சரியான தொகை ஏறத்தாள $150-350 மில்லியனாக இருக்குமென்று மாலைதீவு அரசு கூறுகிறது.

இந்த விடயம் பாதுகாப்பு மற்றும் பொருண்மிய உறவில் இவ்விரு நாடுகளுக்கிடையே உரசலை உருவாகியுள்ளது.
இந்த நிலையிலேயே அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்த இரகசிய ஆவணமும் கசிந்துள்ளது.

ஆசியாவின் கடல்வழித் தலைவாசலில் நிலைகொண்டுள்ள மாலைதீவு மற்றும் இலங்கை போன்ற நாடுகளின் அமைவிடம் என்பது , அவை கேந்திர முக்கியத்துவம் மிக்க மையங்களாகவும், மையச் சுழல் அச்சாகவும் மாறிக்கொண்டிருக்கிறது என்பதனை சீனாவின் முத்துமாலைத் தந்திரோபாயங்கள் உட்பட, அமெரிக்கா -இந்தியா மேற்கொள்ளும் கடற்கண்காணிப்பு ராடர் நிர்மாணிப்புக்களும் உணர்த்துகின்றன.

வளம் குறைந்த சிறிய நாடுகளில், தமது பொருண்மிய மேலாதிக்க நலன்களுக்காக வல்லரசாளர்கள் மோதும் போக்கானது, அந்த நாடுகளின் வாழும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் தமது அடிப்படை உரிமைகளை வெகுவிரைவில் இழக்கும் சூழ்நிலையை உருவாக்கப் போகிறது.

 வடக்கில் அரசால் தீவிரமாக முன்னெடுக்கப்படும் நில அபகரிப்பிற்கு எதிராக குரல் எழுப்ப இவர்கள் மறுப்பது, இந்த யதார்த்தத்தை புரிய வைக்கிறது.

-இதயச்சந்திரன்

0 Responses to இந்து சமுத்திர பிராந்தியத்தில் மையச் சுழலச்சாக மாறும் மாலைதீவும், இலங்கையும்! - இதயச்சந்திரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com